நம் வகுப்பில் நாம் எந்த மாணவரையாவது சுட்டிக் காட்டி, 'ஹீ இஸ் வெரி க்ளவர்' என்று சொன்னால், உடனடியாக நம் எண்ணம் எல்லாம், 'அந்த மாணவன் நன்றாகப் படிக்கக் கூடியவன்' என்றும், 'வகுப்பில் முதல் மாணவன்' என்றும், 'நல்ல நினைவாற்றல் உள்ளவன்' என்றும், 'அதிக மதிப்பெண்கள் பெறக்கூடியவன்' என்றும் எண்ணத் தோன்றுகிறது.ஏனெனில், இதுவரை 'அறிவு' அல்லது 'நுண்ணறிவு' என்றால் நாம், அது கணிதம் அல்லது மொழி சார்ந்தது என்றும், அதை நினைவாற்றல் வழியே தெரிந்துகொள்ள முடியும் என்று நினைத்துள்ளோம்.
நம் எண்ணத்தைப் புரட்டிப் போட்டு, எல்லா மாணவர்களும் க்ளவர் என்று நமக்குச் சொல்லி, பல்வகை நுண்ணறிவுத் திறன்கள் (Multiple Intelligences - MIs) என்னும் கருதுகோளை முன்வைத்தவர் ஹாவர்ட் கார்ட்னர் (2011) என்பவர்.இவர் நுண்ணறிவை ஒன்பது வகைகளாகப் பிரிக்கின்றார்:
1. மொழிசார் நுண்ணறிவு (Verbal-Linguistic Intelligence) - வார்த்தைகளை மையப்படுத்திய அறிவு
2. எண்ணியல் நுண்ணறிவு (Mathematical-Logical Intelligence) - கணிதம் மற்றும் தர்க்கத்தை மையப்படுத்தியது
3. இடம்சார் நுண்ணறிவு (Visual-Spatial Intelligence) - படங்கள் மற்றும் இடங்களை மையப்படுத்தியது
4. இசைசார் நுண்ணறிவு (Musical Intelligence) - இசை மற்றும் கலைகளை மையப்படுத்தியது
5. தன்பிரதிபலிப்பு நுண்ணறிவு (Intrapersonal Intelligence) - தன்னையே அறிந்துகொள்தலை மையப்படுத்தியது
6. உடலியக்க நுண்ணறிவு (Physical-Kinesthetic Intelligence) - உடல்சார் அனுபவங்கள் மற்றும் உடலின் இயக்கங்களை மையப்படுத்தியது
7. சமூக நுண்ணறிவு (Interpersonal Intelligence) - ஒருவர் மற்றவரோடு உள்ள உறவுநிலைகளை மையப்படுத்தியது
8. இயற்கைசார் நுண்ணறிவு (Naturalistic Intelligence) - இயற்கை பற்றிய ஆர்வநிலையில் தொடங்கித் தொடர்வது
9. இருத்தல்சார் நுண்ணறிவு (Existential Intelligence) - மனித வாழ்வின் எதார்த்தங்களைப் பற்றிய அறிவு.
ஒரு வகுப்பறையில் உள்ள மாணவர்களில் மேற்காணும் ஒன்பது நுண்ணறிவுத் திறன்களும் இருக்கும். அப்படி இருக்க, நாம் நினைவாற்றல் அல்லது மொழியை மையப்படுத்திய அறிவை மட்டும் வழங்குவது எப்படி சால்பாக இருக்க முடியும்?
மேற்காணும் அனைத்து நுண்ணறிவுத்திறன்களும் வகுப்பறையில் வளர்க்கப்பட என்ன செய்ய வேண்டும்?
1. தனிப்பட்ட அக்கறை
ஓர் ஆசிரியர் தன்னுடைய மாணவர்களை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்க வேண்டும். மாணவர்களோடு உள்ள நெருங்கிய தொடர்பில்தான் இதை வளர்க்க முடியும். மேலும், மாணவர்கள் வகுப்பறையில் இருப்பதை விட வகுப்பறைக்கு வெளியே தான் தங்களை முற்றிலும் வெளிப்படுத்துவார்கள்.
2. பாடங்களை வகைப்படுத்துதல்
மாணவர்களின் ஒன்பது அறிவை வளர்க்கும் முறையில் வகுப்புக்களை ஒவ்வொரு நாள் அல்லது ஒவ்வொரு பாடவேளை அடிப்படையில் வகைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
3. கற்பித்தலின் எல்கையை விரிவுபடுத்துதல்
மாணவர்களின் நுண்ணறிவுத்திறனைக் கண்டறியுமுன் ஆசிரியர் தன்னுடைய திறனைக் கண்டறிந்து, தன் திறனை ஆழப்படுத்தவும், மற்றவை பற்றிய அறிதலைப் பெறவும் வேண்டும்.