Tuesday, June 23, 2020

கலவைக் கற்றல்

ஆங்கிலத்தில் இதை 'Blended Learning' என அழைக்கிறார்கள். இது ஒரு புதிய கற்றல் முறை அல்ல. மாறாக, நாம் ஏற்கனவே செய்துகொண்டிருப்பதுதான்.

நான் வகுப்பறையில் புதிய ஏற்பாட்டு கிரேக்கம் கற்றுக்கொடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம். முதலில், நான் கிரேக்க எழுத்துருக்களை மாணவர்களுக்கு கரும்பலகையில் எழுதிப் போடுகிறேன். இரண்டாவதாக, நான் அவற்றை அவர்களுக்கு அவற்றின் உச்சரிப்பைக் கற்பிக்கின்றேன். மூன்றாவதாக, எழுத்துருக்களும் உச்சரிப்புக்களும் கற்றுக்கொடுக்கும் காணொளி ஒன்றை அவர்களுக்குக் காண்பிக்கிறேன். நான்காவதாக, 5 நிமிடங்கள் ஓடக்கூடிய கிரேக்க மொழித் திரைப்படம் ஒன்றைக் காணொளியாகக் காட்டுகிறேன். ஐந்தாவதாக, மாணவர்களை இருவர் இருவராக நிற்க வைத்து அல்லது அமர வைத்து ஒருவர் மற்றவருக்கு எழுத்துருக்களை எழுதிக் காட்டவும், உச்சரித்துக் காட்டவும் சொல்கிறேன்.

ஆக, மாணவர்களின் கற்றல் ஐந்து நிலைகளில் நடக்கிறது:

அ. கரும்பலகையில் ஆசிரியரின் எழுத்து
ஆ. ஆசிரியரின் உச்சரிப்பு
இ. எழுத்து மற்றும் உச்சரிப்பு காணொளி
ஈ. கிரேக்க மொழி குறும்படம்
உ. நேருக்கு நேர் மாணவர்கள் உரையாடுதல்

வகுப்பின் இறுதியில் மாணவர்கள் கிரேக்க எழுத்துருக்களையும், உச்சரிப்பையும் கற்கின்றனர். இந்தக் கற்றலுக்கு ஐந்து முறைமைகள் 'கலந்து' பயன்படுத்தப்பட்டுள்ளதால், இதை நாம் 'கலவைக் கற்றல்' என அழைக்கிறோம்.

'ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கற்றலின் கலவை'

'வகுப்பறைக்குள் மற்றும் வகுப்பறைக்கு வெளியே கற்றலின் கலவை'

'ஆசிரியர்-மாணவர் மற்றும் மாணவர்-மாணவர் உரையாடலில் கற்றலின் கலவை'

'புத்தகம் வழி மற்றும் ப்ராஜெக்ட் வழி கற்றலின் கலவை'

'எழுத்து வழி மற்றும் பேச்சு வழி கற்றலின் கலவை'

'இயல்புசார் மற்றும் எண்ணியல் வழி கற்றலின் கலவை'

இப்படியாக, எந்த ஒரு கற்றல் முறைகள் இணைதலையும் நாம் 'கலவைக் கற்றல்' என்று அழைக்க முடியும்.

கலவைக் கற்றலில் என்ன நடக்கிறது?

அ. முகம் தெரியாமல் நடக்கும் ஆன்லைன் கற்றலை நேருக்கு நேர் பார்த்துக் கற்க மாணவர்களைத் தூண்டுகிறது.

ஆ. வகுப்பறையில் கற்கும் பாடத்தை மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே உள்ளவற்றோடு பொருத்திப் பார்க்க அவர்களுக்குக் கற்பிக்கிறது.

இ. ஆசிரியரின் செயல்பாடுகளை மாணவர்களின் படைப்பாற்றலோடு இணைக்கிறது.

ஈ. கணிணிசார் கற்றலையும் மரபுசார் கற்றலையும் இணைக்கிறது.

12 வகை கலவைக் கற்றல்

1. வெளியே-உள்ளே (Outside-In)

மாணவர்கள் தங்கள் அனுபவ அறிவைக் கொண்டு பாடத்தைப் புரிந்துகொள்தல்.

2. இணைச்சேர்க்கை (Supplemented)

மாணவர்கள் தாங்கள் ஏற்கனேவே பெற்றிருக்கும் அறிவை கற்றலின் அறிவோடு இணைத்தல்.

3. உள்ளே-வெளியே (Inside-Out)

மாணவர்கள் தாங்கள் வகுப்பில் கற்கும் ஒன்றை வெளியில் நடக்கும் ஒன்றோடு பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்தல்

4. ஃப்லெக்ஸ் (Flex)

வரிசையாக அமர்ந்திருக்கும் மாணவர்கள் ஒருவருக்கு அடுத்து இன்னொருவர் (ஒருவர் மற்றவருக்கு) என்று கருத்துக்களைப் பகிர்ந்துகொள்தல்.

5. தனிநபர் சுழற்சி (Individual Rotation)

மாணவர்கள் ஒவ்வொருவரும் எழுந்து எல்லாருக்கும் முன் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்தல்.

6. நிலையச் சுழற்சி (Station Rotation)

மாணவர்கள் வேறு வேறு கற்றல் தளங்களுக்கு மாறிச் சென்று கற்றல்.

7. ஆய்வகச் சுழற்சி (Lab Rotation)

இயற்பியல், வேதியியல், உயிரியில், கணிணி ஆய்வகங்கள் என மாறி மாறிச் செல்தல்.

8. தன்முனைப்பு கற்றல் (Self-Directed Learning)

தான் விரும்புவதை, தான் விரும்பும் விதத்தில் கற்றல்

9. ப்ராஜெக்ட் மையக் கற்றல் (Project-Based)

தாங்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒரு ப்ராஜெக்ட் (செய்முறைப் பயிற்சி) எடுத்து செய்தல்.

10. தொலைவுக் கற்றல் (Remote)

ஆன்லைன் வழி கற்றல்

11. தலைகீழ் வகுப்பறை (Flipped Classroom)

மாணவர்கள் ஆசிரியர்கள்போலக் கற்றுக்கொடுத்தல்.

12. திறன்மையக் கற்பித்தல் (Mastery-based)

ஒன்றில் சிறந்து விளங்கும் மாணவன் அதை மற்றவருக்குக் கற்பித்தல்.

ஆக, கற்றல் கலந்து இருந்தால் கற்றல் இனிக்கும். ஏனெனில், வாழ்க்கை போல கற்றலும் ஒரு கலவையே!