Thursday, June 4, 2020

நுண்ணுணர்தல்

பள்ளிகள் தங்களுடைய ஆன்லைன் கற்பித்தலைத் தொடங்கிவிட்டன. ஆன்லைன் கற்றல் மற்றும் கற்பித்தலை மையமாக வைத்து நிறைய மீம் காணொளிகள் வலம் வருகின்றன. வகுப்புக்கு சாக்பீஸூம் நோட் புக்கும் தூக்கிக் கொண்ட போன ஆசிரியை இப்போது, 'வைஃபை, ஹாட்ஸ்பாட், ஸூம், டீம்ஸ்' என்று வெலவெலத்துப் போகின்றார். இரண்டு நாள்களுக்கு முன், ஆன்லைன் கற்றலில் தன்னால் ஈடுபட முடியவில்லையே - அதாவது தன்னிடம் செயல்திறன் பேசி இல்லாததால் - மனஉளைச்சலுக்கு ஆளாகி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இம்முறை வகுப்புக்களால், வயதான அல்லது தொழில்நுட்ப வசதிகளுக்கு பயிற்சி இல்லாத ஆசிரியர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

ஏன் எல்லாருமே செயல்திறன்பேசி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமா?

ஏன் எல்லாருமே இணையவசதி கொண்டிருக்க வேண்டுமா?

அரிசி வாங்கப் பணம் இல்லாத ஒரு குடும்பம் உடனடியாக ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்க வேண்டுமா?

வழக்கமான ஆண்டுக் கட்டணத்தை பள்ளிகள் வசூலிக்கின்றன. ஆனால், மாணவர்கள் வீட்டில் இருக்கிறார்கள். பள்ளிக்கூட வகுப்பறைகளின் மின்கட்டணம், இருக்கைகளின் தேய்மானம், பள்ளிப் பராமரிப்பு ஆகிய அனைத்திற்குமான பணமும் நிர்வாகத்திற்கு மிச்சம். இந்தப் பணத்தை நிர்வாகம் குறைத்துக்கொள்ளுமா? இல்லை! ஆசிரியர்கள் தங்கள் பணத்திலேயே இணைய தள டேட்டாவை வாங்க வேண்டும், செயல்திறன் பேசிகள் வாங்க வேண்டும், ஹெட்ஃபோன் வாங்க வேண்டும். இதே போல மாணவர்களும் வாங்க வேண்டும். இதில் இன்னொரு நகைச்சுவை. மாணவ, மாணவியர் தங்களுடைய யூனிஃபார்மில் அமர்ந்து கற்க வேண்டுமாம். ஆக, யூனிஃபார்ம் செலவு வேறு. மாணவ, மாணவியரிடையே வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட சீருடை, ஒரு பள்ளியின் சடங்கு உடையாக மாறிவிடுவது எவ்வளவு அபத்தம்!

இந்நிகழ்வுகளில்,

மேலிருப்பவர் கீழிருப்பவரை வெறும் பொருளாகப் பார்க்கிறாரே தவிர, ஆளாகப் பார்க்கவில்லை.

கல்வித்துறை பள்ளி நிர்வாகத்தை பொம்மையாகவும், பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களை இயந்திரங்களாகவும், ஆசிரியர்கள் மாணவர்களைப் பொறிகளாகவும் பார்க்கின்றனர்.

இன்று நமக்கும், எல்லா நாளும் பள்ளியில் ஆசிரியர்களுக்கும் தேவை: 'நுண்ணுணர்தல்' (sensitivity). இதை எளிதாக இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, அடுத்தவரின் தேவை எது என்று அறிந்து செயல்படுதல். இரண்டு, அடுத்தவரைக் காயப்படுத்தாமல் இருத்தல். எடுத்துக்காட்டாக, நான் உணவறையில் இருக்கிறேன். என் மேசையில் 3 மாம்பழங்கள் இருக்கின்றன. நாங்கள் மூன்று பேர் இருக்கின்றோம். நான் வேகமாகச் சென்று முதலில் ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதை எனக்கென ஒதுக்கிவைத்துக்கொள்ளும்போது நான் நுண்ணுணர்தலோடு செயல்படுவதில்லை. அல்லது, நான் மனமகிழ் நேரத்தில் அமர்ந்திருக்கிறேன். ஐந்துபேரில் நால்வர் தமிழர், ஒருவர் கேரள நாட்டினர். ஆனால் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும். ஆங்கிலம் தெரிந்தாலும், தமிழ் தெரியாத நபரின் இருப்பை நான் உதறித்தள்ளிவிட்டு, தொடர்ந்து தமிழில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் நான் நுண்ணுணர்தலோடு செயல்படுவதில்லை.

மார்ட்டின் ப்யூபர் (Martin Buber) என்ற மெய்யியலாளர், மனித உறவுகளை, 'நான்-அது' ('I-It'), 'நான்-அவர்' ('I-Thou') என்று பிரிக்கின்றார். 'நான்-அது' என்ற உறவுநிலை நாம் இந்த உலகோடு, தொழிலோடு கொள்கின்ற உறவு. ஆனால், மனிதர்கள் என்று வந்தால், அங்கே 'நான்-அவர்' என்ற உணர்வுதான் இருக்க வேண்டும். முதல் நிலை உறவில், அடுத்தவர் பொருளாக இருப்பார். இரண்டாம் நிலை உறவில், அடுத்தவர் நபராக இருப்பார்.

இன்று அமெரிக்காவில் கறுப்பு-வெள்ளை பாகுபாடு எழக் காரணம், அல்லது நம் மண்ணில் சிறுபான்மை-பெரும்பான்மை உணர்வு எழக் காரணம், நாம் ஒருவர் மற்றவரை 'நான்-அவர்' என்ற நிலையில் அணுகாமல், 'நான்-அது' என்ற நிலையில், அடுத்தவரை ஒரு பொருளாக நினைத்து அணுகுவதால்தான்.

முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு ஒருவர் கடக்கக் காரணமாக இருப்பது 'நுண்ணுணர்தல்.'

இந்த உணர்வை ப்யூபர் எப்படி பெறுகின்றார். ஒரு சோகமான நிகழ்வை அவர் பதிவு செய்கின்றார்.

கல்லூரிப் பேராசிரியாக இருந்த அவரிடம் மாலையில் ஒரு மாணவன் வருகின்றான். முதல் உலகப் போர் நடக்கின்ற நேரம். 'நான் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு போக விரும்பவில்லை. ஆனால், எல்லாரும் என்னைக் கட்டாயப்படுத்துகிறார்கள். நான் போகவா? வேண்டாமா? எனக்குக் குழப்பமாகவும் கலக்கமாகவும் இருக்கிறது' என ப்யூபரிடம் கேட்கின்றான் மாணவன். அந்த நேரத்தில் ப்யூபர் ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடி நூலகத்தில் உலாவிக்கொண்டிருக்கின்றார். அந்த மாணவனிடம், 'எனக்கு நேரமில்லை. நீயே முடிவெடுத்துக்கொள்' என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார். அடுத்த நாள் காலையில் ப்யூபர் எழுந்தபோது அதிர்ச்சி அடைகின்றார். அந்த மாணவன் இரவில் தற்கொலை செய்துகொண்டான். 'அவன் என்னிடம் பகிர வந்ததை நான் கேட்காமல், அவனை என் பணியின் இடையூறாக நினைத்தேனே! என்னால் ஓர் உயிர் போய்விட்டதே! அவனுடைய தேவையை நான் நுண்ணுராமல் இருந்துவிட்டேனே!' என வாழ்நாள் எல்லாம் புலம்புகின்றார்.

ஆக, ஆசிரியர்கள் மாணவர்களை வகுப்பறையில் நுண்ணுணர்தலோடு அணுகுதல் அவசியம்.

ஆசிரியர்களின் நுண்ணுணர்தல் மாணவர்களின் வாழ்விற்குப் புத்துயிர் அளிக்கும்.