தன்முனைப்புக் கற்றல் என்பதை ஆங்கிலத்தில் எஸ்.டி.எல், Self-Directed Learning (SDL) என்று அழைக்கின்றனர்.இதன் பொருள் என்ன?
வாழ்வின் வெற்றியாளர்கள் என்று நாம் கருதுகின்ற பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சுக்கெர்பெர்க் போன்றவர்கள் பள்ளி அல்லது கல்லூரிக் கல்வியை நிறைவு செய்யாதவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் கற்றலை ஒருபோதும் முடித்துக்கொள்ளவே இல்லை. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி? அதுதான் தன்முனைப்புக் கற்றல். அதாவது, தனக்கு எது தேவை என்பதை அறிந்து, அதைக் கற்று, கற்றதன் வழி நிற்றல் அல்லது அந்த அறிவைப் பயன்படுத்துதல். இன்று தன்முனைப்புக் கற்றலுக்கு நிறைய நூல்களும், காணொளிகளும், இணைய தளங்களும் உதவி செய்கின்றன.
இதே தன்முனைப்புக் கற்றலை நாம் வகுப்பறையில் ஒரு கற்பித்தல் முறையாகப் பயன்படுத்தலாம்.
எப்படி?
நான் ஒரு புவியியில் ஆசிரியை என வைத்துக்கொள்வோம். இந்தியாவின் நிலப்பரப்பு என்பது பொதுவான அலகு. இந்த அலகை நான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களே தங்கள் கற்றல் முறையை வடிவமைத்துக்கொள்ளுமாறு சொல்வேன். அப்படிச் செய்யும்போது, ஒரு மாணவர் இந்தியாவின் நிலப்பரப்பு பற்றிய ஒரு கல்வியியல் இணையதளத்தை உருவாக்கலாம், அல்லது ஒரு வலைப்பூவை உருவாக்கலாம். இன்னொருவர் நிலப்பரப்பு பற்றிய ஒரு வரைபடத்தை உருவாக்கலாம். இன்னொருவர் இந்த நிலப்பரப்பில் பயணம் செய்த ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தை எடுத்துப் படிக்கலாம். இன்னொருவர் இந்த நிலப்பரப்பில் வாழும் மனிதர்களைப் பற்றிப் படிக்கலாம். ஆக, நிலப்பரப்பு என்னும் பாடம் ஒன்றுதான். ஆனால், அதை ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய இரசனைக்கு ஏற்றவாறு அணுகுகிறார்.
இதன் பயன்கள் எவை?
- மாணவர்கள் தாங்களே கற்றல் முறையைத் தெரிவு செய்வதால் கற்றலில் ஆர்வம் காட்டுவர்.
- மாணவர்களின் தனித்தன்மையை இது ஊக்குவிக்கும்.
- மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்துவர்.
- ஒரு மாணவரின் கற்றல் இன்னொரு மாணவருக்கு புதிய பொருளைக் கொடுக்கும்.
- ஒரே பாடத்தைப் பற்றிய நிறையக் கண்ணோட்டங்கள் கிடைக்கும்.
- மாணவர்களின் கற்றலுக்கு இம்முறை சுதந்திரத்தைக் கொடுக்கும்.
- இவ்வகை அறிவு வெறும் மூளைசார்ந்ததாக இல்லாமல் செயல்சார்ந்ததாக இருக்கும்.
- இந்தப் பாடம் வாழ்வு தொடர்புடையதாக இருப்பதால், இதன் வழியாக மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் தேடுகின்ற தொழில் அறிவைப் பெற்றுக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, ஃபோட்டோ எடுக்கும் ஆர்வம் உடைய மாணவி, அந்தத் திறமையை இதன் வழியாக வளர்த்துக்கொள்வார்.
இதை எப்படிச் செயல்படுத்துவது?
அ. பொறுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
ஒவ்வொரு மாணவரும் தன் கற்றலுக்கும், தன் வாழ்க்கைக்கும், தன் தெரிவுகளுக்கும் தானே பொறுப்பு என்பதை உணருமாறு ஆசிரியர் அவர்களைத் தூண்டி எழுப்ப வேண்டும். பல தெரிவுகளைப் பற்றியும், படிப்பதன் பல கோணங்களைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆ. குட்டி குட்டி இலக்குகளை நிர்ணயித்து அதை அடையக் கற்றுக் கொடுக்க வேண்டும்
இந்தியாவின் நிலப்பரப்பு பற்றிய ஒரு ஃபோட்டோ ஆல்பம் உருவாக்க ஒரு மாணவி ஆர்வம் காட்டுகிறார் என்றால், முதலில் அவர் ஒரு கேமரா வாங்க வேண்டும். ஆக, கேமரா வாங்குதல் முதல் இலக்கு. இடங்களுக்குப் பயணம் செய்தல் இரண்டாவது இலக்கு. படம் எடுத்தல் மூன்றாவது இலக்கு. இப்படி ஒவ்வொரு இலக்கையும் நிர்ணயித்து, அந்த இலக்கை ஒவ்வொன்றாக அடைய மாணவிக்கு ஆசிரியை உதவ வேண்டும்.
இ. நேரம் எடுத்தல்
நாம் எதற்கு நம் நேரத்தைக் கொடுக்கிறோமோ அது வளரும், எதற்கு நேரத்தைக் கொடுக்கவில்லையோ அது தேயும். மாணவர்கள் தங்களுடைய தன்முனைப்புக் கற்றலுக்குப் போதுமான நேரத்தை செலவழிக்கிறார்களா என்றும், அந்த நேரத்தை பயன்படுத்தி அந்தந்த நாளின் இலக்குகளை அடைகிறார்களா என்பதையும் ஆசிரியர் மேற்பார்வையிட வேண்டும்.
ஈ. முதன்மையானதை முதன்மையானதாகச் செய்ய வேண்டும்
மாணவர்கள் தங்கள் கற்றலில் முதன்மைகளை நெறிப்படுத்திக்கொள்ளவும், அந்த முதன்மைகளைச் சரியாக வைத்துக்கொள்தலும் வேண்டும்.
உ. தன்னூக்கம் (self-motivation)
மாணவர்கள் தன்னூக்கம் கொண்டிருத்தலை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர் மேற்பார்வை செய்தால்தான் மாணவர் படிப்பார் என்றால் இந்த முறை தோல்வியில் முடியும். மாறாக, ஒவ்வொரு மாணவரு; தன்னூக்கத்தோடு தன் கடமைகளைச் சரியாகச் செய்தால் கற்றல் இனிதாகும்.
இக்கற்றலின் நான்கு படிகள் எவை?
அ. மாணவர்களின் தயார்நிலையை ஆய்வு செய்து உறுதி செய்வது
தயார்நிலையில் இல்லாத மாணவர்கள் நேரத்தை வீணடிப்பர். மேலும், மாணவர்களின் தயார்நிலையோடு இணைந்து, அக்கற்றலைச் செய்வதற்கான கருவிகளும் வசதிகளும் இருக்கிறதா என்பதை ஆசிரியர் உதவி செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் நிலப்பரப்பு பற்றியை வலைதளத்தை உருவாக்க விழையும் மாணவருக்குத் தேவையான கணிணி, இணைய வசதி, மற்றும் மென்பொருள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
ஆ. கற்றல் இலக்குகளை நிர்ணயித்தல்
என்ன படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், எவ்வளவு நாள்களில் படிக்க வேண்டும், எப்போது ஆசிரியரைச் சந்திக்க வேண்டும், எப்படி கற்றல் திறனாய்வு செய்யப்படும் என எல்லாவற்றையும் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், இவ்வகைக் கற்றலில் தடைகள் ஏற்படின் அவற்றைச் சரிசெய்வதற்கான ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, நிலப்பரப்பை ஃபோட்டோ எடுக்கச் செல்லும் மாணவியோடு யார் உடன் செல்வார் என நிர்ணயிப்பது.
இ. ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரே
இந்தக் கற்றல் முறையில் ஒவ்வொரு மாணவரும் ஓர் ஆசிரியர் என்பதால் அவருக்குரிய பொறுப்புக்களை வரையறுத்து, அவற்றை அவர் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
ஈ. கற்றலைத் திறனாய்வு செய்வது
நாள், வார, மாத இறுதியில் திறனாய்வு செய்து, மாணவர்களின் வளர்ச்சியைக் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தைவிட அதிக நேரம் எடுப்பதுபோல தெரிந்தால் மாற்று ஏற்பாடுகளை வரையறுக்க வேண்டும்.