இந்த முறையை ஆங்கிலத்தில் 'Inside-Outside Circle' என அழைக்கிறார்கள். இதை அறிமுகம் செய்தவர் ஸ்பென்சர் கேகன். கூட்டு ஒருமைப்பாட்டு அடிப்படையில் பாடம் கற்க மிகவும் ஏற்ற வழி இது. இந்த முறை மொழி வகுப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் இரண்டு வட்டங்களில் நிற்பர். வெளியே ஒரு வட்டம். உள்ளே ஒரு வட்டம். வெளி வட்டத்தில் உள்ளவர்கள் வட்டத்தின் உள் நோக்கியும், உள் வட்டத்தில் இருப்பவர்கள் வட்டத்தின் வெளிநோக்கியும் இருப்பர். ஆக, ஒவ்வொருவருக்கும் ஒரு பார்ட்னர், ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு நிற்பர்.ஆசிரியர் பொதுவான ஒரு தலைப்பு கொடுப்பார். அந்தத் தலைப்பின் அடிப்படையில், ஒருவர் மற்றவரிடம் கேள்வி கேட்டு மாணவர்கள் பதிலிறுப்பர்.
எடுத்துக்காட்டாக, பேச்சு ஆங்கில வகுப்பில், 'தபால் நிலையத்தில் அலுவலருக்கும் வாடிக்கையாளருக்கும் உள்ள உரையாடல்' என்று தலைப்பு கொடுக்கலாம். மாணவர்களில் ஒருவர் அலுவலராகவும், மற்றவர் வாடிக்கையாளராகவும் மாறி, ஒருவர் மற்றவரோடு ஆங்கிலத்தில் உரையாடுவர்.
'குட்மார்னிங் சார்!'
'குட்மார்னிங்!' 'வாட் ஷேல் ஐ டு ஃபார் யூ?'
'ஐ வுட் லைக் டு புக் எ பார்சல்'
'ப்ளீஸ் கிவ்'
இப்படித் தொடரலாம்.
சில நிமிடங்களில், 'மூவ் தெ சர்கிள்' என்று சொன்னவுடன் வெளி வட்டம் நகர்ந்து அடுத்த மாணவரை பார்ட்னராக எதிர்கொள்ளுமாறு மாறிக்கொள்ளும்.
இப்படியாக, ஒருவர் மற்றவரின் இடம் மாற்றியும், கதாபத்திரம் பாற்றியும் உரையாடலைத் தொடரலாம். மொழி வகுப்பில் மட்டுமன்றி, மற்ற வகுப்புக்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.
திறன் வளர்ச்சி:
இந்த முறையில் பேச்சு மற்றும் கேட்கும் திறன் வளரும்.
முறைமையின் பயன்கள்:
அ. மாணவர்கள் நன்றாகக் கேட்கவும், கேட்டதற்குப் பதிலிறுக்கவும் பழகிக்கொள்வர்.
ஆ. மாணவர்கள் தங்களுடைய வார்த்தை ஆற்றலை வளர்த்துக்கொள்வர். புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்வர். தெளிவான உச்சரிப்பைப் பெறுவர்.
இ. மாணவர்கள் புதிய கருத்துக்களை பரிமாறிக்கொள்வர்.
ஈ. வெறுமனே பாடங்களை மனனம் செய்யாமல் அவற்றை உச்சரிப்பதன் வழியாக, புரிதல் வளரும்.
உ. ஆசிரியர் எந்நேரமும் வட்டத்தைச் சுற்றிவருவதால் தேவையான ஐயங்களைச் சரிசெய்ய முடியும்.
முறைமையின் பின்னடைவுகள்:
அ. நிறைய மாணவர்கள் கொண்ட வகுப்பறையில் இதைச் செயல்படுத்துவது கடினமாக இருக்கும்.
ஆ. ஆசிரியரால் அனைத்து மாணவர்களின் உரையாடலையும் மேற்பார்வையிட முடியாது. ஆசிரியர் நகர்ந்தவுடன் மாணவர்கள் தங்களுக்குள்ளே சிரித்துப் பேசுவும், அரட்டை அடிக்கவும் வாய்ப்ப அதிகம்.
இ. தமக்கு அருகிலிருக்கும் மாணவர்கள் பேசுவதைக் கேட்டு அப்படியே பேசும் வாய்ப்பு இருப்பதால், மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வளர்க்க கடினமாக இருக்கும்.