தகவல் மற்றும் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டில் நாளுக்கு நாள் நாம் புதிய அடிகளை எடுத்து வைத்து முன்னேறிக்கொண்டே இருக்கிறோம். வங்கிகள் வாடிக்கையாளர்களின் உள்ளங்கைகளில் இருக்கும் மொபைல்களையே தங்கள் கிளைகளாக மாற்றிக்கொண்டன. எல்லாமே ஒரு டச் தொலைவில்தான் என்ற நிலையில் உலகம் சுருங்கிவிட்டது. குறிப்பாக, ஒருவர் மற்றவரைத் தொடுதல் தவிர்க்கப்பட வேண்டிய கோவித்-19 காலத்தில், தொடுதிரை வழியாக நாம் ஒருவர் மற்றவரைத் தொட்டுக்கொள்ள நம்மையே பழக்கப்படுத்தி வருகின்றோம்.இன்று கற்றல் தளங்களில் அதிகமாக 'மொபைல் லேர்னிங்' (Mobile Learning) அல்லது 'எம்-லேர்னிங்' (M-Learning) பேசப்படுகின்றது.
கற்றல் தரவுகளை தனிநபரின் சட்டைப் பைக்குள் அள்ளித் திணிப்பதே இக்கற்றலின் நோக்கம். எழுத்து, படம், இசை, ஒலிப்பதிவு, காணொளி என ஏதாவது ஒரு வடிவில் பாடத்தின் தரவுகளைச் சுருக்கி, பயனரின், மாணவரின் மொபைலுக்குள் திணித்துவிடுகின்றது இம்முறை.
பிங்க்வார்ட் என்பவர், 'மொபைல் கற்றல் என்பது மொபைல் சாதனங்கள் வழியாக மற்றும் கம்பியில்லாத் தொடர்பு வழியாகக் கற்றல்' என்றும், குய்ன் என்பவர், 'மொபைல் சாதனங்கள் வழியாகவும், இணைய தளங்கள் வழியாகவும், ஒருவர் மற்றவரோடு உரையாடியோ அல்லது உரையாடாமலோ நிகழும் கற்றல்' என இதை வரையறுக்கின்றனர்.
மொபைல் கற்றல் பெருகக் காரணங்கள் எவை?
1. பயன்பாட்டுத்தன்மை (Usability)
இவ்வகைக் கற்றலில் பயன்பாடு எளிதாக இருக்கிறது. நிறையப் புத்தகங்களைச் சுமக்கவோ, நிறைய நோட்டுக்களை வாங்கவோ தேவையில்லை. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இவற்றைக் கொண்டு படிக்க முடியும். மேலும், சில பைட்டுகளில் பெரிய புத்தகங்களைச் சேமிக்கவும், எடுத்துப் படிக்கவும் இயல்வதால் புத்தகங்கள் நம் வீட்டின் இடத்தை அடைக்காது.
2. செயல்பாட்டுத்தன்மை (Functionality)
இவை உடனடியாகவும் விரைவாகவும் செயல்படும் தன்மை கொண்டவை. எனக்குத் தேவையான ஒரு புத்தகத்தைக் காண நான் நாளை காலை நூலகம் திறக்கும்வரை காத்திருக்கத் தேவையில்லை. உடனே நான் தரவிறக்கம் செய்து நான் விரும்பும் புத்தகத்தைப் படிக்க முடியும். மேலும், இதற்கான பொருள்செலவும் குறைவு.
3. தனிநபர் உரிமை (Privacy)
ஒவ்வொருவரும் தனித்தனியே தன்னுடைய ஆசிரியரோடு இணைக்கப்படுகிறார். ஆக, மாணவர்கள் யாரோடும் வீணாகப் போட்டியிடவோ, ஒப்பீடு செய்துகொள்ளவோ அவசியமில்லை. என் படிப்பு எனக்கும் என் ஆசிரியருக்கும் மட்டுமே தெரியும்.
கற்றுக்கொடுத்தலுக்கு இவை எவ்வகையில் பயன்படுகின்றன?
1. கற்றலில் நெகிழ்வுத்தன்மை (Flexibility)
ஒரு நாளுக்கு இத்தனை மணி நேரங்கள், இவ்வளவு நிமிடங்கள், இங்கே இருக்க வேண்டும், அங்கே இருக்க வேண்டும் என்ற வரையறை இங்கே கிடையாது. 100 பக்கங்கள் உள்ள பாடப்புத்தகத்தை நான் ஒரே நாளிலும், அல்லது 10 மாதங்களிலும் என் வேகத்திற்கு ஏற்றாற்போல படிக்க முடியும்.
2. கூட்டுக் கற்றல் (Collaborative Learning)
மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி மொபைலில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் மெய்நிகர் முறையில் உரையாடவும், தகவல் பரிமாற்றம் செய்யவும் முடியும். மேலும், தங்களுடைய கற்றலை இணையரோடு அமர்ந்தும் கற்க முடியும். மேலும், மாணவர்-ஆசிரியர் கூட்டுத்தளமாக இத்தளம் அமையும்.
3. கலவைக் கற்றல் (Blended Learning)
மாணவர்கள் தங்கள் மொபைலோடும், மொபைல் வழியாக ஒருவர் மற்றவரோடும் உரையாட முடிவதால், அவர்களுடைய கற்றல் பல முறைகளின் கூட்டாக இருக்கிறது.
4. தொடர்புக் கற்றல் (Interactive Learning)
மாணவர்கள் தங்கள் ஐயங்களை ஆசிரியர்கள் அல்லது மற்ற மாணவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற இயலும்.
முறையின் பின்னடைவுகள் எவை?
- இக்கற்றல் முறையில் தனிமனித பொறுப்புணர்வும், சுதந்திரமும் மிக முக்கியம் என்பதால், இவ்வகைக் கற்றல் மேற்கல்வி முறையில்தான் இன்று அதிகமாக பரிந்துரைக்கப்படுகின்றது. பள்ளி மாணவர்களுக்கு இதை அறிமுகப்படுத்துமுன் நிறைய பயிற்சிகள் அவசியம்.
- சில கிராமங்களில் இணைய வசதி சிறப்பாக இருக்காது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களால் திறன்பேசிகள் வாங்க இயலாது. இந்த மாதிரியான சூழல்கள் இக்கற்றல்முறை பயனளிக்காது.
- சில மாணவர்களுக்கு உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளையும் இது உருவாக்கிவிடும். வெளிச்சமான திரையை அதிக நேரம் பார்ப்பதால் கண் பிரச்சினை, சோர்வு, கழுத்து வலி போன்றவையும், மேலும் எந்நேரமும் படிக்கலாம் என்ற நிலையில் தூக்கமின்மையும், உடல்பருமனும், ஹார்மோன்கள் மற்றும் செரிமானப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.