Friday, June 26, 2020

சிக்கல்மையக் கற்றல்

ஆங்கிலத்தில் இந்த முறையை 'Problem-Based Learning'' (PBL) என்று அழைக்கிறார்கள். 'Problem' என்பதை 'பிரச்சினை,' 'பிறழ்வு,' 'புதிர்,' 'இடர்ப்பாடு,' 'தொல்லை,' 'இக்கட்டு' என நிறைய வார்த்தைகளில் மொழிபெயர்த்தாலும், கற்றலைப் பொருத்தவரையில், 'சிக்கல்' என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

கணிதப் பாடத்தில் 'சிக்கல்' என்பது நாம் எட்ட வேண்டிய தீர்வாக இருக்கலாம். ஆங்கிலப் பாடத்தில் 'சிக்கல்' என்பது நாம் கற்க வேண்டிய வார்த்தைகளும் அவற்றின் உச்சரிப்புக்களாகவும் இருக்கலாம். அறிவியில் பாடத்தில் 'சிக்கல்' என்பது நாம் ஆய்ந்து கண்டறிய வேண்டிய ஒரு முடிவாக இருக்கலாம். இப்படியாக, பாடத்திற்குப் பாடம், 'சிக்கல்' வித்தியாசப்படுகிறது.

'சிக்கல்மையக் கற்றல்' மாணவர்களை மையப்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உள்ள சிக்கலை மாணவர்களிடம் கொடுத்து அவர்களை சிறுசிறு குழுக்களாகவோ அல்லது தனித்தனியாகவோ பிரித்தனுப்பி, தீர்வு காணத் தூண்டும் முறைதான் இக்கற்றல் அல்து கற்பிலத்தல் முறை.

இம்முறையின் பயன்கள் எவை?

நில்சன் என்ற கல்வியியலாளர் இம்முறையின் பயன்களாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிடுகின்றார்:

1. மாணவர்கள் குழுக்களில் வேலை செய்யப் பழகுவர்.

2. தலைமைத்துவப் பயிற்சி பெறுவர்.

3. இம்முறையில் எழுத்து மற்றும் வாய்மொழிப் பயிற்சி கிடைக்கும்.

4. குழும செய்முறை பற்றிய தன்னறிவு பிறக்கும்.

5. சுதந்திரமாகக் கற்க முடியும்.

6. ஒருவர் மற்றவரது கற்றலை ஒப்பிட்டு திறனாய்வு செய்ய முடியும்.

7. மிகப்பெரிய கருதுகோள்களையும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

8. தன்முனைப்புக் கற்றலை ஊக்குவிக்கும்.

9. படித்ததைத் தன் வாழ்வியல் எதார்த்தங்களோடு பொருத்திப் பார்க்க உதவும்.

10. மற்ற புலங்களோடு தன்னுடைய பாடத்தை இணைக்க முடியும்.

எப்படிச் செய்வது?

முதலில் பாடம் நடத்திவிட்டு, அதற்குப் பின் சிக்கல் அல்லது கேள்வி அல்லது புதிரைத் தருவதைவிட, முதலிலேயே மாணவர்களிடம் அதைக் கொடுத்துவிட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஆங்கிலப் பாடல் ஒன்றை நடத்துகிறேன் என வைத்துக்கொள்வோம். முதலில் பாடலை நடத்தி, அதற்கு விளக்கம் சொல்லிவிட்டு, இறுதியாக, 'இந்தப் பாடலில் வரும் கதைமாந்தர்கள் யார்?' 'இப்பாடலின் மையச் செய்தி எது?' எனக் கேள்விகள் கொடுப்பதற்குப் பதிலாக, பாடலையும் கொடுத்து கேள்விகளையும் கொடுத்துவிட வேண்டும். மாணவர்கள் தாங்களாகவே விடைகளைக் கண்டறியத் தொடங்குவர். தெரியாத வார்த்தைகள் மற்றும் சொல்லாடல்களுக்கு ஆசிரியரின் விளக்கத்தை நாடுவர்.

மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?

மாணவர்கள் அந்தப் பாடத்தைப் பற்றிய முன்னறிவு கொண்டிருக்க வேண்டும். நான் எபிரேய வகுப்பிற்குச் செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். போன முதல்நாளே விவிலியத்தின் ஒரு பக்கத்தைக் கொடுத்து, 'இதை மொழிபெயருங்கள்!' என்று சொல்வது மடைமை. எபிரேய எழுத்துக்களை மாணவர்கள் முதலில் தெரிந்திருக்க வேண்டும். வார்த்தைகளுக்கு விளக்கம் காண அவர்களுக்கு அகராதிகள் கைவசம் இருக்க வேண்டும். ஆக, முன்னறிவு எதுவும் இல்லாமல் சிக்கலைத் தீர்க்க அவர்களை வற்புறுத்தினால் அது சோர்வையும், விரக்தியையும், நேர விரயத்தையும் ஏற்படுத்தும்.

மாணவர்களின் பயன்பாடும் உறுதிசெய்யப்பட வேண்டும். அவர்கள் ஒரு சிக்கலைத் தீர்ப்பதால் அவர்கள் என்ன அறிந்துகொள்வார்கள் என்பதை முன்கூட்டியே ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

மாணவர்கள் சிக்கலைத் தீர்க்க வேண்டும். பின் தங்கள் குழுக்களில் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

கற்றலில் எப்படிப் பயன்படுத்துவது?

எடுத்துக்காட்டாக, 'கொரோனா' என்று மட்டும் முதல் வகுப்பில் மாணவர்களிடம் சொல்ல வேண்டும். முதல் வாரத்தில், 'கொரோனா என்றால் என்ன?' என்பதை மாணவர்கள் கண்டறிவர். பின், 'அதை எப்படித் தடுப்பது?' என்ற ஒரு வீதிநாடகத்தையோ அல்லது பாடலையோ உருவாக்குவர். பின், கொரோனா பற்றிய தரவுகளைச் சேகரிப்பர். இறுதியாக, எழுத்து வடிவில் அவர்கள் அதைச் சமர்ப்பிப்பர்.