ஊடாடும் கற்றலில் (Interactive Learning) நாம் பயன்படுத்தும் இன்னொரு முறைமையை இங்கே காண்போம். இந்த முறைமையின் பெயர் 'கருத்து வரைபடம்.' ஆங்கிலத்தில், Concept Mapping.இதன் உட்பொருள் மிக எளிது: 'எலுமிச்சை ஜூஸ் பிழியத் தெரிந்த ஒருவரால் சாத்துக்குடி ஜூஸ் பிடிய முடியும்' அவ்வளவுதான். தன் வாழ்வில் இதுவரை சாத்துக்குடி ஜூஸே ஒருவர் பிழிந்ததில்லை என வைத்துக்கொள்வோம். அவரிடம் சாத்துக்குடி பழங்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து அவர் எப்படி ஜூஸ் தயாரிக்கிறார். தான் எலுமிச்சை ஜூஸ் செய்யத் தெரிந்திருக்கின்ற அறிவிலிருந்து அதை நீட்டிக் கொள்கிறார் அவ்வளவுதான். சிறிய எலுமிச்சைக்குப் பதில் பெரிய சாத்துக்குடி. கையில் பிழிவதற்குப் பதில் பிளாஸ்டிக் திருகு.
ஆக, ஏற்கனவே பெற்ற ஒரு அறிவைக் கொண்டு நம் அறிவை நீட்டிப்பதற்குப் பெயர்தான் கருத்து வரைபடம். இதை நாம் அறியாமல் செய்கிறோம்.
எப்படி?
எவர் சில்வர் தட்டில் சாப்பிட்டுப் பழகிய ஒருவருக்கு பீங்கான் தட்டு கொடுக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். 'பீங்கான் தட்டில் எப்படி சாப்பிடுவது?' என்று அவர் நம்மிடம் கேட்பாரா? அல்லது பீங்கான் தட்டைப் குப்புறக் கவிழ்த்து அதன்மேல் சோறு போட்டு சாப்பிடுவாரா? இல்லை.
நம் மனம் - அதாவது மூளை - ஏற்கனவே உள்ள தன் அறிவோடு பொருத்தி, அதே அறிவை நீட்டிக்கொள்கின்றது. ஆக, இப்போது அந்த நபருக்கு இரண்டு ஜூஸ் போடத் தெரியும், இரண்டு தட்டுக்களில் சாப்பிடத் தெரியும்.
நாம் பயன்படுத்தும் அலைபேசியும் அப்படித்தான். செயல்திறன் அலைபேசி பயன்படுத்துவது எப்படி? என்று கற்க நாம் எங்காவது கல்லூரிக்குச் சென்றோமோ? அல்லது அதற்கு முன் அலைபேசி கற்றுக்கொள்ள பள்ளிக்குச் சென்றோமோ? நம் மூளை தானாகவே புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளும் திறன் உடையது.
இதை நாம் கற்றலிலும் பயன்படுத்த வேண்டும்:
இதில் ஆசிரியரின் பங்கு என்ன?
கட்டிடம் கட்டும்போது, ஒரு தூண் (pillar) எழுப்ப வேண்டுமென்றால், முதலில் கம்பியை நிறுத்தி, அதைச் சுற்றி வட்டம் அல்லது சதுர வடிவில் மரப் பலகைகள் அல்லது இரும்புப் பலகைகள் அடைப்பர். ஆசிரியர்கள் இக்கற்றல் முறையில் கம்பியை எழுப்புவர், மரம் அல்லது இரும்புப் பலகைகள் அடைப்பர். மாணவர்கள்தாம், அதனுள் ஊற்றப்படுகின்ற கலவையாக இருப்பர். அவர்களின் எண்ண ஓட்டங்களும் பகிர்வுகளும்தான் மணலும், ஜல்லியும், சிமெண்டும், தண்ணீரும். தூண் தயாரானவுடன் பலகைகள் அகற்றப்படும். எந்த வீடுகளிலும் பலகைகள் அப்படியே விடப்படுவதில்லை.
இக்கற்றல் முறையில், ஓர் ஆசிரியர், நடுவில் வைக்கப்படுகின்ற இரும்புக் கம்பி போன்ற ஒரு முக்கியக் கருத்தைச் சொல்லிவிட்டு, நிறைய விதங்களில் சிந்திக்குமாறு பலகைகளை அடைக்க வேண்டும். பின் மாணவர்கள் வௌ;வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டும். அவர்களின் எண்ண ஓட்டங்கள் கரும்பலகையில் பதிவு செய்யப்பட வேண்டும். இங்கே, ஒருவர் தருகின்ற தகவல் மற்றொருவருக்கு இன்னொரு தகவலை நினைவூட்டும். இப்படியே நிறைய தகவல்கள் கிடைக்கும். நிறையக் கற்றல் நடைபெறும்.
எடுத்துக்காட்டாக,
'கொரோனா என்னும் கொடிய தொற்று நோய்' - இதுதான் ஆசிரியர் வைக்க வேண்டிய மையச் சிந்தனை.
'அது ஒரு நோய்'
'அது ஒரு அரசியல்'
'அது ஓர் உயிரியல் போர்'
'அது கடவுளின் சாபம்'
'அது நமது தன்னலச் செயல்களின் விளைவு'
இப்படி நிறையக் கருத்துக்கள் எழும். ஒவ்வொரு கருத்தும் வேறு வேறு தளங்களில் சிந்தனையை இட்டுச் செல்லும். வகுப்பின் இறுதியில் மாணவர்கள் மேற்காணும் எல்லாப் புரிதல்களையும் பெற்றுக்கொள்வர்.
கருத்து வரைபடம் என்னும் இம்முறைமையின் பயன்கள் எவை?
1. பார்த்துக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் எது எதோடு பொருந்துகிறது என்பதை நேரிடையாகக் கண்டுகொள்வர்.
2. ஒரு கருத்திற்கும், யோசனைக்கும், சொல்பவருக்கும் உள்ள தொடர்பை மாணவர்கள் அறிவர்.
3. வலது மற்றும் இடது என மூளையின் முழுமையும் செயல்படும்.
4. தனக்குத் தெரிந்த ஒன்றை நினைவுகூரும் வாய்ப்பை அளிக்கும்.
5. கருத்துக்களைக் கோர்வையாகப் பதிவு செய்ய, வரையறுக்கக் கற்றுத்தரும்.
6. புதிய திறனறிவை வளர்த்துக்கொள்ள உதவும்.
7. படைப்பாற்றல் வளரும்.
8. மாணவர்கள் தங்களுடைய முற்சார்பு எண்ணங்களை கேள்விக்குட்படுத்த துணைபுரியும்.
9. தவறான கருத்துக்களைக் களைய உதவும்.
கருத்து வரைபடத்தின் மாதிரியை தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக்கவும்: