Saturday, June 6, 2020

மாணவர்களைக் கொண்டாடுங்கள்

மாணவர்களுக்கு ஒரு பாடம் பிடிக்கவில்லை என்றால், அதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் பிடிக்கவில்லை என்று பொருள். அல்லது, ஓர் ஆசிரியரை மாணவருக்குப் பிடித்தால் அவர் எடுக்கும் பாடமும் மாணவருக்குப் பிடிக்கும்.

மாணவருக்கு பிடித்த மாதிரி எப்படி இருப்பது?

மாணவர்கள் சொல்படி கேட்பதா? அல்லது வகுப்பு எடுக்காமல் மாணவர்களோடு அரட்டை அடிப்பதா? அல்லது வகுப்புக்கு வராமல் இருப்பதா? அல்லது தேர்வுக்கு முன் விடைத்தாள்களை அவர்களுக்குக் கொடுப்பதா? அல்லது தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்குவதா? அல்லது படிக்காவிட்டாலும் மதிப்பெண் வழங்குவதா?

இல்லை.

இவை மேலோட்டமான முறையில்தான் அவர்களை ஆசிரியர்களோடு இணைக்கும்.

இதையும் தாண்டி ஒன்று உண்டு. அதுதான், மாணவர்களைக் கொண்டாடுவது.

மாணவர்களைக் கொண்டாடிய ஓர் ஆசிரியரை நான் உரோமையில் விவிலியத்தில் முதுகலை பட்டம் படிக்கும்போது பெறும் பாக்கியம் கிடைத்தது. அவருடைய பெயர் அருள்திரு. அந்தோனி ஃபோர்த்தே. அவர் ஓர் இத்தாலிய-அமெரிக்கர். சேசுசபை அருள்பணியாளர்.

நான், என் நண்பன் ஜெகன் மற்றும் இன்னொரு நண்பர் என்டகே (கென்யா நாட்டுக்காரர்) மூவரும் முதல் வரிசையில் ஒன்றாக அமர்ந்திருப்போம். 'எழுபதின்மர் விவிலியத்தின் கிரேக்கம்' - இதுதான் அவர் எடுத்த பாடம். ஆண்டு முழுவதும் அவருடைய வகுப்பு இருந்தது. வாரத்திற்கு இரண்டு நாள்கள். மதிய வேளை.

அவர் சரியாகப் பாடம் நடத்த மாட்டார் எனவும், சரியாக மதிப்பெண் வழங்க மாட்டார் எனவும் என்னுடைய சீனியர் என்னை எச்சரித்து, அவருடைய பாடத்தை தெரிவு செய்ய வேண்டாம் என வற்புறுத்தினார்கள். ஆனாலும், நான் தெரிவு செய்தேன்.

முதல் வரிசையில் அமர்ந்து, கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றாலும், சிரித்துக் கொண்டே இருக்கும் என்னை அவருக்கு மிகவும் பிடித்தது. 'ஃப்ரதெல்லோ' ('சகோதரா') என வாஞ்சையோடு அழைப்பார். அவர் நிற வேற்றுமை பாராட்ட மாட்டார். சில பேராசிரியர்கள் நிற வேற்றுமை பாராட்டுவார்கள். மட்டம் தட்டிப் பேசுவார்கள். ஆனால், இவர் அப்படி இல்லை. இதுதான் என்னை முதலில் கவர்ந்தது.

இரண்டாவதாக, மாணவர்களை உரிமை கொண்டாடினார். ஒவ்வொரு வார இறுதியிலும், அல்லது விடுமுறை நாள்களிலும் இத்தாலிக்கு புதிதாக வந்த மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வார். நடந்தேதான் செல்ல வேண்டும். ஆனால், அருகருகே உள்ள இடங்கள்தாம். டிக்கெட், ஐஸ்க்ரீம், காஃபி அவர் பார்த்துக்கௌ;வார். இறுதி வகுப்பு அன்று பீட்சா கடைக்கு அழைத்துச் செல்வார். வகுப்பின் இறுதிநாள் சென்றோம். நான் அவருக்கு அருகில் அமர்ந்தேன். சாப்பிட்டு முடித்தவுடன் பில் ஏறக்குறைய 600 யூரோ வந்தது (49000 ரூபாய்). பில்லைப் பார்த்த அடுத்த நொடி தன் கார்டை எடுத்து வெயிட்டரிடம் கொடுத்தார். பி;ல்லைக் கிழித்து எறிந்துவிட்டு, எங்களோடு இரயில் நிலையத்திற்கு வழி நடந்தார். அவர் ஏன் இப்படிச் செலவிட வேண்டும்? என்று நான் அடுத்த நாள் அவரிடமே கேட்டேன். அவர் சொன்னார், 'நான் வகுப்பில் சொல்லிக் கொடுத்ததைவிட, இந்தச் செயலை நீங்கள் எப்போதும் மனத்தில் வைத்திருப்பீர்கள். அதற்காகத்தான்! நான் வகுப்பறையில் நிற்கும் ஒரு கரும்பலகை அல்ல! நீங்கள் அமர்ந்திருக்கும் மேசைகள் அல்ல! நாம் மனிதர்கள். உணவு நம்மை இணைக்கும்!'

அவ்வளவுதான்.

இதுதான் அவர் எங்கள்மேல் கொண்டாடிய உரிமை.

இதற்காக, மாணவர்களை எல்லாம் கடைக்குக் கூட்டிப்போக வேண்டும் என்பதல்ல. மாறாக, அவர்களோடு நம் உடனிருப்பை ஏதோ ஒரு வகையில் காட்ட வேண்டும்.

அமெரிக்காவில் இணைப் பேராசிரியர் பணிக்கு நான் விண்ணப்பிக்க நேர்;ந்தபோது, பரிந்துரைக் கடிதம் வழங்க உடனே முன்வந்தார். இன்றும் தொடர்கிறது எங்கள் நெருக்கம்.

உரிமை கொண்டாடுதல் என்பது உறவு கொண்டாடுதலே.