இன்று பள்ளிகளில் இருமொழி மற்றும் மும்மொழித் திட்டங்கள் வழக்கத்தில் உள்ளன: தமிழ்-ஆங்கிலம், அல்லது தமிழ்-ஆங்கிலம்-ஹிந்தி, அல்லது ஹிந்தி-ஆங்கிலம்-பிரெஞ்சு, அல்லது ஆங்கிலம்-பிரெஞ்சு-ஜெர்மன் போன்ற பாடத்திட்டங்கள் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.மொழிகளை எப்படிக் கற்பிப்பது (Languge Teaching) என்பதை இங்கே நாம் காண்போம்.
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த உளவியல் அறிஞர், மொழிக் கற்பித்தலில், 'சஜஸ்டோபேடியா' (Suggestopedia) என்ற ஒரு முறையை 1970களில் அறிமுகம் செய்தார். 'Suggesion' மற்றும் 'pedagogy' என்னும் இரு வார்த்தைகளிலிருந்து வரும் வார்த்தைதான் 'suggestopedia.' இன்று இது 'desuggestopedia' என்றும் அழைக்கப்படுகின்றது.
செய்முறை
மாணவர்களின் கற்றலில், கற்றலின் சூழலும் முக்கியத்துவம் வகிக்கிறது எனச் சொல்கிறது இந்த முறை. எப்படி? எடுத்துக்காட்டாக, ஆடுகளம் திரைப்படத்தில் வரும் 'யாத்தே யாத்தே' பாடலில் வரும் 'ஆங்கிலோ-இண்டியன் சர்ச்' காட்சி வரும்போதெல்லாம் எனக்கு, என் முதல் பங்குத் தளமாகிய எல்லீஸ் நகர் நினைவிற்கு வரும். ஆக, ஒன்றை நினைவிற்குக் கொண்டுவர நான் இன்னொன்றை - குறிப்பாக, ஓவியம் அல்லது இசையை நான் பயன்படுத்த முடியும். இந்த முறைப்படி, வகுப்பில் பாடம் கற்றுக்கொடுக்கப்படும்போது பின்புலத்தில் இசை ஓடிக்கொண்டிருக்கும். இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கும் மாணவர்கள் அவற்றோடு தாங்கள் கற்கும் மொழியை இணைத்துக்கொள்வர். அதே இசையை அவர்கள் எங்காவது கேட்டால் அவர்கள் கற்றது நினைவிற்கு வரும். அதுபோல, அவர்கள் கற்றதை நினைவிற்குக் கொண்டுவர, அவர்கள் அந்த நேரத்தில் கேட்ட இசையை நினைவிற்குக் கொண்டுவந்தால் போதும்.
இதுதான் இந்த முறையின் அடிப்படை. ஆனால், இதையும் கடந்து இதற்குச் சில வழிமுறைகள் உள்ளன:
இந்தக் கற்பித்தல் முறை நான்கு நிலைகளில் நடக்கிறது:
அ. புரிந்துகொள்தல். ஆசிரியர் ஒரு புதிய மொழியின் இலக்கணம் மற்றும் வார்த்தைப் பொருள்களை முன் வைப்பார். பாடப் புத்தகங்களில் ஒரு பக்கம் புதிய மொழியும், இன்னொரு பக்கம் மாணவரின் தாய்மொழியும் இருக்கும்.
ஆ. பாடல்கள் இசைத்தல். ஏதாவது ஒரு பாடலின் பின்புலத்தில் ஆசிரியர் அந்தப் பாடத்தைச் சத்தமாக வாசிப்பார். சில நேரங்களில் மாணவர்களும் ஆசிரியரோடு இணைந்து வாசிப்பர். ஆசிரியர் சில நேரங்களில் அமைதியாக இருக்க, இசையின் பின்புலத்தில் மாணவர்கள் தாங்கள் கேட்டதை நினைத்துப்பார்ப்பர்.
இ. விரித்துரைத்தல். மாணவர்கள் தாங்கள் கற்றதை பாடல் அல்லது நாடகமாக வெளிப்படுத்துவர்.
ஈ. மொழிக் கற்றல். அப்படியே தொடர்ந்து மாணவர்கள் புதிய மொழியில் பேசத் தொடங்குவர்.
ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள்:
இந்த முறையைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
அ. புதிய மொழியில் சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். அதாவது, எனக்கு ஆங்கிலத்தில் புலமை இருக்கிறது என நான் எப்போது சொல்ல முடியும்? அந்த மொழியில் நான் சிந்திக்கும்போதுதான். ஆனால், பல நேரங்களில் நாம் தமிழில் சிந்தித்து, பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறோம். எனக்கு இத்தாலியன் சொல்லிக் கொடுத்த ஜூலியா அடிக்கடி சொல்வாள்: 'நீ இத்தாலியன் மொழியில் கனவு காண வேண்டும். அப்போதுதான் நீ மொழி கற்றுள்ளாய் என்று பொருள்!'
ஆ. எல்லா மாணவர்களின் ஐயங்களையும் தீர்ப்பவராக இருக்க வேண்டும்.
இ. தன் மொழியாற்றலைப் பயன்படுத்தி பாடல்கள், நாடகங்கள், கதைகள் உருவாக்கத் தெரிபவராக இருக்க வேண்டும்.
ஈ. எல்லாவற்றுக்கும் மேலாக, 'உன்னால் முடியும்' என்ற நேர்முகமான '...' மாணவர்களுக்கு வழங்குபவராக இருக்க வேண்டும்.
இறுதியாக,
இந்த முறையைப் பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தாலும், இன்னும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மொழியியல் வகுப்புக்களில் இம்முறையே பயன்பாட்டில் இருக்கின்றது.