Friday, June 5, 2020

கற்றுக் கொடுங்கள்

தன் மகனை பள்ளியில் சேர்த்த அன்று ஆபிரகாம் லிங்கன் அவர்கள் தன்னுடைய மகனின் ஆசிரியர் அல்லது ஆசிரியைக்கு எழுதிய கடிதம் என்ற ஒரு பாடம் புத்தகங்களிலும் சமூக வலைதளங்களிலும் காணக்கிடக்கிறது. இந்தக் கடிதம் உண்மையல்ல என்று மறுப்பவர்களும் உண்டு. இந்தக் கடிதம் லிங்கன் அவர்களால் எழுதப்பட்டதா, அல்லது எழுதப்படவில்லையா என்பது அல்ல கேள்வி. ஆனால், இந்தக் கடிதத்தில் ஓர் ஆசிரியர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன.

'என் மகன் இன்று பள்ளியைத் தொடங்குகிறான். அவனுக்கு இது தொடக்கத்தில் விநோதமாகவும் புதிதாகவும் இருக்கும். ஆக, அவனைக் கனிவோடு கையாளுங்கள். கண்டங்களைக் கடந்து செல்வது அவனுக்கு வீரதீரச் செயலாக இருக்கும். அச்செயல்களில் வன்மமும், வன்முறையும், கவலையும் இருக்கும். ஆனால், இந்த வாழ்க்கையை வாழ அவனுக்கு நம்பிக்கையும், அன்பும், துணிவும் தேவை.

ஆகவே, அன்பிற்கினிய ஆசிரியரே, அவனுடைய கரத்தைக் கனிவாய்ப் பிடித்து, அவன் கற்க வேண்டிய அனைத்தையும் உங்களால் இயன்றவரை அவனுக்குக் கற்றுக்கொடுப்பீர்களா? ஒவ்வொரு பகைவனுக்கும் ஒவ்வொரு நண்பன் இருக்கிறான் என்று அவனுக்குக் கற்பியுங்கள். எல்லா மனிதர்களும் நீதியானவர்கள் அல்லர் என்றும், எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்லர் என்றும் அவன் அறிந்துகொள்ளட்டும். ஆனால், ஒவ்வொரு வில்லனுக்கும் ஒரு ஹீரோ உண்டு என்றும், ஒவ்வொரு மோசமான அரசியல்வாதிக்கும் அர்ப்பணிப்புள்ள தலைவன் உண்டும என்றும் அவனுக்குக் கற்பியுங்கள்.

கீழே கிடந்த ஒரு டாலரை விட உழைத்துப் பெற்ற பத்து சென்ட்கள் மேலானவை என அவனுக்கு உணர்த்துங்கள். பள்ளியில் ஏமாற்றுவதை விட தோற்றுப்போவது மேல் என அவன் கற்கட்டும். தோற்கும் அனைத்திலும் கலக்கம் அடையாமல் இருக்கவும், வெற்றி பெறும் அனைத்திலும் மகிழ்ச்சியோடு இருக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

கனிவோடு இருப்பவர்களிடம் கனிவோடு இருக்குமாறும், கரடுமுரடாக இருப்பவர்களிடம் கரடுமுரடாக இருக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் தன் முகத்தைத் திருப்பவும், அந்த நேரத்தில் அமைதியாகப் புன்னகை செய்யவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். கவலையாக இருக்கும்போது சிரிக்கக் கற்றுக்கொடுங்கள். அழுவதற்கு வெட்கப்படத் தேவையில்லை என அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். தோல்வியிலும் மாட்சி இருக்கும், வெற்றியிலும் விரக்தி இருக்கும் என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அவனைச் சீண்டுபவர்களை அவன் உதறித் தள்ள அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

புத்தகங்கள் தாங்கும் ஆச்சர்யங்களை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அதே வேளையில், வானத்துப் பறவைகள் பறக்கும் ஆச்சர்யத்தையும், தேனீக்களின் ரீங்காரத்தையும், பசுமையான மலையில் பூத்திருக்கும் மலர்களின் ஆச்சர்யங்களையும் அவன் அறியட்டும். எல்லாரும் தவறு என்று சொன்னாலும் அவனுடைய எண்ணங்களில் அவன் உறுதியான நம்பிக்கை கொள்ள அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

எல்லாரையும் போல கூட்டத்தை அவன் பின்பற்ற வேண்டாம். அனைவருக்கும் அவன் செவிசாய்க்கட்டும். ஆனால், நல்லவற்றையும் உண்மையானவற்றையும் மட்டும் எடுத்துக்கொள்ளட்டும்.

தன்னுடைய திறன்களையும் மூளையையும் நிறைய விலைக்கு அவன் விற்கட்டும். ஆனால், இதயத்தையும் ஆன்மாவையும் அவன் விலை பேச வேண்டாம். பொறுமையற்று இருப்பதற்கான துணிவையும், துணிவோடு இருப்பதற்கான பொறுமையையும் அவன் கற்றுக்கொள்ளட்டும். தன்மேல் அவனுக்கு நிறைய நம்பிக்கை இருக்கட்டும். அப்போதுதான் பிறர்மேலும், கடவுள்மேலும் அவனுக்கு நம்பிக்கை வரும்.

இது என் அன்பான கட்டளை. உங்களால் முடிந்தவரை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அவன் நல்ல பையன். அவன் என் மகன்.'

நிற்க.

இன்று, பாடங்களை யார் வேண்டுமானலும் கற்பிக்கலாம். ஆனால், விழுமியங்களைக் கற்பிக்க உங்களால் மட்டும்தான் முடியும்.