இன்றைய மாணவர் உலகத்தின் கூறுகளாக நாம் ஐந்தைக் குறிப்பிடலாம்.1. உலகம் தட்டையானது (The World is Flat)
நாம் படிக்கும்போது, 'உலகம் உருண்டையானது' என்று நமக்குச் சொல்லப்பட்டது. ஆனால், மாணவர்கள் வாழும் இன்றைய உலகம் 'தட்டையானது.' உருண்டையான உலகத்தில் ஒருவர் மேலிருப்பர், இன்னொருவர் கீழிருப்பார். ஆனால், தட்டையான உலகத்தில் எல்லாரும் ஒரே சமதளத்தில் நிற்க வேண்டும். எப்படிப்பட்டவராக ஒருவர் இருந்தாலும் அவர் ஒரே ஓடுகளத்தில் ஓட வேண்டும். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தது மின்னஞ்சல். மின்னஞ்சலில் நுழைய நமக்கு லாக்இன் ஐடியும் பாஸ்வேர்டும் வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். மின்னஞ்சலில் யார் நுழைய வேண்டுமானாலும் இந்த இரண்டையும் பெற்றிருக்க வேண்டும். ஆக, அனைவரும் சமம் என்ற நிலையில் வளர்கிறார்கள் இன்றைய மாணவர்கள். படியில் ஏற முடியாத மாணவர்கள் இன்று லிஃப்ட்டில் ஏறிச் செல்கிறார்களே தவிர, படியில் நின்று அண்ணாந்து பார்ப்பதில்லை.
2. யோசி - மாத்தி யோசி (Think - Think Different)
யோசனையும், சிந்தனையும், மாறுபட்ட சிந்தனையும்தான் உலகை வெல்லும் என்பது இன்றைய மாணவர்களின் கேடயம். யோசிக்க மறுப்பவர்கள் இன்னொருவரிடம் யாசிக்க வேண்டும் என்பதும் எதார்த்தம். 'இது ஏன் இப்படி இருக்கிறது!' என்று ஆச்சர்யப்பட்ட மாணவர்கள் மாறி, 'இது ஏன் இப்படி இருக்கக் கூடாது?' என்று மாற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
3. கண் சிமிட்டு நேரம் (Blink)
யோசித்தல் என்பது இன்றைய நாளில் உடனே முடிவெடுப்பது. கண் சிமிட்டு நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் இன்று. ஒரு கார் வாங்க நம் அப்பா சென்றால், முதலில் போய் விசாரிப்பார். பின் இரண்டு மூன்று ஷோரூம்கள் செல்வார். ஒரு நாள் ஓட்டிப் பார்ப்பார். இறுதியாக, முன்பதிவு செய்வார். ஆனால், இன்று, முதலில் முன்பதிவு. மற்றவை அப்புறம். காரில் பிரச்சனை என்றால் காரை மாற்றிக் கொள்ளலாம். இப்படி நிறைய சாய்ஸ். ஆக, கண் சிமிட்டும் நேரத்தில் முடிவெடுப்பவர்கள்தாம் இன்றைய உலகில் வாழ முடியும். அல்லது போட்டி போட்டு இன்னொருவர் அதை வாங்கிச் சென்றுவிடுவார்.
4. 24 மணி நேரம் 7 நாள் (24 x 7)
பகல் - இரவு என்ற பிளவும், வேலைநாள் - விடுமுறை என்ற வித்தியாசமும் இன்று மாறிவிட்டது. எல்லா நேரமும் பகல்தான், இரவுதான். எல்லா நாள்களும் வேலைநாள்கள், விடுமுறை நாள்கள்தாம். எந்நேரமும் எதையும் செய்யலாம். 24 மணி நேரங்கள் கற்றல், இயக்கம் என எல்லாம் மாறிவிட்டதால், நாடுகளுக்கு இடையேயான பிளவும் குறைந்துவிட்டது.
5. எனக்கு இப்போதே வேண்டும் (I Want It Now)
'வறுமையில் இருப்பவர்கள் அல்லவா பொறுமையைப் பற்றி பேச வேண்டும்' என்று காந்தா மோகனிடம் ரத்தக் கண்ணீர் திரைப்படத்தில் சொல்வார். இன்றைய உலகம் 'உடனடி உலகம்.' உடனடியாகப் பணம் வேண்டும், பொருள் வேண்டும், வெற்றி வேண்டும்.
மாணவர்களின் இந்த உலகத்தைப் புரிந்துகொள்தல் நலம்.