Monday, June 29, 2020

திறன்சார் கற்றல்

ஆங்கிலத்தில் இதை Competency-Based Learning (CBL) என்று சொல்கிறார்கள்.

நாம் புதிதாக ஓட்டுநர் பயிற்சிக்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம்.

வகுப்பறைக்குள் 10 மாணவர்களை அமர்த்துகின்ற ஆசிரியர், காரின் பாகங்கள், கியர் அமைப்பு, பிரேகிங் சிஸ்டம் என அனைத்தையும் நடத்துகிறார். அடுத்த நாள் அதைப் பற்றிய தேர்வு எழுத வேண்டும் எனச் சொல்கிறார். தேர்வும் எழுதியாயிற்று. மூன்றாவது நாள், அவர் நம்மை ஒரு பெரிய வேனில் ஏற்றி, தானாக வண்டியை ஓட்டிக்கொண்டு, 'இதுதான் ஸ்டியரிங், இது பிரேக், இது க்ளட்ச், இது ஆக்ஸெலரேட்டர், இது கியர் பாக்ஸ் என்று சொல்லிக் கொண்டே ஓட்டுகிறார். இது ரிவர்ஸ் கியர், இது ரேர் மிரர்' என எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு, 'அடுத்த வாரம் நீங்கள் வந்து ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொள்ளலாம்' என்கிறார்.

நாம் ஓட்டுநர் உரிமம் வாங்கிவிட்டதால் நமக்கு வாகன ஓட்டத் தெரியும் என்பது பொருளா?

இன்றைய கற்றல் மற்றும் கற்பித்தல் முறை அப்படித்தான் இருக்கிறது. ஒரே மாதிரியான பாடத்திட்டம். ஆசிரியரே அனைத்தையும் வகுப்பறைக்குள் அமர்ந்தவாறே கற்றுக்கொடுப்பார். செய்முறை வகுப்பிலும் அவரே செய்துகாட்டுவார். மாணவர்கள் இங்கே வெறும் பார்வையாளர்களே.

இதுதான் பாரம்பரிய கற்றல் அல்லது கற்பித்தல முறை என்றால், திறன்சார் கற்றல் முறை இதிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது. இந்த அமைப்பு முறையில் மாணவர் தன்னுடைய திறனை வெளிப்படுத்தினால்தான் அவர் அடுத்த நிலை கற்றலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

அதாவது, திறன்சார் கற்றல் முறையில், முதல் கியர் போடுதலில் கான்ஃபிடன்ட் இல்லாத மாணவர் அடுத்த கியருக்குச் செல்லக் கூடாது. படிக்கட்டு முறையில், ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றிலும் திறன் பெற்றபின்தான் அடுத்த கட்டத்திற்கு அவர் நகர வேண்டும்.

இந்த வகைக் கற்றல் மெதுவாக நடக்கும். ஆனால், மாணவர் தான் கற்பதை முழுiமாயகக் கற்க முடியும். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு வேகத்தில் கற்பதால் ஆசிரியர் நிறைய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தொழில்முறைக் கல்விப் பாடங்களைக் கற்றலில் இந்த முறையை நன்றாகப் பயன்படுத்தலாம்.