Wednesday, June 3, 2020

ஜிக்ஸா முறைமை

ஜிக்ஸா முறைமை அல்லது ஆங்கிலத்தில் Jigsaw Method என்னும் முறைமையில், வகுப்பில் உள்ள மாணவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு கருத்து பற்றி விவாதிப்பர். அல்லது பாட அலகின் சிறு சிறு பகுதிகளைக் கற்பர். பின் ஆசிரியர் அனைத்துக் குழுக்களின் கருத்துக்களையும் ஒருங்கிணைக்க, அனைத்து மாணவர்களும் அனைத்தையும் கற்றுக்கொள்வர்.

நாம் விளையாடுகின்ற திருகு அட்டை விளையாட்டில் ஒவ்வொரு திருகு அட்டைகளும் இறுதியில் இணைந்து அழகிய படம் உருவாவது போல, இங்கே மாணவர்களின் அனைத்துக் கருத்துக்களும் இணைந்து, முழுமையான புரிதல் ஏற்படும்.

வகுப்பில் எப்படிச் செய்வது?

எடுத்துக்காட்டாக, அளவைகள் பற்றிப் படிக்கிறோம் என வைத்துக்கொள்வோம்.

நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை என்ற மூன்று அளவைகளை மூன்று குழுவினருக்கு பிரித்துக் கொடுத்துவிட வேண்டும். ஒவ்வொரு குழுவும் தனக்கு ஒதுக்கப்பட்ட அளவை பற்றி விவாதம் செய்யும். இறுதியில், தாங்கள் கற்றுக்கொண்டதை அவர்கள் ஒட்டுமொத்த வகுப்பின்முன் எடுத்துச்சொல்வர்.

இதன் பயன் என்ன?

'ஜிக்ஸா விளையாட்டில் (Jigsaw Puzzle) ஒவ்வொரு அட்டையும் அவசியம். ஒரு அட்டை குறைந்தாலும் விளையாட்டு முடியாது. அதுபோல, வகுப்பில் ஒவ்வொரு மாணவரும் முக்கியமானவர். ஒவ்வொரு மாணவரின் கருத்தும் முக்கியமானது.'

இப்படியாக, ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மை வெளிப்பட இந்த முறைமை உதவுகிறது.

மேலும், ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக தன்னுடைய குழுவிலும், ஒவ்வொரு குழுவும் வகுப்பறையின் முன் தனித்துவமான முறையில் சிந்திக்க, பகிர, மற்றும் விவாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கையோடு தங்கள் எண்ணங்களைப் பகிரவும், மற்ற குழுவைவிட சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற நேர்முகமான போட்டி உணர்வையும் பெற்றுக்கொள்ளவும் செய்வர்.

வகுப்பில் செயல்படுத்த நான்கு படிகள்:

படி 1: ஒவ்வொரு குழுவிலும் 4 முதல் 6 வரை மாணவர்கள் இருக்குமாறு பிரித்துக்கொள்ள வேண்டும்.

படி 2: அன்றைய நாளின் பாடத்தை குழுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மாணவரை பொறுப்பாக நியமித்து, அவரிடம் வழங்க வேண்டும்.

படி 3: ஒவ்வொரு குழுவும் சிந்திக்க, விவாதிக்க, பகிரத் தேவையான நேரத்தைக் கொடுக்க வேண்டும்.

படி 4: இறுதியில், ஒவ்வொரு குழுவும் தாங்கள் கற்றதை பொதுவில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த முறைமை பற்றிய இன்னொரு படிநிலையை அறிய இங்கே க்ளிக்கவும்: