Saturday, June 6, 2020

சுவரெழுத்து பலகை

ஆங்கிலத்தில் இந்த முறைமையை 'Graffiti Board' என அழைப்பார்கள்.

சுவர்களில் எழுதுவது அசுத்தம் என்று நம் சிறுவயதில் நமக்குச் சொல்லிக் கொடுத்தனர். 'சுவற்றில் கிறுக்காதே,' 'நோட்டிஸ் ஒட்டாதே!' 'வர்ணம் தீட்டாதே!' 'தடை செய்யப்பட்ட சுவர்!' என பொதுவான சுவர்களில் நிறைய எழுத நாம் பார்த்திருப்போம். தமுக்கத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் பூங்காவில் பாரதியார் பற்றிய பல ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இன்று கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் சாலைகளிலும் சாலை ஓரங்களிலும் நிறைய வரையப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் நிற்கும் இரயில்களில், இரயில் நிலையச் சுவர்களில், கிராஃபித்தி எனப்படும் சுவரோவியங்கள் அல்லது சுவரெழுத்துக்கள் நிறைய இருக்கும். இவற்றால் நிறைய புரட்சிகளும் நடந்துள்ளன.

இந்தச் சுவரெழுத்து முறையை நாம் வகுப்பறையிலும் பயன்படுத்தி புரட்சி செய்யலாம்.

'சுவரெழுத்து பலகை' என்பது கரும்பலகை, அல்லது வெண்பலகை, அல்லது பெரிய தாள். இதை வகுப்பறையின் நான்கு இடங்களில் ஒட்டிவைத்துவிட வேண்டும். ஒவ்வொரு பலகையிலும் ஒரு கேள்வி அல்லது ஒரு கருத்துரு இருக்க வேண்டும். மாணவர்கள் ஒவ்வொரு பலகையாக நகர்ந்து தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்வார்கள். இறுதியில், எழுதப்பட்டவை பற்றி விவாதம் செய்யப்படும். ஒரு புதிய பாடத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, மாணவர்களின் முன்னறிவைச் சோதித்தறிய இம்முறையை நாம் பயன்படுத்தலாம். மேலும், ஒரு ப்ராஜக்ட் செய்வதற்குமுன்னும் மாணவர்களை இப்படித் தயாரிக்கலாம்.

எப்படிச் செய்வது?

1. தேவையான இடம் அல்லது வெளியை ஒதுக்குவது

மாணவர்கள் எளிதாக நகர்ந்து செல்லும் வண்ணம் இடத்தை ஒதுக்கி, கரும்பலகை அல்லது தாளை சுவற்றில் ஒட்ட வேண்டும். தேவையான எழுதுபொருள்களை வைக்க வேண்டும்.

2. மாணவர்களுக்கு அறிவுறுத்துவது

மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன, கொடுக்கப்பட்ட நேரம் எவ்வளவு, கேள்விகள் எவை என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

3. மாணவர்கள் சுவரெழுத்து பலகைகளில் எழுதுவார்கள்

அனைத்து மாணவர்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

4. குழு விவாதம்

இறுதியில், மாணவர்கள் அனைவரும் அமர, ஒவ்வொரு பலகையில் எழுதப்பட்டவை பற்றி விவாதம் செய்யலாம்.

எடுத்துக்காட்டாக,

குடிமையியலில் நல்ல தலைவர் யார்? என்ற பாடம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.

நல்ல தலைவருக்குரிய பண்புகள் எவை?

நல்ல தலைவர் தவிர்க்க வேண்டிய குணங்கள் எவை?

நான் விரும்பும் தலைவர் யார்?

நான் வெறுக்கும் தலைவர் யார்?

இப்படி நான்கு கேள்விகளை நான்கு பலகைகளில் எழுதிவைத்து, மாணவர்கள் அனைவரும் தங்கள் விடைகளைப் பதிவு செய்யுமாறு சொல்லலாம்.

குழு விவாதத்திற்குப் பின், ஆசிரியர், பாட புத்தகத்தின் அடிப்படையில் தன் கருத்துக்களை நெறிப்படுத்தி பாடத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கலாம்.