Thursday, June 11, 2020

குறைவும் நிறைவே

என்னைச் சந்தித்த ஒரு தாய் தன் மகளுக்கு அறிவுத்திறனில் குறைபாடு உள்ளது எனவும், அவளுக்காக செபிக்குமாறும் கேட்டுக்கொண்டாள். அறிவுத்திறன் குறைபாடு, நினைவுத்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு, உடல் வளர்ச்சி குறைபாடு என பல குழந்தைகளை நாம் பார்க்கின்றோம்.

ப்ராய்டு அவர்களின் கருத்துப்படி, நாம் அனைவருமே மனவளர்ச்சி குன்றியவர்களே! அளவுதான் ஒவ்வொரு ஆளுக்கும் மாறுபடும்!

மாணவர்களின் குறைவை ஆசிரியர்கள் சரியான விதத்தில் எதிர்கொள்தல் அவசியம்.

தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் தன்னுடைய இறுதி நாள்களில் தன் தாயின் அறையைச் சுத்தம் செய்யும்போது அதில் ஒரு கடிதத்தைக் கண்டுபிடிக்கிறார். அதில், 'உங்கள் மகன் ஒன்றுக்கும் உதவாதவன். அவன் அறிவுத்திறன் குறைவுடையவன். அவனுக்கு நாங்கள் சொல்வது புரிவதில்லை. தயவு செய்து அவனை உங்கள் இல்லத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள்' என அவருடைய தொடக்கக் கல்வி வகுப்பாசிரியர் எழுதிய கடிதத்தைக் கண்டுபிடிக்கிறார். ஆனால், அந்தக் கடிதத்தைத் தாயிடம் கொண்டு வந்து கொடுத்தபோது, அந்தத் தாய், 'உங்கள் மகன் வெகு எளிதாக எதையும் கற்றுக்கொள்கிறான். அவனுடைய அறிவுத்திறனோடு யாரும் போட்டி போட முடியாது. நாங்கள் சொல்லித் தராததையும் அவன் கற்றுக்கொள்கிறான். அவனை உங்கள் இல்லத்திலேயே நீங்கள் பயிற்றுவித்தால் அவன் இன்னும் பலவற்றைக் கற்றுக்கொள்வான்' என்று அவருக்கு வாசித்துக் காட்டியதை நினைவுபடுத்துகிறார்.

ஆக, தன்னுடைய குறையை தான் அறியாத வண்ணம் மறைத்து, அதை நிறைவாக மாற்றிய பெருமை எடிசனின் தாயைச் சாரும் (She is Nancy Elliot Edison, in Photo).

அவள் தன் மகன் என்பதால் அப்படிப் பார்த்தாள்.

அவ்வாறே, ஆசிரியர்களும் தங்களுடைய மகன் அல்லது மகள் என்று பார்க்கும்போது, குறைவிலும் நிறைவு காண்பர்.

ஆனால், உண்மை இதுதான்.

என் வகுப்பில் அவன் மாணவன்.

அவனுடைய வீட்டில் அவன் மகன்.

அவன் அங்கே மகன் என்றால், இங்கே எனக்கும் மகனாக இருக்கலாமே! ஏன் மாணவனாக இருக்க வேண்டும்?