Wednesday, June 10, 2020

மற்றவரின் ஞானம்

ஆங்கிலத்தில் இந்த முறைமையை 'Wisdom From Another' என்று அழைக்கின்றனர்.

குழு விவாதத்திலோ, அல்லது தனிநபர் தெளிவிலோ ஒருவர் பெற்ற கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், மற்றவர்கள் அப்படிப் பகிரும்போது அவற்றுக்குச் செவிகொடுப்பதுமே 'மற்றவரின் ஞானம்.'

இதன் உள்ளடக்கம் என்ன? 

நாம் எல்லாரும் ஏதோ ஒன்றைப் பற்றித் தெரிந்தவர்கள். நம்முடைய அறிவில் கூடுதல், குறைவு இருக்கலாமே தவிர, எல்லாரும் எல்லாத் துறையிலும் அறிவாளிகள் அல்ல, எல்லாரும் எல்லாத் துறையிலும் முட்டாள்களும் அல்ல. எடுத்துக்காட்டாக, இதய அறுவைச் சிகிச்சையில் கைதேர்ந்த ஒரு மருத்துவர், தன் புலத்தில் திறமை பெற்றவராக இருக்கலாம். ஆனால், அவருக்கு வாகனம் ஓட்டத் தெரியாது. வாகனம் ஓட்டத் தெரிந்த ஒருவரின் அறிவை தனக்குப் பயன்படுத்திக்கொள்கின்றார். வாகனம் ஓட்டும் அந்நபருக்கு இதயத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் அங்கே மருத்துவரின் அறிவு பயன்படுகின்றது. ஆக, அறிவு இன்னொரு அறிவைச் சமன் செய்கிறது அல்லது நிரப்புகிறது.

வகுப்பறையில், ஆசிரியர் அனைத்தையும் அறிந்தவர் அல்லர். மாணவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்லர். இருவரும் வேறு வேறு நிலைகளில் அறிதல் கொண்டிருக்கின்றனர். இந்த அறிதலை மற்றவருக்கு வழங்கி, மற்றவரின் குறைவை நிரப்புகின்றனர்.

இந்தப் பயிற்சியால் மாணவர்கள் பெறுவன எவை?

அ. தன்நம்பிக்கை

'கான்ஃபிடன்ஸ் லெவல்' நம் வாழ்வில் மிக முக்கியம். இது அறிவாலும், அனுபவத்தாலும் நமக்கு வரும். மற்றவர்கள் முன் நான் ஒன்றைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டுமெனில், முதலில் அதை நான் அறிந்துகொள்ளும்போது, என் மேல் எனக்கு நம்பிக்கையும், மற்றவர்களைவிட நான் அதிகம் கற்றுள்ளேன் என்ற நேர்முகமான பெருமித உணர்வும் என்னுள் எழுகிறது. ஆக, மாணவர்கள் தன்நம்பிக்கையில் வளர இப்பயிற்சி முதலில் உதவும்.

ஆ. துணிச்சல் அல்லது பயமின்மை

சில மாணவர்கள் நிறைய விடயங்களைத் தெரிந்து வைத்திருப்பர். ஆனால், அவர்களால் குழுவில் அல்லது வகுப்பறையில் துணிவுடன் பகிர இயலாது. மற்றவர்களைப் பற்றிய பயம் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட மாணவர்கள் துணிச்சலில் வளர இந்த முறைமை பயன்படும்.

இ. செவிகொடுத்தல் அல்லது கவனித்தல்

இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன் மனிதர்களின் கவனிக்கும் திறன் நாற்பது நிமிடங்களுக்கு இருந்தன. ஆனால், இப்போது உள்ள தலைமுறையின் கவனிக்கும் திறன் வெறும் பதினொரு நிமிடங்கள்தாம் என்கின்றன ஆய்வுகள். நாளுக்கு நாள் நாம் கவனிக்கும் திறனையும், செவிகொடுக்கும் திறனையும் இழக்கிறோம். காரணம், நம் மன அழுத்தம், கவனச் சிதறல்கள், பரபரப்பு போன்றவை. மேலும், அடுத்தவனுக்கு நான் செவிகொடுக்க வேண்டுமா? அவன் சொல்வதைக் கேட்க வேண்டுமா? என்ற கேள்விகளும் நம்மில் எழும்பி சில நேரங்களில் நம் காதுகளை அடைத்துவிடும். மாணவர்கள் இம்முறைமையில் மற்றவர்களுக்குக் கவனமுடன் செவிகொடுக்கும் திறனில் வளர்வர்.