நான் இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம், எல்லா தொலைக்காட்சி அலவரிசைகளும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இரத்தானதையும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதையும் அறிவித்துக்கொண்டிருக்கின்றன.'தேர்வுகள் இரத்து'
- இச்செய்தி ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு உற்சாகத்தையும் சோகத்தையும் தருகிறது.
இதுவரை எடுத்த மதிப்பெண்களே இதற்கும் என்பதால், ஏற்கனவே நல்ல மதிப்பெண் பெற்றவர்கள், தங்கள் பயம் மற்றும் கலக்கம் போய்விட்டதை எண்ணி உற்சாகம் அடைவார்கள்.
ஆனால், ஏற்கனவே குறைவான மதிப்பெண் எடுத்து, ஆண்டு இறுதியில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஓய்ந்திருந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு சோகத்தைத் தருகிறது.
உண்மையில் மாணவர்களுக்கு தேர்வு பயம் இருக்குமா?
தேர்வு பயம் யாருக்கும் இல்லை. தேர்வின் முடிவுகள் குறித்த பயம்தான் நமக்கு.
இப்போது இருக்கும் கொரோனாவைக் குறித்து நாம் பயப்படுகிறோம். ஆனால், பயம் இந்நோயைக் குறித்து அல்ல. மாறாக, நோய் ஏற்படுத்தும் விளைவைக் குறித்தே. இதைவிட பெரிய நோய்களோடு வாழப் பழகிவிட்டோம். ஏன்? அந்நோய்களுக்கு மருந்துகள் நமக்கு இருக்கின்றன.
ஆக, மாற்று தெரிவு இருக்கும்போது நமக்கு பயம் வருவதில்லை.
இருட்டு பயமாக இருக்கிறது. ஆனால், இருட்டிற்கு மாறான ஒளி இருக்கும்போது பயம் மறைந்துவிடுகிறது.
கடன் பயமாக இருக்கிறது. ஆனால், திடீரென்று கிடைத்த பணம் பயத்தைப் போக்கிவிடுகிறது.
ஆக, மாற்று நமக்குக் கிடைக்கும் வரைதான் பயம் நீடிக்கிறது.
தேர்வுக்கு என்ன மாற்று? அல்லது தேர்வின் முடிவுகளுக்கு என்ன மாற்று?
வாழ்வின் முடிவுகளும் தேர்வின் முடிவுகளும் ஒன்றாக இருப்பதில்லை என்பதை நம் எல்லாருக்கும் தெரியும். வாழ்க்கை தன் போக்கில், பூனை தன் குட்டியைப் பிடித்து தூக்கிச்செல்வது போல, தூக்கிக் கொண்டே திரிகிறது. 'எனக்கு அங்கு போக விருப்பமில்லை' என்று சொல்லவோ, அல்லது 'இப்போது வேண்டாம்' என்று சொல்லவோ பூனைக்குட்டிக்கு உரிமை இல்லை.
மாணவர்கள் இன்று தங்கள் தன்மதிப்பை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களை வைத்து நிர்ணயம் செய்வதுதான் ஆபத்து. மதிப்பெண் என்பது வெறும் எண்தான். அந்த எண்ணிற்கும் நம் தன்மதிப்பிற்கும் தொடர்பு இல்லை. எண்களையும் தாண்டி எண்ணங்களைப் பொருத்து அமைவதே வாழ்க்கை.
தேர்வு என்பதை நாம் கற்றலை அறிந்துகொள்ளும் ஒரு திறனாய்வு அளவீடு.
அளவீடு வேறு, ஆள் வேறு என்பதை அறிதல் நலம்.
வகுப்பறையில் உள்ள மாணவர்கள் மதிப்பெண்கள் பெறும் எந்திரங்கள் இல்லை என்பதை அறிந்து, மாணவர்களின் அறிதலில் கவனம் செலுத்துவதே ஆசிரியர்களின் பணி.