Tuesday, June 30, 2020
Monday, June 29, 2020
திறன்சார் கற்றல்
ஆங்கிலத்தில் இதை Competency-Based Learning (CBL) என்று சொல்கிறார்கள்.நாம் புதிதாக ஓட்டுநர் பயிற்சிக்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம்.
வகுப்பறைக்குள் 10 மாணவர்களை அமர்த்துகின்ற ஆசிரியர், காரின் பாகங்கள், கியர் அமைப்பு, பிரேகிங் சிஸ்டம் என அனைத்தையும் நடத்துகிறார். அடுத்த நாள் அதைப் பற்றிய தேர்வு எழுத வேண்டும் எனச் சொல்கிறார். தேர்வும் எழுதியாயிற்று. மூன்றாவது நாள், அவர் நம்மை ஒரு பெரிய வேனில் ஏற்றி, தானாக வண்டியை ஓட்டிக்கொண்டு, 'இதுதான் ஸ்டியரிங், இது பிரேக், இது க்ளட்ச், இது ஆக்ஸெலரேட்டர், இது கியர் பாக்ஸ் என்று சொல்லிக் கொண்டே ஓட்டுகிறார். இது ரிவர்ஸ் கியர், இது ரேர் மிரர்' என எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு, 'அடுத்த வாரம் நீங்கள் வந்து ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொள்ளலாம்' என்கிறார்.
நாம் ஓட்டுநர் உரிமம் வாங்கிவிட்டதால் நமக்கு வாகன ஓட்டத் தெரியும் என்பது பொருளா?
இன்றைய கற்றல் மற்றும் கற்பித்தல் முறை அப்படித்தான் இருக்கிறது. ஒரே மாதிரியான பாடத்திட்டம். ஆசிரியரே அனைத்தையும் வகுப்பறைக்குள் அமர்ந்தவாறே கற்றுக்கொடுப்பார். செய்முறை வகுப்பிலும் அவரே செய்துகாட்டுவார். மாணவர்கள் இங்கே வெறும் பார்வையாளர்களே.
இதுதான் பாரம்பரிய கற்றல் அல்லது கற்பித்தல முறை என்றால், திறன்சார் கற்றல் முறை இதிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது. இந்த அமைப்பு முறையில் மாணவர் தன்னுடைய திறனை வெளிப்படுத்தினால்தான் அவர் அடுத்த நிலை கற்றலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
அதாவது, திறன்சார் கற்றல் முறையில், முதல் கியர் போடுதலில் கான்ஃபிடன்ட் இல்லாத மாணவர் அடுத்த கியருக்குச் செல்லக் கூடாது. படிக்கட்டு முறையில், ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றிலும் திறன் பெற்றபின்தான் அடுத்த கட்டத்திற்கு அவர் நகர வேண்டும்.
இந்த வகைக் கற்றல் மெதுவாக நடக்கும். ஆனால், மாணவர் தான் கற்பதை முழுiமாயகக் கற்க முடியும். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு வேகத்தில் கற்பதால் ஆசிரியர் நிறைய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தொழில்முறைக் கல்விப் பாடங்களைக் கற்றலில் இந்த முறையை நன்றாகப் பயன்படுத்தலாம்.
Sunday, June 28, 2020
தனிப்பயனாக்கப்பட்ட கல்வி
இதை ஆங்கிலத்தில், 'Personalised Learning' என்று அழைக்கிறோம்.கடந்த இரு வருடங்களாக ஹெச்டிஎப்சி வங்கி ஒரு புதிய வார்த்தையை தன்னுடைய வங்கியின் விற்பனை மேலாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், பெர்ஸனலைஸ்ட் வங்கித் திட்டம். எல்லா பயனர்களும் ஒன்றல்ல, ஒவ்வொரு பயனரும் அல்லது வாடிக்கையாளரும் தனிப்பட்ட தேவைகளை உடையவர். ஆக, அவரவர் தேவைக்கு ஏற்ப வங்கியின் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். 'டெய்லர்-மெய்ட்' என்றும் இதை அழைக்கிறார்கள். ஒவ்வொருவரின் உடலமைப்பிற்கு ஏற்ப ஆடைகள் உருவாக்கப்படுவதுபோல, ஒவ்வொருவரின் தேவையைக் கருதி இத்திட்டம் செயல்படும்.
கற்றல் மற்றும் கற்பித்தலிலும் இன்று அதிகமாகப் பேசப்படுகிறது.
கற்றலில் இன்று நாம் சில எதார்த்தங்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்:
அ. எல்லா மாணவர்களும் மாணவியர்களும் ஒன்றல்ல.
ஆ. எல்லாருடைய கற்கும் திறன்களும் ஒன்றல்ல.
இ. எல்லாருடைய கற்கும் தேவைகளும் ஒன்றல்ல.
அப்படியிருக்க, படிப்பு அல்லது பாடத்திட்டம் மட்டும் ஒன்று என நான் எப்படிக் கொள்ள முடியும்?
ஆக, ஒவ்வொரு மாணவரின் தேவைக்கேற்ப கற்பித்தல் நடைபெற வேண்டும்.
அப்படி என்றால், வகுப்பில் 40 மாணவர்கள் இருப்பார்கள். 40 தடவை அல்லது 40 வழிகளில் கற்றுக்கொடுக்க முடியுமா? என்று நாம் கேட்கலாம். அப்படிக் கற்றுக்கொடுப்பது கடினம்தான். ஒவ்வொருவரும் தனிநபர் என்றால் தேர்வு எப்படி நடத்துவது? மாணவர்களை எப்படித் தரம் பார்ப்பது? நிறைய செய்முறைப் பிரச்சினைகள் இதில் இருக்கவே செய்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த அமைப்பிலேயே மாற்றம் வருதல் அவசியம்.
உரோமையில் நான் பயின்றபோது, என்னுடன் என் பங்கைச் சார்ந்த இளவல் ஒருவனும் உடன் வருவான். அவனுக்கு வயது 9 இருக்கும். அங்கே ஸ்கூல் யூனிஃபார்ம் எல்லாம் கிடையாது. ஆனால், இவன் தினமும் விளையாட்டுக்குரிய ஆடையிலேயே வருவான். 'நீ என்ன படிக்கிற?' என்று ஒருநாள் அவனிடம் கேட்டேன். 'நான் ஸ்கூலுக்கு போறதில்லை. கால்பந்தாட்டப் பள்ளிக்குச் செல்கிறேன். இது எனக்கு மூன்றாவது ஆண்டு' என்றான். ஆக, அவன் தன்னுடைய 6ஆவது வயதிலேயே தன் எதிர்கால இலக்கை நிர்ணயித்துக்கொள்கிறான். அதற்காக பயிற்சி செய்கிறான். பொதுத்தேர்வு, இறுதித்தேர்வு என எந்த தொந்தரவும் அவனுக்கு இல்லை. இதுதான் தனிப்பயனாக்கப்பட்ட கல்வி.
இந்த வகைக் கற்றலில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறையில் சிறப்புற முடியும். 'கற்றல் குறைவு' என்று யாரையும் இக்கல்விமுறையில் முத்திரை குத்த முடியாது. அந்தத் துறை விருப்பம் உள்ள மாணவர்களே அந்தத் துறையில் இருப்பதால் ஆசிரியரின் கற்றுக் கொடுத்தல் எளிதாகும்.
இதை எப்படி ஊக்குவிப்பது?
அ. பெற்றோர்கள் உதவியுடன் ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களின் தனிப்பட்ட திறமைகள் மற்றும் துறைஆர்வங்களை ஆய்ந்தறிய வேண்டும்.
ஆ. துறை அல்லது ஆர்வத்தின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
இ. கற்றலோடு சேர்த்து தங்களின் துறைசார் அனுபவங்களையும் பெற மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
ஈ. மாணவர்கள் தங்கள் கற்றலை வளர்த்துக்கொள்ளத் தேவையான வாய்ப்புக்களை உருவாக்கித் தருதல் வேண்டும்.
உ. வகுப்பறையில் நெகிழ்வுத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஊ. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை மற்றும் திறனை மையப்படுத்தி கற்பித்தலின் வேகத்தை வரையறுக்க வேண்டும்.
Friday, June 26, 2020
சிக்கல்மையக் கற்றல்
ஆங்கிலத்தில் இந்த முறையை 'Problem-Based Learning'' (PBL) என்று அழைக்கிறார்கள். 'Problem' என்பதை 'பிரச்சினை,' 'பிறழ்வு,' 'புதிர்,' 'இடர்ப்பாடு,' 'தொல்லை,' 'இக்கட்டு' என நிறைய வார்த்தைகளில் மொழிபெயர்த்தாலும், கற்றலைப் பொருத்தவரையில், 'சிக்கல்' என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.கணிதப் பாடத்தில் 'சிக்கல்' என்பது நாம் எட்ட வேண்டிய தீர்வாக இருக்கலாம். ஆங்கிலப் பாடத்தில் 'சிக்கல்' என்பது நாம் கற்க வேண்டிய வார்த்தைகளும் அவற்றின் உச்சரிப்புக்களாகவும் இருக்கலாம். அறிவியில் பாடத்தில் 'சிக்கல்' என்பது நாம் ஆய்ந்து கண்டறிய வேண்டிய ஒரு முடிவாக இருக்கலாம். இப்படியாக, பாடத்திற்குப் பாடம், 'சிக்கல்' வித்தியாசப்படுகிறது.
'சிக்கல்மையக் கற்றல்' மாணவர்களை மையப்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உள்ள சிக்கலை மாணவர்களிடம் கொடுத்து அவர்களை சிறுசிறு குழுக்களாகவோ அல்லது தனித்தனியாகவோ பிரித்தனுப்பி, தீர்வு காணத் தூண்டும் முறைதான் இக்கற்றல் அல்து கற்பிலத்தல் முறை.
இம்முறையின் பயன்கள் எவை?
நில்சன் என்ற கல்வியியலாளர் இம்முறையின் பயன்களாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிடுகின்றார்:
1. மாணவர்கள் குழுக்களில் வேலை செய்யப் பழகுவர்.
2. தலைமைத்துவப் பயிற்சி பெறுவர்.
3. இம்முறையில் எழுத்து மற்றும் வாய்மொழிப் பயிற்சி கிடைக்கும்.
4. குழும செய்முறை பற்றிய தன்னறிவு பிறக்கும்.
5. சுதந்திரமாகக் கற்க முடியும்.
6. ஒருவர் மற்றவரது கற்றலை ஒப்பிட்டு திறனாய்வு செய்ய முடியும்.
7. மிகப்பெரிய கருதுகோள்களையும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
8. தன்முனைப்புக் கற்றலை ஊக்குவிக்கும்.
9. படித்ததைத் தன் வாழ்வியல் எதார்த்தங்களோடு பொருத்திப் பார்க்க உதவும்.
10. மற்ற புலங்களோடு தன்னுடைய பாடத்தை இணைக்க முடியும்.
எப்படிச் செய்வது?
முதலில் பாடம் நடத்திவிட்டு, அதற்குப் பின் சிக்கல் அல்லது கேள்வி அல்லது புதிரைத் தருவதைவிட, முதலிலேயே மாணவர்களிடம் அதைக் கொடுத்துவிட வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஆங்கிலப் பாடல் ஒன்றை நடத்துகிறேன் என வைத்துக்கொள்வோம். முதலில் பாடலை நடத்தி, அதற்கு விளக்கம் சொல்லிவிட்டு, இறுதியாக, 'இந்தப் பாடலில் வரும் கதைமாந்தர்கள் யார்?' 'இப்பாடலின் மையச் செய்தி எது?' எனக் கேள்விகள் கொடுப்பதற்குப் பதிலாக, பாடலையும் கொடுத்து கேள்விகளையும் கொடுத்துவிட வேண்டும். மாணவர்கள் தாங்களாகவே விடைகளைக் கண்டறியத் தொடங்குவர். தெரியாத வார்த்தைகள் மற்றும் சொல்லாடல்களுக்கு ஆசிரியரின் விளக்கத்தை நாடுவர்.
மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
மாணவர்கள் அந்தப் பாடத்தைப் பற்றிய முன்னறிவு கொண்டிருக்க வேண்டும். நான் எபிரேய வகுப்பிற்குச் செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். போன முதல்நாளே விவிலியத்தின் ஒரு பக்கத்தைக் கொடுத்து, 'இதை மொழிபெயருங்கள்!' என்று சொல்வது மடைமை. எபிரேய எழுத்துக்களை மாணவர்கள் முதலில் தெரிந்திருக்க வேண்டும். வார்த்தைகளுக்கு விளக்கம் காண அவர்களுக்கு அகராதிகள் கைவசம் இருக்க வேண்டும். ஆக, முன்னறிவு எதுவும் இல்லாமல் சிக்கலைத் தீர்க்க அவர்களை வற்புறுத்தினால் அது சோர்வையும், விரக்தியையும், நேர விரயத்தையும் ஏற்படுத்தும்.
மாணவர்களின் பயன்பாடும் உறுதிசெய்யப்பட வேண்டும். அவர்கள் ஒரு சிக்கலைத் தீர்ப்பதால் அவர்கள் என்ன அறிந்துகொள்வார்கள் என்பதை முன்கூட்டியே ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
மாணவர்கள் சிக்கலைத் தீர்க்க வேண்டும். பின் தங்கள் குழுக்களில் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
கற்றலில் எப்படிப் பயன்படுத்துவது?
எடுத்துக்காட்டாக, 'கொரோனா' என்று மட்டும் முதல் வகுப்பில் மாணவர்களிடம் சொல்ல வேண்டும். முதல் வாரத்தில், 'கொரோனா என்றால் என்ன?' என்பதை மாணவர்கள் கண்டறிவர். பின், 'அதை எப்படித் தடுப்பது?' என்ற ஒரு வீதிநாடகத்தையோ அல்லது பாடலையோ உருவாக்குவர். பின், கொரோனா பற்றிய தரவுகளைச் சேகரிப்பர். இறுதியாக, எழுத்து வடிவில் அவர்கள் அதைச் சமர்ப்பிப்பர்.
Thursday, June 25, 2020
மொபைல் லேர்னிங்
தகவல் மற்றும் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டில் நாளுக்கு நாள் நாம் புதிய அடிகளை எடுத்து வைத்து முன்னேறிக்கொண்டே இருக்கிறோம். வங்கிகள் வாடிக்கையாளர்களின் உள்ளங்கைகளில் இருக்கும் மொபைல்களையே தங்கள் கிளைகளாக மாற்றிக்கொண்டன. எல்லாமே ஒரு டச் தொலைவில்தான் என்ற நிலையில் உலகம் சுருங்கிவிட்டது. குறிப்பாக, ஒருவர் மற்றவரைத் தொடுதல் தவிர்க்கப்பட வேண்டிய கோவித்-19 காலத்தில், தொடுதிரை வழியாக நாம் ஒருவர் மற்றவரைத் தொட்டுக்கொள்ள நம்மையே பழக்கப்படுத்தி வருகின்றோம்.இன்று கற்றல் தளங்களில் அதிகமாக 'மொபைல் லேர்னிங்' (Mobile Learning) அல்லது 'எம்-லேர்னிங்' (M-Learning) பேசப்படுகின்றது.
கற்றல் தரவுகளை தனிநபரின் சட்டைப் பைக்குள் அள்ளித் திணிப்பதே இக்கற்றலின் நோக்கம். எழுத்து, படம், இசை, ஒலிப்பதிவு, காணொளி என ஏதாவது ஒரு வடிவில் பாடத்தின் தரவுகளைச் சுருக்கி, பயனரின், மாணவரின் மொபைலுக்குள் திணித்துவிடுகின்றது இம்முறை.
பிங்க்வார்ட் என்பவர், 'மொபைல் கற்றல் என்பது மொபைல் சாதனங்கள் வழியாக மற்றும் கம்பியில்லாத் தொடர்பு வழியாகக் கற்றல்' என்றும், குய்ன் என்பவர், 'மொபைல் சாதனங்கள் வழியாகவும், இணைய தளங்கள் வழியாகவும், ஒருவர் மற்றவரோடு உரையாடியோ அல்லது உரையாடாமலோ நிகழும் கற்றல்' என இதை வரையறுக்கின்றனர்.
மொபைல் கற்றல் பெருகக் காரணங்கள் எவை?
1. பயன்பாட்டுத்தன்மை (Usability)
இவ்வகைக் கற்றலில் பயன்பாடு எளிதாக இருக்கிறது. நிறையப் புத்தகங்களைச் சுமக்கவோ, நிறைய நோட்டுக்களை வாங்கவோ தேவையில்லை. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இவற்றைக் கொண்டு படிக்க முடியும். மேலும், சில பைட்டுகளில் பெரிய புத்தகங்களைச் சேமிக்கவும், எடுத்துப் படிக்கவும் இயல்வதால் புத்தகங்கள் நம் வீட்டின் இடத்தை அடைக்காது.
2. செயல்பாட்டுத்தன்மை (Functionality)
இவை உடனடியாகவும் விரைவாகவும் செயல்படும் தன்மை கொண்டவை. எனக்குத் தேவையான ஒரு புத்தகத்தைக் காண நான் நாளை காலை நூலகம் திறக்கும்வரை காத்திருக்கத் தேவையில்லை. உடனே நான் தரவிறக்கம் செய்து நான் விரும்பும் புத்தகத்தைப் படிக்க முடியும். மேலும், இதற்கான பொருள்செலவும் குறைவு.
3. தனிநபர் உரிமை (Privacy)
ஒவ்வொருவரும் தனித்தனியே தன்னுடைய ஆசிரியரோடு இணைக்கப்படுகிறார். ஆக, மாணவர்கள் யாரோடும் வீணாகப் போட்டியிடவோ, ஒப்பீடு செய்துகொள்ளவோ அவசியமில்லை. என் படிப்பு எனக்கும் என் ஆசிரியருக்கும் மட்டுமே தெரியும்.
கற்றுக்கொடுத்தலுக்கு இவை எவ்வகையில் பயன்படுகின்றன?
1. கற்றலில் நெகிழ்வுத்தன்மை (Flexibility)
ஒரு நாளுக்கு இத்தனை மணி நேரங்கள், இவ்வளவு நிமிடங்கள், இங்கே இருக்க வேண்டும், அங்கே இருக்க வேண்டும் என்ற வரையறை இங்கே கிடையாது. 100 பக்கங்கள் உள்ள பாடப்புத்தகத்தை நான் ஒரே நாளிலும், அல்லது 10 மாதங்களிலும் என் வேகத்திற்கு ஏற்றாற்போல படிக்க முடியும்.
2. கூட்டுக் கற்றல் (Collaborative Learning)
மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி மொபைலில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் மெய்நிகர் முறையில் உரையாடவும், தகவல் பரிமாற்றம் செய்யவும் முடியும். மேலும், தங்களுடைய கற்றலை இணையரோடு அமர்ந்தும் கற்க முடியும். மேலும், மாணவர்-ஆசிரியர் கூட்டுத்தளமாக இத்தளம் அமையும்.
3. கலவைக் கற்றல் (Blended Learning)
மாணவர்கள் தங்கள் மொபைலோடும், மொபைல் வழியாக ஒருவர் மற்றவரோடும் உரையாட முடிவதால், அவர்களுடைய கற்றல் பல முறைகளின் கூட்டாக இருக்கிறது.
4. தொடர்புக் கற்றல் (Interactive Learning)
மாணவர்கள் தங்கள் ஐயங்களை ஆசிரியர்கள் அல்லது மற்ற மாணவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற இயலும்.
முறையின் பின்னடைவுகள் எவை?
- இக்கற்றல் முறையில் தனிமனித பொறுப்புணர்வும், சுதந்திரமும் மிக முக்கியம் என்பதால், இவ்வகைக் கற்றல் மேற்கல்வி முறையில்தான் இன்று அதிகமாக பரிந்துரைக்கப்படுகின்றது. பள்ளி மாணவர்களுக்கு இதை அறிமுகப்படுத்துமுன் நிறைய பயிற்சிகள் அவசியம்.
- சில கிராமங்களில் இணைய வசதி சிறப்பாக இருக்காது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களால் திறன்பேசிகள் வாங்க இயலாது. இந்த மாதிரியான சூழல்கள் இக்கற்றல்முறை பயனளிக்காது.
- சில மாணவர்களுக்கு உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளையும் இது உருவாக்கிவிடும். வெளிச்சமான திரையை அதிக நேரம் பார்ப்பதால் கண் பிரச்சினை, சோர்வு, கழுத்து வலி போன்றவையும், மேலும் எந்நேரமும் படிக்கலாம் என்ற நிலையில் தூக்கமின்மையும், உடல்பருமனும், ஹார்மோன்கள் மற்றும் செரிமானப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.
Tuesday, June 23, 2020
கலவைக் கற்றல்
ஆங்கிலத்தில் இதை 'Blended Learning' என அழைக்கிறார்கள். இது ஒரு புதிய கற்றல் முறை அல்ல. மாறாக, நாம் ஏற்கனவே செய்துகொண்டிருப்பதுதான்.நான் வகுப்பறையில் புதிய ஏற்பாட்டு கிரேக்கம் கற்றுக்கொடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம். முதலில், நான் கிரேக்க எழுத்துருக்களை மாணவர்களுக்கு கரும்பலகையில் எழுதிப் போடுகிறேன். இரண்டாவதாக, நான் அவற்றை அவர்களுக்கு அவற்றின் உச்சரிப்பைக் கற்பிக்கின்றேன். மூன்றாவதாக, எழுத்துருக்களும் உச்சரிப்புக்களும் கற்றுக்கொடுக்கும் காணொளி ஒன்றை அவர்களுக்குக் காண்பிக்கிறேன். நான்காவதாக, 5 நிமிடங்கள் ஓடக்கூடிய கிரேக்க மொழித் திரைப்படம் ஒன்றைக் காணொளியாகக் காட்டுகிறேன். ஐந்தாவதாக, மாணவர்களை இருவர் இருவராக நிற்க வைத்து அல்லது அமர வைத்து ஒருவர் மற்றவருக்கு எழுத்துருக்களை எழுதிக் காட்டவும், உச்சரித்துக் காட்டவும் சொல்கிறேன்.
ஆக, மாணவர்களின் கற்றல் ஐந்து நிலைகளில் நடக்கிறது:
அ. கரும்பலகையில் ஆசிரியரின் எழுத்து
ஆ. ஆசிரியரின் உச்சரிப்பு
இ. எழுத்து மற்றும் உச்சரிப்பு காணொளி
ஈ. கிரேக்க மொழி குறும்படம்
உ. நேருக்கு நேர் மாணவர்கள் உரையாடுதல்
வகுப்பின் இறுதியில் மாணவர்கள் கிரேக்க எழுத்துருக்களையும், உச்சரிப்பையும் கற்கின்றனர். இந்தக் கற்றலுக்கு ஐந்து முறைமைகள் 'கலந்து' பயன்படுத்தப்பட்டுள்ளதால், இதை நாம் 'கலவைக் கற்றல்' என அழைக்கிறோம்.
'ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கற்றலின் கலவை'
'வகுப்பறைக்குள் மற்றும் வகுப்பறைக்கு வெளியே கற்றலின் கலவை'
'ஆசிரியர்-மாணவர் மற்றும் மாணவர்-மாணவர் உரையாடலில் கற்றலின் கலவை'
'புத்தகம் வழி மற்றும் ப்ராஜெக்ட் வழி கற்றலின் கலவை'
'எழுத்து வழி மற்றும் பேச்சு வழி கற்றலின் கலவை'
'இயல்புசார் மற்றும் எண்ணியல் வழி கற்றலின் கலவை'
இப்படியாக, எந்த ஒரு கற்றல் முறைகள் இணைதலையும் நாம் 'கலவைக் கற்றல்' என்று அழைக்க முடியும்.
கலவைக் கற்றலில் என்ன நடக்கிறது?
அ. முகம் தெரியாமல் நடக்கும் ஆன்லைன் கற்றலை நேருக்கு நேர் பார்த்துக் கற்க மாணவர்களைத் தூண்டுகிறது.
ஆ. வகுப்பறையில் கற்கும் பாடத்தை மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே உள்ளவற்றோடு பொருத்திப் பார்க்க அவர்களுக்குக் கற்பிக்கிறது.
இ. ஆசிரியரின் செயல்பாடுகளை மாணவர்களின் படைப்பாற்றலோடு இணைக்கிறது.
ஈ. கணிணிசார் கற்றலையும் மரபுசார் கற்றலையும் இணைக்கிறது.
12 வகை கலவைக் கற்றல்
1. வெளியே-உள்ளே (Outside-In)
மாணவர்கள் தங்கள் அனுபவ அறிவைக் கொண்டு பாடத்தைப் புரிந்துகொள்தல்.
2. இணைச்சேர்க்கை (Supplemented)
மாணவர்கள் தாங்கள் ஏற்கனேவே பெற்றிருக்கும் அறிவை கற்றலின் அறிவோடு இணைத்தல்.
3. உள்ளே-வெளியே (Inside-Out)
மாணவர்கள் தாங்கள் வகுப்பில் கற்கும் ஒன்றை வெளியில் நடக்கும் ஒன்றோடு பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்தல்
4. ஃப்லெக்ஸ் (Flex)
வரிசையாக அமர்ந்திருக்கும் மாணவர்கள் ஒருவருக்கு அடுத்து இன்னொருவர் (ஒருவர் மற்றவருக்கு) என்று கருத்துக்களைப் பகிர்ந்துகொள்தல்.
5. தனிநபர் சுழற்சி (Individual Rotation)
மாணவர்கள் ஒவ்வொருவரும் எழுந்து எல்லாருக்கும் முன் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்தல்.
6. நிலையச் சுழற்சி (Station Rotation)
மாணவர்கள் வேறு வேறு கற்றல் தளங்களுக்கு மாறிச் சென்று கற்றல்.
7. ஆய்வகச் சுழற்சி (Lab Rotation)
இயற்பியல், வேதியியல், உயிரியில், கணிணி ஆய்வகங்கள் என மாறி மாறிச் செல்தல்.
8. தன்முனைப்பு கற்றல் (Self-Directed Learning)
தான் விரும்புவதை, தான் விரும்பும் விதத்தில் கற்றல்
9. ப்ராஜெக்ட் மையக் கற்றல் (Project-Based)
தாங்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒரு ப்ராஜெக்ட் (செய்முறைப் பயிற்சி) எடுத்து செய்தல்.
10. தொலைவுக் கற்றல் (Remote)
ஆன்லைன் வழி கற்றல்
11. தலைகீழ் வகுப்பறை (Flipped Classroom)
மாணவர்கள் ஆசிரியர்கள்போலக் கற்றுக்கொடுத்தல்.
12. திறன்மையக் கற்பித்தல் (Mastery-based)
ஒன்றில் சிறந்து விளங்கும் மாணவன் அதை மற்றவருக்குக் கற்பித்தல்.
ஆக, கற்றல் கலந்து இருந்தால் கற்றல் இனிக்கும். ஏனெனில், வாழ்க்கை போல கற்றலும் ஒரு கலவையே!
Monday, June 22, 2020
மொழிக் கற்பித்தல் முறை
இன்று பள்ளிகளில் இருமொழி மற்றும் மும்மொழித் திட்டங்கள் வழக்கத்தில் உள்ளன: தமிழ்-ஆங்கிலம், அல்லது தமிழ்-ஆங்கிலம்-ஹிந்தி, அல்லது ஹிந்தி-ஆங்கிலம்-பிரெஞ்சு, அல்லது ஆங்கிலம்-பிரெஞ்சு-ஜெர்மன் போன்ற பாடத்திட்டங்கள் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.மொழிகளை எப்படிக் கற்பிப்பது (Languge Teaching) என்பதை இங்கே நாம் காண்போம்.
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த உளவியல் அறிஞர், மொழிக் கற்பித்தலில், 'சஜஸ்டோபேடியா' (Suggestopedia) என்ற ஒரு முறையை 1970களில் அறிமுகம் செய்தார். 'Suggesion' மற்றும் 'pedagogy' என்னும் இரு வார்த்தைகளிலிருந்து வரும் வார்த்தைதான் 'suggestopedia.' இன்று இது 'desuggestopedia' என்றும் அழைக்கப்படுகின்றது.
செய்முறை
மாணவர்களின் கற்றலில், கற்றலின் சூழலும் முக்கியத்துவம் வகிக்கிறது எனச் சொல்கிறது இந்த முறை. எப்படி? எடுத்துக்காட்டாக, ஆடுகளம் திரைப்படத்தில் வரும் 'யாத்தே யாத்தே' பாடலில் வரும் 'ஆங்கிலோ-இண்டியன் சர்ச்' காட்சி வரும்போதெல்லாம் எனக்கு, என் முதல் பங்குத் தளமாகிய எல்லீஸ் நகர் நினைவிற்கு வரும். ஆக, ஒன்றை நினைவிற்குக் கொண்டுவர நான் இன்னொன்றை - குறிப்பாக, ஓவியம் அல்லது இசையை நான் பயன்படுத்த முடியும். இந்த முறைப்படி, வகுப்பில் பாடம் கற்றுக்கொடுக்கப்படும்போது பின்புலத்தில் இசை ஓடிக்கொண்டிருக்கும். இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கும் மாணவர்கள் அவற்றோடு தாங்கள் கற்கும் மொழியை இணைத்துக்கொள்வர். அதே இசையை அவர்கள் எங்காவது கேட்டால் அவர்கள் கற்றது நினைவிற்கு வரும். அதுபோல, அவர்கள் கற்றதை நினைவிற்குக் கொண்டுவர, அவர்கள் அந்த நேரத்தில் கேட்ட இசையை நினைவிற்குக் கொண்டுவந்தால் போதும்.
இதுதான் இந்த முறையின் அடிப்படை. ஆனால், இதையும் கடந்து இதற்குச் சில வழிமுறைகள் உள்ளன:
இந்தக் கற்பித்தல் முறை நான்கு நிலைகளில் நடக்கிறது:
அ. புரிந்துகொள்தல். ஆசிரியர் ஒரு புதிய மொழியின் இலக்கணம் மற்றும் வார்த்தைப் பொருள்களை முன் வைப்பார். பாடப் புத்தகங்களில் ஒரு பக்கம் புதிய மொழியும், இன்னொரு பக்கம் மாணவரின் தாய்மொழியும் இருக்கும்.
ஆ. பாடல்கள் இசைத்தல். ஏதாவது ஒரு பாடலின் பின்புலத்தில் ஆசிரியர் அந்தப் பாடத்தைச் சத்தமாக வாசிப்பார். சில நேரங்களில் மாணவர்களும் ஆசிரியரோடு இணைந்து வாசிப்பர். ஆசிரியர் சில நேரங்களில் அமைதியாக இருக்க, இசையின் பின்புலத்தில் மாணவர்கள் தாங்கள் கேட்டதை நினைத்துப்பார்ப்பர்.
இ. விரித்துரைத்தல். மாணவர்கள் தாங்கள் கற்றதை பாடல் அல்லது நாடகமாக வெளிப்படுத்துவர்.
ஈ. மொழிக் கற்றல். அப்படியே தொடர்ந்து மாணவர்கள் புதிய மொழியில் பேசத் தொடங்குவர்.
ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள்:
இந்த முறையைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
அ. புதிய மொழியில் சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். அதாவது, எனக்கு ஆங்கிலத்தில் புலமை இருக்கிறது என நான் எப்போது சொல்ல முடியும்? அந்த மொழியில் நான் சிந்திக்கும்போதுதான். ஆனால், பல நேரங்களில் நாம் தமிழில் சிந்தித்து, பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறோம். எனக்கு இத்தாலியன் சொல்லிக் கொடுத்த ஜூலியா அடிக்கடி சொல்வாள்: 'நீ இத்தாலியன் மொழியில் கனவு காண வேண்டும். அப்போதுதான் நீ மொழி கற்றுள்ளாய் என்று பொருள்!'
ஆ. எல்லா மாணவர்களின் ஐயங்களையும் தீர்ப்பவராக இருக்க வேண்டும்.
இ. தன் மொழியாற்றலைப் பயன்படுத்தி பாடல்கள், நாடகங்கள், கதைகள் உருவாக்கத் தெரிபவராக இருக்க வேண்டும்.
ஈ. எல்லாவற்றுக்கும் மேலாக, 'உன்னால் முடியும்' என்ற நேர்முகமான '...' மாணவர்களுக்கு வழங்குபவராக இருக்க வேண்டும்.
இறுதியாக,
இந்த முறையைப் பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தாலும், இன்னும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மொழியியல் வகுப்புக்களில் இம்முறையே பயன்பாட்டில் இருக்கின்றது.
Sunday, June 21, 2020
வென் வரைபடம்
பேட்லட் முறையில் உள்ள ஒரு வகை வரைபடத்திற்குப் பெயர் 'வென் வரைபடம்' (Venn Diagram)1880இல் ஜான் வென் என்பவர் கண்டுபிடித்த இந்த வரைபடம் இவருடைய பெயராலேயே அழைக்கப்படுகின்றது. இரண்டு அல்லது மூன்று பொருள்கள் அல்லது கருத்துருக்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைக் கண்டறியவும், வரிசைப்படுத்தவும் இந்த வரைபடம் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக,
விவிலியம் கற்பித்தலில், ஒத்தமைவு நற்செய்திகள் (Synoptic Gospels) என்று சொல்லப்படுகின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தியாளர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் பதிவு செய்ய, விளக்கிச் சொல்ல நான் இந்த வரைபடத்தை வகுப்பில் பயன்படுத்துவதுண்டு.
மத்தேயுவுக்கும், மாற்குவுக்கும் பொதுவான பகுதி,
மாற்குவுக்கும், லூக்காவுக்கும் பொதுவான பகுதி,
லூக்காவுக்கும், மத்தேயுவுக்கும் பொதுவான பகுதி,
மூன்று நற்செய்தியாளர்களுக்கு இடையேயான பொதுவான பகுதி,
மற்றும் ஒவ்வொரு நற்செய்தியாளருக்கும் உரிய தனிப்பட்ட பகுதி ஆகியவற்றை இதைக் கொண்டு எளிதாக விளக்க முடியும் (காண். படம்).
வரைபடத்தின் பயன்கள்:
- மாணவர்கள் ஒரே படத்தின் வழியாக நிறையக் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
- ஒற்றுமை, வேற்றுமைகளைக் கூர்ந்து கவனிக்க முடியும்.
வரைபடத்தின் பின்னடைவுகள்:
- சில நேரங்களில் அனைத்துத் தரவுகளையும் ஒரே வரைபடத்திற்குள் கொண்டுவர இயலாது.
- மாணவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்றால் வித்தியாசங்களைப் புரிந்துகொள்வதில் குழப்பம் அடைவர்.
Friday, June 19, 2020
பேட்லட்
வகுப்பறையில் ஊடாடும் கற்பித்தல் முறையில் பயன்படுத்தப்படும் ஒரு கருவி 'பேட்லட்.' 'பேட்லட்' என்பது ஒரு வலைத்தளம். மெய்நிகர் கற்றலில் இந்த வலைதளம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, கான்செப்ட் ரொம்ப எளிது. 'பேட்' (Pad) என்றால் எழுத உதவும் பொருள். 'பேட்லட்' (Padlet) என்பது குட்டிக் கருவி. இதை மெய்நிகர் முறையில் பயன்படுத்தவில்லை என்றாலும், நாம் சார்ட் பேப்பர் கொண்டும் பயன்படுத்தலாம்.இக்கற்பித்தல் முறையில் நிறைய 'சார்ட்' வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை இங்கே காண்போம்:
ஆங்க்கர் சார்ட்ஸ் (Anchor Charts)
பாடம் தொடர்பான தரவுகளையும் பதிவுகளையும் வகுப்பறை முழுவதும் தொங்க விடுவது. இவற்றைக் காண்பதால் மாணவர்கள் தங்களுடைய பாடம் தொடர்பான ஐயங்களைத் தாங்களே வாசித்துக் களைந்துகொள்வர். மேலும், அவர்கள் தங்களுடைய கருத்துக்களை மேம்படுத்தவும், ஒருவர் மற்றவரோடு கருத்துக்களை விவாதிக்கவும் அவர்களால் இயலும். ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்தே இதை உருவாக்கலாம்.
எடுத்துக்காட்டாக, உயிரியில் பாடத்தில் 'நரம்பியல் அமைப்பு' என்னும் தலைப்பைப் படிக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். மனித உடல், நரம்புத் தொகுப்பு, நரம்பு அமைப்பு, நரம்புகளின் இயக்கம் என பல சார்ட்களை உருவாக்கி, அந்தப் பாடம் முடியும் வரை, அல்லது முடிந்த பின்னும் வகுப்பில் தொங்கவிடலாம்.
இவற்றின் வழியாக மாணவர்களின் படைப்பாற்றல் வளரும்.
மாணவர்கள் புதிய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதோடு, தாங்கள் ஏற்கெனவே கற்றதோடு தங்கள் கற்றலை இணைத்துப் பார்ப்பர்.
தாங்கள் கற்கும் பாடங்களை எளிதில் மனதில் பதித்துக்கொள்வர்.
செய்வதற்கு அதிக நேரம் ஆகும், மற்றும் பொருள்செலவும் உண்டு - இவைதான் இந்த முறையின் பின்னடைவுகள்.
Thursday, June 18, 2020
பல்வகை நுண்ணறிவுத் திறன்கள்
நம் வகுப்பில் நாம் எந்த மாணவரையாவது சுட்டிக் காட்டி, 'ஹீ இஸ் வெரி க்ளவர்' என்று சொன்னால், உடனடியாக நம் எண்ணம் எல்லாம், 'அந்த மாணவன் நன்றாகப் படிக்கக் கூடியவன்' என்றும், 'வகுப்பில் முதல் மாணவன்' என்றும், 'நல்ல நினைவாற்றல் உள்ளவன்' என்றும், 'அதிக மதிப்பெண்கள் பெறக்கூடியவன்' என்றும் எண்ணத் தோன்றுகிறது.ஏனெனில், இதுவரை 'அறிவு' அல்லது 'நுண்ணறிவு' என்றால் நாம், அது கணிதம் அல்லது மொழி சார்ந்தது என்றும், அதை நினைவாற்றல் வழியே தெரிந்துகொள்ள முடியும் என்று நினைத்துள்ளோம்.
நம் எண்ணத்தைப் புரட்டிப் போட்டு, எல்லா மாணவர்களும் க்ளவர் என்று நமக்குச் சொல்லி, பல்வகை நுண்ணறிவுத் திறன்கள் (Multiple Intelligences - MIs) என்னும் கருதுகோளை முன்வைத்தவர் ஹாவர்ட் கார்ட்னர் (2011) என்பவர்.இவர் நுண்ணறிவை ஒன்பது வகைகளாகப் பிரிக்கின்றார்:
1. மொழிசார் நுண்ணறிவு (Verbal-Linguistic Intelligence) - வார்த்தைகளை மையப்படுத்திய அறிவு
2. எண்ணியல் நுண்ணறிவு (Mathematical-Logical Intelligence) - கணிதம் மற்றும் தர்க்கத்தை மையப்படுத்தியது
3. இடம்சார் நுண்ணறிவு (Visual-Spatial Intelligence) - படங்கள் மற்றும் இடங்களை மையப்படுத்தியது
4. இசைசார் நுண்ணறிவு (Musical Intelligence) - இசை மற்றும் கலைகளை மையப்படுத்தியது
5. தன்பிரதிபலிப்பு நுண்ணறிவு (Intrapersonal Intelligence) - தன்னையே அறிந்துகொள்தலை மையப்படுத்தியது
6. உடலியக்க நுண்ணறிவு (Physical-Kinesthetic Intelligence) - உடல்சார் அனுபவங்கள் மற்றும் உடலின் இயக்கங்களை மையப்படுத்தியது
7. சமூக நுண்ணறிவு (Interpersonal Intelligence) - ஒருவர் மற்றவரோடு உள்ள உறவுநிலைகளை மையப்படுத்தியது
8. இயற்கைசார் நுண்ணறிவு (Naturalistic Intelligence) - இயற்கை பற்றிய ஆர்வநிலையில் தொடங்கித் தொடர்வது
9. இருத்தல்சார் நுண்ணறிவு (Existential Intelligence) - மனித வாழ்வின் எதார்த்தங்களைப் பற்றிய அறிவு.
ஒரு வகுப்பறையில் உள்ள மாணவர்களில் மேற்காணும் ஒன்பது நுண்ணறிவுத் திறன்களும் இருக்கும். அப்படி இருக்க, நாம் நினைவாற்றல் அல்லது மொழியை மையப்படுத்திய அறிவை மட்டும் வழங்குவது எப்படி சால்பாக இருக்க முடியும்?
மேற்காணும் அனைத்து நுண்ணறிவுத்திறன்களும் வகுப்பறையில் வளர்க்கப்பட என்ன செய்ய வேண்டும்?
1. தனிப்பட்ட அக்கறை
ஓர் ஆசிரியர் தன்னுடைய மாணவர்களை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்க வேண்டும். மாணவர்களோடு உள்ள நெருங்கிய தொடர்பில்தான் இதை வளர்க்க முடியும். மேலும், மாணவர்கள் வகுப்பறையில் இருப்பதை விட வகுப்பறைக்கு வெளியே தான் தங்களை முற்றிலும் வெளிப்படுத்துவார்கள்.
2. பாடங்களை வகைப்படுத்துதல்
மாணவர்களின் ஒன்பது அறிவை வளர்க்கும் முறையில் வகுப்புக்களை ஒவ்வொரு நாள் அல்லது ஒவ்வொரு பாடவேளை அடிப்படையில் வகைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
3. கற்பித்தலின் எல்கையை விரிவுபடுத்துதல்
மாணவர்களின் நுண்ணறிவுத்திறனைக் கண்டறியுமுன் ஆசிரியர் தன்னுடைய திறனைக் கண்டறிந்து, தன் திறனை ஆழப்படுத்தவும், மற்றவை பற்றிய அறிதலைப் பெறவும் வேண்டும்.
Wednesday, June 17, 2020
தன்முனைப்புக் கற்றல்
தன்முனைப்புக் கற்றல் என்பதை ஆங்கிலத்தில் எஸ்.டி.எல், Self-Directed Learning (SDL) என்று அழைக்கின்றனர்.இதன் பொருள் என்ன?
வாழ்வின் வெற்றியாளர்கள் என்று நாம் கருதுகின்ற பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சுக்கெர்பெர்க் போன்றவர்கள் பள்ளி அல்லது கல்லூரிக் கல்வியை நிறைவு செய்யாதவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் கற்றலை ஒருபோதும் முடித்துக்கொள்ளவே இல்லை. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி? அதுதான் தன்முனைப்புக் கற்றல். அதாவது, தனக்கு எது தேவை என்பதை அறிந்து, அதைக் கற்று, கற்றதன் வழி நிற்றல் அல்லது அந்த அறிவைப் பயன்படுத்துதல். இன்று தன்முனைப்புக் கற்றலுக்கு நிறைய நூல்களும், காணொளிகளும், இணைய தளங்களும் உதவி செய்கின்றன.
இதே தன்முனைப்புக் கற்றலை நாம் வகுப்பறையில் ஒரு கற்பித்தல் முறையாகப் பயன்படுத்தலாம்.
எப்படி?
நான் ஒரு புவியியில் ஆசிரியை என வைத்துக்கொள்வோம். இந்தியாவின் நிலப்பரப்பு என்பது பொதுவான அலகு. இந்த அலகை நான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களே தங்கள் கற்றல் முறையை வடிவமைத்துக்கொள்ளுமாறு சொல்வேன். அப்படிச் செய்யும்போது, ஒரு மாணவர் இந்தியாவின் நிலப்பரப்பு பற்றிய ஒரு கல்வியியல் இணையதளத்தை உருவாக்கலாம், அல்லது ஒரு வலைப்பூவை உருவாக்கலாம். இன்னொருவர் நிலப்பரப்பு பற்றிய ஒரு வரைபடத்தை உருவாக்கலாம். இன்னொருவர் இந்த நிலப்பரப்பில் பயணம் செய்த ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தை எடுத்துப் படிக்கலாம். இன்னொருவர் இந்த நிலப்பரப்பில் வாழும் மனிதர்களைப் பற்றிப் படிக்கலாம். ஆக, நிலப்பரப்பு என்னும் பாடம் ஒன்றுதான். ஆனால், அதை ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய இரசனைக்கு ஏற்றவாறு அணுகுகிறார்.
இதன் பயன்கள் எவை?
- மாணவர்கள் தாங்களே கற்றல் முறையைத் தெரிவு செய்வதால் கற்றலில் ஆர்வம் காட்டுவர்.
- மாணவர்களின் தனித்தன்மையை இது ஊக்குவிக்கும்.
- மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்துவர்.
- ஒரு மாணவரின் கற்றல் இன்னொரு மாணவருக்கு புதிய பொருளைக் கொடுக்கும்.
- ஒரே பாடத்தைப் பற்றிய நிறையக் கண்ணோட்டங்கள் கிடைக்கும்.
- மாணவர்களின் கற்றலுக்கு இம்முறை சுதந்திரத்தைக் கொடுக்கும்.
- இவ்வகை அறிவு வெறும் மூளைசார்ந்ததாக இல்லாமல் செயல்சார்ந்ததாக இருக்கும்.
- இந்தப் பாடம் வாழ்வு தொடர்புடையதாக இருப்பதால், இதன் வழியாக மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் தேடுகின்ற தொழில் அறிவைப் பெற்றுக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, ஃபோட்டோ எடுக்கும் ஆர்வம் உடைய மாணவி, அந்தத் திறமையை இதன் வழியாக வளர்த்துக்கொள்வார்.
இதை எப்படிச் செயல்படுத்துவது?
அ. பொறுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
ஒவ்வொரு மாணவரும் தன் கற்றலுக்கும், தன் வாழ்க்கைக்கும், தன் தெரிவுகளுக்கும் தானே பொறுப்பு என்பதை உணருமாறு ஆசிரியர் அவர்களைத் தூண்டி எழுப்ப வேண்டும். பல தெரிவுகளைப் பற்றியும், படிப்பதன் பல கோணங்களைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆ. குட்டி குட்டி இலக்குகளை நிர்ணயித்து அதை அடையக் கற்றுக் கொடுக்க வேண்டும்
இந்தியாவின் நிலப்பரப்பு பற்றிய ஒரு ஃபோட்டோ ஆல்பம் உருவாக்க ஒரு மாணவி ஆர்வம் காட்டுகிறார் என்றால், முதலில் அவர் ஒரு கேமரா வாங்க வேண்டும். ஆக, கேமரா வாங்குதல் முதல் இலக்கு. இடங்களுக்குப் பயணம் செய்தல் இரண்டாவது இலக்கு. படம் எடுத்தல் மூன்றாவது இலக்கு. இப்படி ஒவ்வொரு இலக்கையும் நிர்ணயித்து, அந்த இலக்கை ஒவ்வொன்றாக அடைய மாணவிக்கு ஆசிரியை உதவ வேண்டும்.
இ. நேரம் எடுத்தல்
நாம் எதற்கு நம் நேரத்தைக் கொடுக்கிறோமோ அது வளரும், எதற்கு நேரத்தைக் கொடுக்கவில்லையோ அது தேயும். மாணவர்கள் தங்களுடைய தன்முனைப்புக் கற்றலுக்குப் போதுமான நேரத்தை செலவழிக்கிறார்களா என்றும், அந்த நேரத்தை பயன்படுத்தி அந்தந்த நாளின் இலக்குகளை அடைகிறார்களா என்பதையும் ஆசிரியர் மேற்பார்வையிட வேண்டும்.
ஈ. முதன்மையானதை முதன்மையானதாகச் செய்ய வேண்டும்
மாணவர்கள் தங்கள் கற்றலில் முதன்மைகளை நெறிப்படுத்திக்கொள்ளவும், அந்த முதன்மைகளைச் சரியாக வைத்துக்கொள்தலும் வேண்டும்.
உ. தன்னூக்கம் (self-motivation)
மாணவர்கள் தன்னூக்கம் கொண்டிருத்தலை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர் மேற்பார்வை செய்தால்தான் மாணவர் படிப்பார் என்றால் இந்த முறை தோல்வியில் முடியும். மாறாக, ஒவ்வொரு மாணவரு; தன்னூக்கத்தோடு தன் கடமைகளைச் சரியாகச் செய்தால் கற்றல் இனிதாகும்.
இக்கற்றலின் நான்கு படிகள் எவை?
அ. மாணவர்களின் தயார்நிலையை ஆய்வு செய்து உறுதி செய்வது
தயார்நிலையில் இல்லாத மாணவர்கள் நேரத்தை வீணடிப்பர். மேலும், மாணவர்களின் தயார்நிலையோடு இணைந்து, அக்கற்றலைச் செய்வதற்கான கருவிகளும் வசதிகளும் இருக்கிறதா என்பதை ஆசிரியர் உதவி செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் நிலப்பரப்பு பற்றியை வலைதளத்தை உருவாக்க விழையும் மாணவருக்குத் தேவையான கணிணி, இணைய வசதி, மற்றும் மென்பொருள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
ஆ. கற்றல் இலக்குகளை நிர்ணயித்தல்
என்ன படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், எவ்வளவு நாள்களில் படிக்க வேண்டும், எப்போது ஆசிரியரைச் சந்திக்க வேண்டும், எப்படி கற்றல் திறனாய்வு செய்யப்படும் என எல்லாவற்றையும் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், இவ்வகைக் கற்றலில் தடைகள் ஏற்படின் அவற்றைச் சரிசெய்வதற்கான ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, நிலப்பரப்பை ஃபோட்டோ எடுக்கச் செல்லும் மாணவியோடு யார் உடன் செல்வார் என நிர்ணயிப்பது.
இ. ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரே
இந்தக் கற்றல் முறையில் ஒவ்வொரு மாணவரும் ஓர் ஆசிரியர் என்பதால் அவருக்குரிய பொறுப்புக்களை வரையறுத்து, அவற்றை அவர் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
ஈ. கற்றலைத் திறனாய்வு செய்வது
நாள், வார, மாத இறுதியில் திறனாய்வு செய்து, மாணவர்களின் வளர்ச்சியைக் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தைவிட அதிக நேரம் எடுப்பதுபோல தெரிந்தால் மாற்று ஏற்பாடுகளை வரையறுக்க வேண்டும்.
Tuesday, June 16, 2020
ராஃப்ட் (RAFT) முறை
'நாம் பேசும்போது நோக்கம் எதுவும் இல்லாமல் பேச முடியும். ஆனால், எழுதும்போது நோக்கம் இல்லாமல் எழுத முடியாது.'
அல்லது
'நாம் பேசும் வார்த்தைகளுக்கு நோக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எழுதும் வார்த்தைகளுக்கு நோக்கம் இல்லாமல் இருக்க முடியாது.'
நாம் தினமும் நிறைய எழுதுகின்றோம். ஆனால், ஒவ்வொரு முறையும் நாம் வௌ;வேறாக எழுதுகிறோம். எப்படி?
நான் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறேன் என வைத்துக்கொள்வோம். அந்த விண்ணப்பத்தை நான் எழுதும் முறையும், அந்த விண்ணப்பத்தைக் கொண்டு செல்லும் உறையின் மேல் நான் எழுதும் முகவரியின் முறையும் வௌ;வேறாக இருக்கும்.
இதுவரை மாணவர்கள் வகுப்பில் பேசுவது அல்லது பகிர்ந்து கொள்வது எப்படி என்று பார்த்தோம். இன்று மாணவர்களின் எழுத்துப் பயிற்சி பற்றிப் பார்ப்போம்.
மாணவர்களை வகுப்பறையிலும் வகுப்பறைக்கு வெளியிலும் படைப்பாற்றலோடும் கட்டமைப்போடும் எழுதுவதற்குப் பயிற்றுவிக்கும் முறைதான் ராஃப்ட் முறை (RAFT Method). இந்த முறையில் மாணவர்கள் மிக எளிதாக தங்களுடைய எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்வர்.
ராஃப்ட் முறை என்றால் என்ன?
நாம் எல்லாரும் பேசுகிறோம். ஆனால் நாம் எல்லாரும் எழுதுவதில்லை. பேசுவதற்குத் தேவைப்படும் ஆற்றலை விட எழுதுவதற்கு ஆற்றல் நிறையத் தேவைப்படும். நாம் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், எதை வேண்டுமானாலும் எழுத முடியாது. எழுதுகின்ற வார்த்தைகளின் வரையறை, பயன்பாடு, வாசிப்பவரின் புரிந்துகொள்ளும் ஆற்றல், பயன்படுத்தும் எழுதுபொருள் என அனைத்தும் என் எழுத்துக்களின் மேல் தாக்கங்களை ஏற்படுத்தும். இந்தத் தாக்கங்களை மாணவர்கள் புரிந்துகொள்ள உதவும் முறைதான் 'ராஃப்ட் முறை'.
இந்த முறையை ஏன் பயன்படுத்துகிறோம்?
ராஃப்ட் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
'ராஃப்ட்' என்பது நான்கு ஆங்கில வார்த்தைகளின் (Role, Audience, Format, Topic) சுருக்கக் குறியீடு ஆகும்.
Audience: யாருக்கு எழுதுவது? To whom are you writing? A senator? Yourself? A company?
Format: எதற்காக அல்லது எப்படி எழுதுவது? In what format are you writing? A diary entry? A newspaper? A love letter?
Topic: என்ன எழுதுவது? What are you writing about?
இதை வகுப்பறையில் எப்படி செயல்படுத்துவது?
ஆங்கில வகுப்பில், 'ஓர் இளவலின் டைரிக் குறிப்பு' (The Diary of a Young Girl by Anne Frank) என்ற பாடப் பகுதியை நடத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். இப்போது மாணவர்களுக்கு, 'ராஃப்ட்' (RAFT) என்றால் என்ன என்பதைக் கற்றுத் தர வேண்டும். பின், இந்த டைரிக் குறிப்பின் ஒரு பகுதியை எடுத்து,
யார் எழுதுகிறார்? ஒரு சிறுமி.
யாருக்கு எழுதுகிறார்? தனக்கு.
எதற்காக அல்லது எப்படி எழுதுகிறார்? டைரிக்குறிப்பாக, தான் பின்னால் திறந்து பார்ப்பதற்காக.
என்ன எழுதுகிறார்? தன் வாழ்க்கை நிகழ்வையும் அது தன்மேல் ஏற்படுத்தும் தாக்கத்தையும்.
இப்போது, மாணவர்கள் தாங்கள் விடுமுறையில் கண்டு மகிழ்ந்த சுற்றுலாத் தலம் குறித்து, கடிதம், டைரிக்குறிப்பு, செய்தித்தாள் பதிவு போன்றவற்றில் ஒன்றை எழுதுமாறு பயிற்சி அளிக்கலாம்.
To download the RAFT template please click here:
RAFT Template
அல்லது
'நாம் பேசும் வார்த்தைகளுக்கு நோக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எழுதும் வார்த்தைகளுக்கு நோக்கம் இல்லாமல் இருக்க முடியாது.'
நாம் தினமும் நிறைய எழுதுகின்றோம். ஆனால், ஒவ்வொரு முறையும் நாம் வௌ;வேறாக எழுதுகிறோம். எப்படி?
நான் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறேன் என வைத்துக்கொள்வோம். அந்த விண்ணப்பத்தை நான் எழுதும் முறையும், அந்த விண்ணப்பத்தைக் கொண்டு செல்லும் உறையின் மேல் நான் எழுதும் முகவரியின் முறையும் வௌ;வேறாக இருக்கும்.
இதுவரை மாணவர்கள் வகுப்பில் பேசுவது அல்லது பகிர்ந்து கொள்வது எப்படி என்று பார்த்தோம். இன்று மாணவர்களின் எழுத்துப் பயிற்சி பற்றிப் பார்ப்போம்.
மாணவர்களை வகுப்பறையிலும் வகுப்பறைக்கு வெளியிலும் படைப்பாற்றலோடும் கட்டமைப்போடும் எழுதுவதற்குப் பயிற்றுவிக்கும் முறைதான் ராஃப்ட் முறை (RAFT Method). இந்த முறையில் மாணவர்கள் மிக எளிதாக தங்களுடைய எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்வர்.
ராஃப்ட் முறை என்றால் என்ன?
நாம் எல்லாரும் பேசுகிறோம். ஆனால் நாம் எல்லாரும் எழுதுவதில்லை. பேசுவதற்குத் தேவைப்படும் ஆற்றலை விட எழுதுவதற்கு ஆற்றல் நிறையத் தேவைப்படும். நாம் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், எதை வேண்டுமானாலும் எழுத முடியாது. எழுதுகின்ற வார்த்தைகளின் வரையறை, பயன்பாடு, வாசிப்பவரின் புரிந்துகொள்ளும் ஆற்றல், பயன்படுத்தும் எழுதுபொருள் என அனைத்தும் என் எழுத்துக்களின் மேல் தாக்கங்களை ஏற்படுத்தும். இந்தத் தாக்கங்களை மாணவர்கள் புரிந்துகொள்ள உதவும் முறைதான் 'ராஃப்ட் முறை'.
இந்த முறையை ஏன் பயன்படுத்துகிறோம்?
- மாணவ எழுத்தாளர்களை உருவாக்க.
- ஒரு தலைப்பை பல கோணங்களில் சிந்தித்துப் பார்க்கும் திறன் பெற.
- வாசிப்பவர்களையும் அவர்களின் மனப்பாங்கையும் அறிந்துகொள்ள.
- வித்தியாசமான எழுத்து முறைகளைக் கண்டறிய.
- கருத்துக்களைச் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி, சரியான விதத்தில் எடுத்தியம்ப.
ராஃப்ட் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
'ராஃப்ட்' என்பது நான்கு ஆங்கில வார்த்தைகளின் (Role, Audience, Format, Topic) சுருக்கக் குறியீடு ஆகும்.
Role: யார் எழுதுவது? Who are you as the writer? A movie star? The President? A plant?
Audience: யாருக்கு எழுதுவது? To whom are you writing? A senator? Yourself? A company?
Format: எதற்காக அல்லது எப்படி எழுதுவது? In what format are you writing? A diary entry? A newspaper? A love letter?
Topic: என்ன எழுதுவது? What are you writing about?
இதை வகுப்பறையில் எப்படி செயல்படுத்துவது?
ஆங்கில வகுப்பில், 'ஓர் இளவலின் டைரிக் குறிப்பு' (The Diary of a Young Girl by Anne Frank) என்ற பாடப் பகுதியை நடத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். இப்போது மாணவர்களுக்கு, 'ராஃப்ட்' (RAFT) என்றால் என்ன என்பதைக் கற்றுத் தர வேண்டும். பின், இந்த டைரிக் குறிப்பின் ஒரு பகுதியை எடுத்து,
யார் எழுதுகிறார்? ஒரு சிறுமி.
யாருக்கு எழுதுகிறார்? தனக்கு.
எதற்காக அல்லது எப்படி எழுதுகிறார்? டைரிக்குறிப்பாக, தான் பின்னால் திறந்து பார்ப்பதற்காக.
என்ன எழுதுகிறார்? தன் வாழ்க்கை நிகழ்வையும் அது தன்மேல் ஏற்படுத்தும் தாக்கத்தையும்.
இப்போது, மாணவர்கள் தாங்கள் விடுமுறையில் கண்டு மகிழ்ந்த சுற்றுலாத் தலம் குறித்து, கடிதம், டைரிக்குறிப்பு, செய்தித்தாள் பதிவு போன்றவற்றில் ஒன்றை எழுதுமாறு பயிற்சி அளிக்கலாம்.
To download the RAFT template please click here:
RAFT Template
Saturday, June 13, 2020
வல்லுநர்
இன்றைய நாளில் கிறிஸ்தவர்கள் மறைவல்லுநரும், அருள்நெறியாளரும், புனிதருமான பதுவை நகர் அந்தோனியாரின் திருநாளைக் கொண்டாடுகிறது.இவருடைய மறையுரைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மீன்களும் இவருடைய போதனையைக் கேட்டன. கழுதையும் இவர் நற்கருணையைத் தூக்கிச் சென்ற போது மண்டியிட்டு வணங்கியது.
இவரின் இந்தப் புலமைக்குக் காரணம் மூன்று:
ஒன்று, இவர் தன் கைகளில் ஏந்திய விவிலியம்.
இரண்டு, அந்த விவிலியத்தில் துள்ளி விளையாடும் குழந்தை இயேசு.
மூன்று, இன்னொரு கையில் திருச்சிலுவை.
வகுப்பறையில் பாடம் நடத்திய மறைவல்லநர் அல்லர் இவர். மாறாக, தன் நாவால் இறைவார்த்தையை நன்கு அறிவித்தவர். அந்த இறைவார்த்தையை அறிவித்ததால் அதற்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.
இன்றைய ஆசிரியர்கள் தாங்கள் எதில் வேரூன்றியிருக்கிறார்கள் என்பதை அறிதல் நலம்.
Friday, June 12, 2020
மாணவர் உலகம்
இன்றைய மாணவர் உலகத்தின் கூறுகளாக நாம் ஐந்தைக் குறிப்பிடலாம்.1. உலகம் தட்டையானது (The World is Flat)
நாம் படிக்கும்போது, 'உலகம் உருண்டையானது' என்று நமக்குச் சொல்லப்பட்டது. ஆனால், மாணவர்கள் வாழும் இன்றைய உலகம் 'தட்டையானது.' உருண்டையான உலகத்தில் ஒருவர் மேலிருப்பர், இன்னொருவர் கீழிருப்பார். ஆனால், தட்டையான உலகத்தில் எல்லாரும் ஒரே சமதளத்தில் நிற்க வேண்டும். எப்படிப்பட்டவராக ஒருவர் இருந்தாலும் அவர் ஒரே ஓடுகளத்தில் ஓட வேண்டும். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தது மின்னஞ்சல். மின்னஞ்சலில் நுழைய நமக்கு லாக்இன் ஐடியும் பாஸ்வேர்டும் வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். மின்னஞ்சலில் யார் நுழைய வேண்டுமானாலும் இந்த இரண்டையும் பெற்றிருக்க வேண்டும். ஆக, அனைவரும் சமம் என்ற நிலையில் வளர்கிறார்கள் இன்றைய மாணவர்கள். படியில் ஏற முடியாத மாணவர்கள் இன்று லிஃப்ட்டில் ஏறிச் செல்கிறார்களே தவிர, படியில் நின்று அண்ணாந்து பார்ப்பதில்லை.
2. யோசி - மாத்தி யோசி (Think - Think Different)
யோசனையும், சிந்தனையும், மாறுபட்ட சிந்தனையும்தான் உலகை வெல்லும் என்பது இன்றைய மாணவர்களின் கேடயம். யோசிக்க மறுப்பவர்கள் இன்னொருவரிடம் யாசிக்க வேண்டும் என்பதும் எதார்த்தம். 'இது ஏன் இப்படி இருக்கிறது!' என்று ஆச்சர்யப்பட்ட மாணவர்கள் மாறி, 'இது ஏன் இப்படி இருக்கக் கூடாது?' என்று மாற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
3. கண் சிமிட்டு நேரம் (Blink)
யோசித்தல் என்பது இன்றைய நாளில் உடனே முடிவெடுப்பது. கண் சிமிட்டு நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் இன்று. ஒரு கார் வாங்க நம் அப்பா சென்றால், முதலில் போய் விசாரிப்பார். பின் இரண்டு மூன்று ஷோரூம்கள் செல்வார். ஒரு நாள் ஓட்டிப் பார்ப்பார். இறுதியாக, முன்பதிவு செய்வார். ஆனால், இன்று, முதலில் முன்பதிவு. மற்றவை அப்புறம். காரில் பிரச்சனை என்றால் காரை மாற்றிக் கொள்ளலாம். இப்படி நிறைய சாய்ஸ். ஆக, கண் சிமிட்டும் நேரத்தில் முடிவெடுப்பவர்கள்தாம் இன்றைய உலகில் வாழ முடியும். அல்லது போட்டி போட்டு இன்னொருவர் அதை வாங்கிச் சென்றுவிடுவார்.
4. 24 மணி நேரம் 7 நாள் (24 x 7)
பகல் - இரவு என்ற பிளவும், வேலைநாள் - விடுமுறை என்ற வித்தியாசமும் இன்று மாறிவிட்டது. எல்லா நேரமும் பகல்தான், இரவுதான். எல்லா நாள்களும் வேலைநாள்கள், விடுமுறை நாள்கள்தாம். எந்நேரமும் எதையும் செய்யலாம். 24 மணி நேரங்கள் கற்றல், இயக்கம் என எல்லாம் மாறிவிட்டதால், நாடுகளுக்கு இடையேயான பிளவும் குறைந்துவிட்டது.
5. எனக்கு இப்போதே வேண்டும் (I Want It Now)
'வறுமையில் இருப்பவர்கள் அல்லவா பொறுமையைப் பற்றி பேச வேண்டும்' என்று காந்தா மோகனிடம் ரத்தக் கண்ணீர் திரைப்படத்தில் சொல்வார். இன்றைய உலகம் 'உடனடி உலகம்.' உடனடியாகப் பணம் வேண்டும், பொருள் வேண்டும், வெற்றி வேண்டும்.
மாணவர்களின் இந்த உலகத்தைப் புரிந்துகொள்தல் நலம்.
Thursday, June 11, 2020
குறைவும் நிறைவே
என்னைச் சந்தித்த ஒரு தாய் தன் மகளுக்கு அறிவுத்திறனில் குறைபாடு உள்ளது எனவும், அவளுக்காக செபிக்குமாறும் கேட்டுக்கொண்டாள். அறிவுத்திறன் குறைபாடு, நினைவுத்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு, உடல் வளர்ச்சி குறைபாடு என பல குழந்தைகளை நாம் பார்க்கின்றோம்.ப்ராய்டு அவர்களின் கருத்துப்படி, நாம் அனைவருமே மனவளர்ச்சி குன்றியவர்களே! அளவுதான் ஒவ்வொரு ஆளுக்கும் மாறுபடும்!
மாணவர்களின் குறைவை ஆசிரியர்கள் சரியான விதத்தில் எதிர்கொள்தல் அவசியம்.
தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் தன்னுடைய இறுதி நாள்களில் தன் தாயின் அறையைச் சுத்தம் செய்யும்போது அதில் ஒரு கடிதத்தைக் கண்டுபிடிக்கிறார். அதில், 'உங்கள் மகன் ஒன்றுக்கும் உதவாதவன். அவன் அறிவுத்திறன் குறைவுடையவன். அவனுக்கு நாங்கள் சொல்வது புரிவதில்லை. தயவு செய்து அவனை உங்கள் இல்லத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள்' என அவருடைய தொடக்கக் கல்வி வகுப்பாசிரியர் எழுதிய கடிதத்தைக் கண்டுபிடிக்கிறார். ஆனால், அந்தக் கடிதத்தைத் தாயிடம் கொண்டு வந்து கொடுத்தபோது, அந்தத் தாய், 'உங்கள் மகன் வெகு எளிதாக எதையும் கற்றுக்கொள்கிறான். அவனுடைய அறிவுத்திறனோடு யாரும் போட்டி போட முடியாது. நாங்கள் சொல்லித் தராததையும் அவன் கற்றுக்கொள்கிறான். அவனை உங்கள் இல்லத்திலேயே நீங்கள் பயிற்றுவித்தால் அவன் இன்னும் பலவற்றைக் கற்றுக்கொள்வான்' என்று அவருக்கு வாசித்துக் காட்டியதை நினைவுபடுத்துகிறார்.
ஆக, தன்னுடைய குறையை தான் அறியாத வண்ணம் மறைத்து, அதை நிறைவாக மாற்றிய பெருமை எடிசனின் தாயைச் சாரும் (She is Nancy Elliot Edison, in Photo).
அவள் தன் மகன் என்பதால் அப்படிப் பார்த்தாள்.
அவ்வாறே, ஆசிரியர்களும் தங்களுடைய மகன் அல்லது மகள் என்று பார்க்கும்போது, குறைவிலும் நிறைவு காண்பர்.
ஆனால், உண்மை இதுதான்.
என் வகுப்பில் அவன் மாணவன்.
அவனுடைய வீட்டில் அவன் மகன்.
அவன் அங்கே மகன் என்றால், இங்கே எனக்கும் மகனாக இருக்கலாமே! ஏன் மாணவனாக இருக்க வேண்டும்?
Wednesday, June 10, 2020
மற்றவரின் ஞானம்
ஆங்கிலத்தில் இந்த முறைமையை 'Wisdom From Another' என்று அழைக்கின்றனர்.குழு விவாதத்திலோ, அல்லது தனிநபர் தெளிவிலோ ஒருவர் பெற்ற கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், மற்றவர்கள் அப்படிப் பகிரும்போது அவற்றுக்குச் செவிகொடுப்பதுமே 'மற்றவரின் ஞானம்.'
இதன் உள்ளடக்கம் என்ன?
நாம் எல்லாரும் ஏதோ ஒன்றைப் பற்றித் தெரிந்தவர்கள். நம்முடைய அறிவில் கூடுதல், குறைவு இருக்கலாமே தவிர, எல்லாரும் எல்லாத் துறையிலும் அறிவாளிகள் அல்ல, எல்லாரும் எல்லாத் துறையிலும் முட்டாள்களும் அல்ல. எடுத்துக்காட்டாக, இதய அறுவைச் சிகிச்சையில் கைதேர்ந்த ஒரு மருத்துவர், தன் புலத்தில் திறமை பெற்றவராக இருக்கலாம். ஆனால், அவருக்கு வாகனம் ஓட்டத் தெரியாது. வாகனம் ஓட்டத் தெரிந்த ஒருவரின் அறிவை தனக்குப் பயன்படுத்திக்கொள்கின்றார். வாகனம் ஓட்டும் அந்நபருக்கு இதயத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் அங்கே மருத்துவரின் அறிவு பயன்படுகின்றது. ஆக, அறிவு இன்னொரு அறிவைச் சமன் செய்கிறது அல்லது நிரப்புகிறது.
வகுப்பறையில், ஆசிரியர் அனைத்தையும் அறிந்தவர் அல்லர். மாணவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்லர். இருவரும் வேறு வேறு நிலைகளில் அறிதல் கொண்டிருக்கின்றனர். இந்த அறிதலை மற்றவருக்கு வழங்கி, மற்றவரின் குறைவை நிரப்புகின்றனர்.
இந்தப் பயிற்சியால் மாணவர்கள் பெறுவன எவை?
அ. தன்நம்பிக்கை
'கான்ஃபிடன்ஸ் லெவல்' நம் வாழ்வில் மிக முக்கியம். இது அறிவாலும், அனுபவத்தாலும் நமக்கு வரும். மற்றவர்கள் முன் நான் ஒன்றைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டுமெனில், முதலில் அதை நான் அறிந்துகொள்ளும்போது, என் மேல் எனக்கு நம்பிக்கையும், மற்றவர்களைவிட நான் அதிகம் கற்றுள்ளேன் என்ற நேர்முகமான பெருமித உணர்வும் என்னுள் எழுகிறது. ஆக, மாணவர்கள் தன்நம்பிக்கையில் வளர இப்பயிற்சி முதலில் உதவும்.
ஆ. துணிச்சல் அல்லது பயமின்மை
சில மாணவர்கள் நிறைய விடயங்களைத் தெரிந்து வைத்திருப்பர். ஆனால், அவர்களால் குழுவில் அல்லது வகுப்பறையில் துணிவுடன் பகிர இயலாது. மற்றவர்களைப் பற்றிய பயம் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட மாணவர்கள் துணிச்சலில் வளர இந்த முறைமை பயன்படும்.
இ. செவிகொடுத்தல் அல்லது கவனித்தல்
இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன் மனிதர்களின் கவனிக்கும் திறன் நாற்பது நிமிடங்களுக்கு இருந்தன. ஆனால், இப்போது உள்ள தலைமுறையின் கவனிக்கும் திறன் வெறும் பதினொரு நிமிடங்கள்தாம் என்கின்றன ஆய்வுகள். நாளுக்கு நாள் நாம் கவனிக்கும் திறனையும், செவிகொடுக்கும் திறனையும் இழக்கிறோம். காரணம், நம் மன அழுத்தம், கவனச் சிதறல்கள், பரபரப்பு போன்றவை. மேலும், அடுத்தவனுக்கு நான் செவிகொடுக்க வேண்டுமா? அவன் சொல்வதைக் கேட்க வேண்டுமா? என்ற கேள்விகளும் நம்மில் எழும்பி சில நேரங்களில் நம் காதுகளை அடைத்துவிடும். மாணவர்கள் இம்முறைமையில் மற்றவர்களுக்குக் கவனமுடன் செவிகொடுக்கும் திறனில் வளர்வர்.
Tuesday, June 9, 2020
தேர்வுகள்
நான் இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம், எல்லா தொலைக்காட்சி அலவரிசைகளும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இரத்தானதையும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதையும் அறிவித்துக்கொண்டிருக்கின்றன.'தேர்வுகள் இரத்து'
- இச்செய்தி ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு உற்சாகத்தையும் சோகத்தையும் தருகிறது.
இதுவரை எடுத்த மதிப்பெண்களே இதற்கும் என்பதால், ஏற்கனவே நல்ல மதிப்பெண் பெற்றவர்கள், தங்கள் பயம் மற்றும் கலக்கம் போய்விட்டதை எண்ணி உற்சாகம் அடைவார்கள்.
ஆனால், ஏற்கனவே குறைவான மதிப்பெண் எடுத்து, ஆண்டு இறுதியில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஓய்ந்திருந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு சோகத்தைத் தருகிறது.
உண்மையில் மாணவர்களுக்கு தேர்வு பயம் இருக்குமா?
தேர்வு பயம் யாருக்கும் இல்லை. தேர்வின் முடிவுகள் குறித்த பயம்தான் நமக்கு.
இப்போது இருக்கும் கொரோனாவைக் குறித்து நாம் பயப்படுகிறோம். ஆனால், பயம் இந்நோயைக் குறித்து அல்ல. மாறாக, நோய் ஏற்படுத்தும் விளைவைக் குறித்தே. இதைவிட பெரிய நோய்களோடு வாழப் பழகிவிட்டோம். ஏன்? அந்நோய்களுக்கு மருந்துகள் நமக்கு இருக்கின்றன.
ஆக, மாற்று தெரிவு இருக்கும்போது நமக்கு பயம் வருவதில்லை.
இருட்டு பயமாக இருக்கிறது. ஆனால், இருட்டிற்கு மாறான ஒளி இருக்கும்போது பயம் மறைந்துவிடுகிறது.
கடன் பயமாக இருக்கிறது. ஆனால், திடீரென்று கிடைத்த பணம் பயத்தைப் போக்கிவிடுகிறது.
ஆக, மாற்று நமக்குக் கிடைக்கும் வரைதான் பயம் நீடிக்கிறது.
தேர்வுக்கு என்ன மாற்று? அல்லது தேர்வின் முடிவுகளுக்கு என்ன மாற்று?
வாழ்வின் முடிவுகளும் தேர்வின் முடிவுகளும் ஒன்றாக இருப்பதில்லை என்பதை நம் எல்லாருக்கும் தெரியும். வாழ்க்கை தன் போக்கில், பூனை தன் குட்டியைப் பிடித்து தூக்கிச்செல்வது போல, தூக்கிக் கொண்டே திரிகிறது. 'எனக்கு அங்கு போக விருப்பமில்லை' என்று சொல்லவோ, அல்லது 'இப்போது வேண்டாம்' என்று சொல்லவோ பூனைக்குட்டிக்கு உரிமை இல்லை.
மாணவர்கள் இன்று தங்கள் தன்மதிப்பை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களை வைத்து நிர்ணயம் செய்வதுதான் ஆபத்து. மதிப்பெண் என்பது வெறும் எண்தான். அந்த எண்ணிற்கும் நம் தன்மதிப்பிற்கும் தொடர்பு இல்லை. எண்களையும் தாண்டி எண்ணங்களைப் பொருத்து அமைவதே வாழ்க்கை.
தேர்வு என்பதை நாம் கற்றலை அறிந்துகொள்ளும் ஒரு திறனாய்வு அளவீடு.
அளவீடு வேறு, ஆள் வேறு என்பதை அறிதல் நலம்.
வகுப்பறையில் உள்ள மாணவர்கள் மதிப்பெண்கள் பெறும் எந்திரங்கள் இல்லை என்பதை அறிந்து, மாணவர்களின் அறிதலில் கவனம் செலுத்துவதே ஆசிரியர்களின் பணி.
Monday, June 8, 2020
உள்-வெளி வட்டம்
இந்த முறையை ஆங்கிலத்தில் 'Inside-Outside Circle' என அழைக்கிறார்கள். இதை அறிமுகம் செய்தவர் ஸ்பென்சர் கேகன். கூட்டு ஒருமைப்பாட்டு அடிப்படையில் பாடம் கற்க மிகவும் ஏற்ற வழி இது. இந்த முறை மொழி வகுப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் இரண்டு வட்டங்களில் நிற்பர். வெளியே ஒரு வட்டம். உள்ளே ஒரு வட்டம். வெளி வட்டத்தில் உள்ளவர்கள் வட்டத்தின் உள் நோக்கியும், உள் வட்டத்தில் இருப்பவர்கள் வட்டத்தின் வெளிநோக்கியும் இருப்பர். ஆக, ஒவ்வொருவருக்கும் ஒரு பார்ட்னர், ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு நிற்பர்.ஆசிரியர் பொதுவான ஒரு தலைப்பு கொடுப்பார். அந்தத் தலைப்பின் அடிப்படையில், ஒருவர் மற்றவரிடம் கேள்வி கேட்டு மாணவர்கள் பதிலிறுப்பர்.
எடுத்துக்காட்டாக, பேச்சு ஆங்கில வகுப்பில், 'தபால் நிலையத்தில் அலுவலருக்கும் வாடிக்கையாளருக்கும் உள்ள உரையாடல்' என்று தலைப்பு கொடுக்கலாம். மாணவர்களில் ஒருவர் அலுவலராகவும், மற்றவர் வாடிக்கையாளராகவும் மாறி, ஒருவர் மற்றவரோடு ஆங்கிலத்தில் உரையாடுவர்.
'குட்மார்னிங் சார்!'
'குட்மார்னிங்!' 'வாட் ஷேல் ஐ டு ஃபார் யூ?'
'ஐ வுட் லைக் டு புக் எ பார்சல்'
'ப்ளீஸ் கிவ்'
இப்படித் தொடரலாம்.
சில நிமிடங்களில், 'மூவ் தெ சர்கிள்' என்று சொன்னவுடன் வெளி வட்டம் நகர்ந்து அடுத்த மாணவரை பார்ட்னராக எதிர்கொள்ளுமாறு மாறிக்கொள்ளும்.
இப்படியாக, ஒருவர் மற்றவரின் இடம் மாற்றியும், கதாபத்திரம் பாற்றியும் உரையாடலைத் தொடரலாம். மொழி வகுப்பில் மட்டுமன்றி, மற்ற வகுப்புக்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.
திறன் வளர்ச்சி:
இந்த முறையில் பேச்சு மற்றும் கேட்கும் திறன் வளரும்.
முறைமையின் பயன்கள்:
அ. மாணவர்கள் நன்றாகக் கேட்கவும், கேட்டதற்குப் பதிலிறுக்கவும் பழகிக்கொள்வர்.
ஆ. மாணவர்கள் தங்களுடைய வார்த்தை ஆற்றலை வளர்த்துக்கொள்வர். புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்வர். தெளிவான உச்சரிப்பைப் பெறுவர்.
இ. மாணவர்கள் புதிய கருத்துக்களை பரிமாறிக்கொள்வர்.
ஈ. வெறுமனே பாடங்களை மனனம் செய்யாமல் அவற்றை உச்சரிப்பதன் வழியாக, புரிதல் வளரும்.
உ. ஆசிரியர் எந்நேரமும் வட்டத்தைச் சுற்றிவருவதால் தேவையான ஐயங்களைச் சரிசெய்ய முடியும்.
முறைமையின் பின்னடைவுகள்:
அ. நிறைய மாணவர்கள் கொண்ட வகுப்பறையில் இதைச் செயல்படுத்துவது கடினமாக இருக்கும்.
ஆ. ஆசிரியரால் அனைத்து மாணவர்களின் உரையாடலையும் மேற்பார்வையிட முடியாது. ஆசிரியர் நகர்ந்தவுடன் மாணவர்கள் தங்களுக்குள்ளே சிரித்துப் பேசுவும், அரட்டை அடிக்கவும் வாய்ப்ப அதிகம்.
இ. தமக்கு அருகிலிருக்கும் மாணவர்கள் பேசுவதைக் கேட்டு அப்படியே பேசும் வாய்ப்பு இருப்பதால், மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வளர்க்க கடினமாக இருக்கும்.
Saturday, June 6, 2020
சுவரெழுத்து பலகை
ஆங்கிலத்தில் இந்த முறைமையை 'Graffiti Board' என அழைப்பார்கள்.சுவர்களில் எழுதுவது அசுத்தம் என்று நம் சிறுவயதில் நமக்குச் சொல்லிக் கொடுத்தனர். 'சுவற்றில் கிறுக்காதே,' 'நோட்டிஸ் ஒட்டாதே!' 'வர்ணம் தீட்டாதே!' 'தடை செய்யப்பட்ட சுவர்!' என பொதுவான சுவர்களில் நிறைய எழுத நாம் பார்த்திருப்போம். தமுக்கத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் பூங்காவில் பாரதியார் பற்றிய பல ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இன்று கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் சாலைகளிலும் சாலை ஓரங்களிலும் நிறைய வரையப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் நிற்கும் இரயில்களில், இரயில் நிலையச் சுவர்களில், கிராஃபித்தி எனப்படும் சுவரோவியங்கள் அல்லது சுவரெழுத்துக்கள் நிறைய இருக்கும். இவற்றால் நிறைய புரட்சிகளும் நடந்துள்ளன.
இந்தச் சுவரெழுத்து முறையை நாம் வகுப்பறையிலும் பயன்படுத்தி புரட்சி செய்யலாம்.
'சுவரெழுத்து பலகை' என்பது கரும்பலகை, அல்லது வெண்பலகை, அல்லது பெரிய தாள். இதை வகுப்பறையின் நான்கு இடங்களில் ஒட்டிவைத்துவிட வேண்டும். ஒவ்வொரு பலகையிலும் ஒரு கேள்வி அல்லது ஒரு கருத்துரு இருக்க வேண்டும். மாணவர்கள் ஒவ்வொரு பலகையாக நகர்ந்து தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்வார்கள். இறுதியில், எழுதப்பட்டவை பற்றி விவாதம் செய்யப்படும். ஒரு புதிய பாடத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, மாணவர்களின் முன்னறிவைச் சோதித்தறிய இம்முறையை நாம் பயன்படுத்தலாம். மேலும், ஒரு ப்ராஜக்ட் செய்வதற்குமுன்னும் மாணவர்களை இப்படித் தயாரிக்கலாம்.
எப்படிச் செய்வது?
1. தேவையான இடம் அல்லது வெளியை ஒதுக்குவது
மாணவர்கள் எளிதாக நகர்ந்து செல்லும் வண்ணம் இடத்தை ஒதுக்கி, கரும்பலகை அல்லது தாளை சுவற்றில் ஒட்ட வேண்டும். தேவையான எழுதுபொருள்களை வைக்க வேண்டும்.
2. மாணவர்களுக்கு அறிவுறுத்துவது
மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன, கொடுக்கப்பட்ட நேரம் எவ்வளவு, கேள்விகள் எவை என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
3. மாணவர்கள் சுவரெழுத்து பலகைகளில் எழுதுவார்கள்
அனைத்து மாணவர்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
4. குழு விவாதம்
இறுதியில், மாணவர்கள் அனைவரும் அமர, ஒவ்வொரு பலகையில் எழுதப்பட்டவை பற்றி விவாதம் செய்யலாம்.
எடுத்துக்காட்டாக,
குடிமையியலில் நல்ல தலைவர் யார்? என்ற பாடம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
நல்ல தலைவருக்குரிய பண்புகள் எவை?
நல்ல தலைவர் தவிர்க்க வேண்டிய குணங்கள் எவை?
நான் விரும்பும் தலைவர் யார்?
நான் வெறுக்கும் தலைவர் யார்?
இப்படி நான்கு கேள்விகளை நான்கு பலகைகளில் எழுதிவைத்து, மாணவர்கள் அனைவரும் தங்கள் விடைகளைப் பதிவு செய்யுமாறு சொல்லலாம்.
குழு விவாதத்திற்குப் பின், ஆசிரியர், பாட புத்தகத்தின் அடிப்படையில் தன் கருத்துக்களை நெறிப்படுத்தி பாடத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கலாம்.
மாணவர்களைக் கொண்டாடுங்கள்
மாணவர்களுக்கு ஒரு பாடம் பிடிக்கவில்லை என்றால், அதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் பிடிக்கவில்லை என்று பொருள். அல்லது, ஓர் ஆசிரியரை மாணவருக்குப் பிடித்தால் அவர் எடுக்கும் பாடமும் மாணவருக்குப் பிடிக்கும்.மாணவருக்கு பிடித்த மாதிரி எப்படி இருப்பது?
மாணவர்கள் சொல்படி கேட்பதா? அல்லது வகுப்பு எடுக்காமல் மாணவர்களோடு அரட்டை அடிப்பதா? அல்லது வகுப்புக்கு வராமல் இருப்பதா? அல்லது தேர்வுக்கு முன் விடைத்தாள்களை அவர்களுக்குக் கொடுப்பதா? அல்லது தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்குவதா? அல்லது படிக்காவிட்டாலும் மதிப்பெண் வழங்குவதா?
இல்லை.
இவை மேலோட்டமான முறையில்தான் அவர்களை ஆசிரியர்களோடு இணைக்கும்.
இதையும் தாண்டி ஒன்று உண்டு. அதுதான், மாணவர்களைக் கொண்டாடுவது.
மாணவர்களைக் கொண்டாடிய ஓர் ஆசிரியரை நான் உரோமையில் விவிலியத்தில் முதுகலை பட்டம் படிக்கும்போது பெறும் பாக்கியம் கிடைத்தது. அவருடைய பெயர் அருள்திரு. அந்தோனி ஃபோர்த்தே. அவர் ஓர் இத்தாலிய-அமெரிக்கர். சேசுசபை அருள்பணியாளர்.
நான், என் நண்பன் ஜெகன் மற்றும் இன்னொரு நண்பர் என்டகே (கென்யா நாட்டுக்காரர்) மூவரும் முதல் வரிசையில் ஒன்றாக அமர்ந்திருப்போம். 'எழுபதின்மர் விவிலியத்தின் கிரேக்கம்' - இதுதான் அவர் எடுத்த பாடம். ஆண்டு முழுவதும் அவருடைய வகுப்பு இருந்தது. வாரத்திற்கு இரண்டு நாள்கள். மதிய வேளை.
அவர் சரியாகப் பாடம் நடத்த மாட்டார் எனவும், சரியாக மதிப்பெண் வழங்க மாட்டார் எனவும் என்னுடைய சீனியர் என்னை எச்சரித்து, அவருடைய பாடத்தை தெரிவு செய்ய வேண்டாம் என வற்புறுத்தினார்கள். ஆனாலும், நான் தெரிவு செய்தேன்.
முதல் வரிசையில் அமர்ந்து, கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றாலும், சிரித்துக் கொண்டே இருக்கும் என்னை அவருக்கு மிகவும் பிடித்தது. 'ஃப்ரதெல்லோ' ('சகோதரா') என வாஞ்சையோடு அழைப்பார். அவர் நிற வேற்றுமை பாராட்ட மாட்டார். சில பேராசிரியர்கள் நிற வேற்றுமை பாராட்டுவார்கள். மட்டம் தட்டிப் பேசுவார்கள். ஆனால், இவர் அப்படி இல்லை. இதுதான் என்னை முதலில் கவர்ந்தது.
இரண்டாவதாக, மாணவர்களை உரிமை கொண்டாடினார். ஒவ்வொரு வார இறுதியிலும், அல்லது விடுமுறை நாள்களிலும் இத்தாலிக்கு புதிதாக வந்த மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வார். நடந்தேதான் செல்ல வேண்டும். ஆனால், அருகருகே உள்ள இடங்கள்தாம். டிக்கெட், ஐஸ்க்ரீம், காஃபி அவர் பார்த்துக்கௌ;வார். இறுதி வகுப்பு அன்று பீட்சா கடைக்கு அழைத்துச் செல்வார். வகுப்பின் இறுதிநாள் சென்றோம். நான் அவருக்கு அருகில் அமர்ந்தேன். சாப்பிட்டு முடித்தவுடன் பில் ஏறக்குறைய 600 யூரோ வந்தது (49000 ரூபாய்). பில்லைப் பார்த்த அடுத்த நொடி தன் கார்டை எடுத்து வெயிட்டரிடம் கொடுத்தார். பி;ல்லைக் கிழித்து எறிந்துவிட்டு, எங்களோடு இரயில் நிலையத்திற்கு வழி நடந்தார். அவர் ஏன் இப்படிச் செலவிட வேண்டும்? என்று நான் அடுத்த நாள் அவரிடமே கேட்டேன். அவர் சொன்னார், 'நான் வகுப்பில் சொல்லிக் கொடுத்ததைவிட, இந்தச் செயலை நீங்கள் எப்போதும் மனத்தில் வைத்திருப்பீர்கள். அதற்காகத்தான்! நான் வகுப்பறையில் நிற்கும் ஒரு கரும்பலகை அல்ல! நீங்கள் அமர்ந்திருக்கும் மேசைகள் அல்ல! நாம் மனிதர்கள். உணவு நம்மை இணைக்கும்!'
அவ்வளவுதான்.
இதுதான் அவர் எங்கள்மேல் கொண்டாடிய உரிமை.
இதற்காக, மாணவர்களை எல்லாம் கடைக்குக் கூட்டிப்போக வேண்டும் என்பதல்ல. மாறாக, அவர்களோடு நம் உடனிருப்பை ஏதோ ஒரு வகையில் காட்ட வேண்டும்.
அமெரிக்காவில் இணைப் பேராசிரியர் பணிக்கு நான் விண்ணப்பிக்க நேர்;ந்தபோது, பரிந்துரைக் கடிதம் வழங்க உடனே முன்வந்தார். இன்றும் தொடர்கிறது எங்கள் நெருக்கம்.
உரிமை கொண்டாடுதல் என்பது உறவு கொண்டாடுதலே.
Friday, June 5, 2020
கற்றுக் கொடுங்கள்
தன் மகனை பள்ளியில் சேர்த்த அன்று ஆபிரகாம் லிங்கன் அவர்கள் தன்னுடைய மகனின் ஆசிரியர் அல்லது ஆசிரியைக்கு எழுதிய கடிதம் என்ற ஒரு பாடம் புத்தகங்களிலும் சமூக வலைதளங்களிலும் காணக்கிடக்கிறது. இந்தக் கடிதம் உண்மையல்ல என்று மறுப்பவர்களும் உண்டு. இந்தக் கடிதம் லிங்கன் அவர்களால் எழுதப்பட்டதா, அல்லது எழுதப்படவில்லையா என்பது அல்ல கேள்வி. ஆனால், இந்தக் கடிதத்தில் ஓர் ஆசிரியர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன.'என் மகன் இன்று பள்ளியைத் தொடங்குகிறான். அவனுக்கு இது தொடக்கத்தில் விநோதமாகவும் புதிதாகவும் இருக்கும். ஆக, அவனைக் கனிவோடு கையாளுங்கள். கண்டங்களைக் கடந்து செல்வது அவனுக்கு வீரதீரச் செயலாக இருக்கும். அச்செயல்களில் வன்மமும், வன்முறையும், கவலையும் இருக்கும். ஆனால், இந்த வாழ்க்கையை வாழ அவனுக்கு நம்பிக்கையும், அன்பும், துணிவும் தேவை.
ஆகவே, அன்பிற்கினிய ஆசிரியரே, அவனுடைய கரத்தைக் கனிவாய்ப் பிடித்து, அவன் கற்க வேண்டிய அனைத்தையும் உங்களால் இயன்றவரை அவனுக்குக் கற்றுக்கொடுப்பீர்களா? ஒவ்வொரு பகைவனுக்கும் ஒவ்வொரு நண்பன் இருக்கிறான் என்று அவனுக்குக் கற்பியுங்கள். எல்லா மனிதர்களும் நீதியானவர்கள் அல்லர் என்றும், எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்லர் என்றும் அவன் அறிந்துகொள்ளட்டும். ஆனால், ஒவ்வொரு வில்லனுக்கும் ஒரு ஹீரோ உண்டு என்றும், ஒவ்வொரு மோசமான அரசியல்வாதிக்கும் அர்ப்பணிப்புள்ள தலைவன் உண்டும என்றும் அவனுக்குக் கற்பியுங்கள்.
கீழே கிடந்த ஒரு டாலரை விட உழைத்துப் பெற்ற பத்து சென்ட்கள் மேலானவை என அவனுக்கு உணர்த்துங்கள். பள்ளியில் ஏமாற்றுவதை விட தோற்றுப்போவது மேல் என அவன் கற்கட்டும். தோற்கும் அனைத்திலும் கலக்கம் அடையாமல் இருக்கவும், வெற்றி பெறும் அனைத்திலும் மகிழ்ச்சியோடு இருக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
கனிவோடு இருப்பவர்களிடம் கனிவோடு இருக்குமாறும், கரடுமுரடாக இருப்பவர்களிடம் கரடுமுரடாக இருக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் தன் முகத்தைத் திருப்பவும், அந்த நேரத்தில் அமைதியாகப் புன்னகை செய்யவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். கவலையாக இருக்கும்போது சிரிக்கக் கற்றுக்கொடுங்கள். அழுவதற்கு வெட்கப்படத் தேவையில்லை என அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். தோல்வியிலும் மாட்சி இருக்கும், வெற்றியிலும் விரக்தி இருக்கும் என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அவனைச் சீண்டுபவர்களை அவன் உதறித் தள்ள அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
புத்தகங்கள் தாங்கும் ஆச்சர்யங்களை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அதே வேளையில், வானத்துப் பறவைகள் பறக்கும் ஆச்சர்யத்தையும், தேனீக்களின் ரீங்காரத்தையும், பசுமையான மலையில் பூத்திருக்கும் மலர்களின் ஆச்சர்யங்களையும் அவன் அறியட்டும். எல்லாரும் தவறு என்று சொன்னாலும் அவனுடைய எண்ணங்களில் அவன் உறுதியான நம்பிக்கை கொள்ள அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
எல்லாரையும் போல கூட்டத்தை அவன் பின்பற்ற வேண்டாம். அனைவருக்கும் அவன் செவிசாய்க்கட்டும். ஆனால், நல்லவற்றையும் உண்மையானவற்றையும் மட்டும் எடுத்துக்கொள்ளட்டும்.
தன்னுடைய திறன்களையும் மூளையையும் நிறைய விலைக்கு அவன் விற்கட்டும். ஆனால், இதயத்தையும் ஆன்மாவையும் அவன் விலை பேச வேண்டாம். பொறுமையற்று இருப்பதற்கான துணிவையும், துணிவோடு இருப்பதற்கான பொறுமையையும் அவன் கற்றுக்கொள்ளட்டும். தன்மேல் அவனுக்கு நிறைய நம்பிக்கை இருக்கட்டும். அப்போதுதான் பிறர்மேலும், கடவுள்மேலும் அவனுக்கு நம்பிக்கை வரும்.
இது என் அன்பான கட்டளை. உங்களால் முடிந்தவரை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அவன் நல்ல பையன். அவன் என் மகன்.'
நிற்க.
இன்று, பாடங்களை யார் வேண்டுமானலும் கற்பிக்கலாம். ஆனால், விழுமியங்களைக் கற்பிக்க உங்களால் மட்டும்தான் முடியும்.
Thursday, June 4, 2020
நுண்ணுணர்தல்
பள்ளிகள் தங்களுடைய ஆன்லைன் கற்பித்தலைத் தொடங்கிவிட்டன. ஆன்லைன் கற்றல் மற்றும் கற்பித்தலை மையமாக வைத்து நிறைய மீம் காணொளிகள் வலம் வருகின்றன. வகுப்புக்கு சாக்பீஸூம் நோட் புக்கும் தூக்கிக் கொண்ட போன ஆசிரியை இப்போது, 'வைஃபை, ஹாட்ஸ்பாட், ஸூம், டீம்ஸ்' என்று வெலவெலத்துப் போகின்றார். இரண்டு நாள்களுக்கு முன், ஆன்லைன் கற்றலில் தன்னால் ஈடுபட முடியவில்லையே - அதாவது தன்னிடம் செயல்திறன் பேசி இல்லாததால் - மனஉளைச்சலுக்கு ஆளாகி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இம்முறை வகுப்புக்களால், வயதான அல்லது தொழில்நுட்ப வசதிகளுக்கு பயிற்சி இல்லாத ஆசிரியர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.ஏன் எல்லாருமே செயல்திறன்பேசி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமா?
ஏன் எல்லாருமே இணையவசதி கொண்டிருக்க வேண்டுமா?
அரிசி வாங்கப் பணம் இல்லாத ஒரு குடும்பம் உடனடியாக ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்க வேண்டுமா?
வழக்கமான ஆண்டுக் கட்டணத்தை பள்ளிகள் வசூலிக்கின்றன. ஆனால், மாணவர்கள் வீட்டில் இருக்கிறார்கள். பள்ளிக்கூட வகுப்பறைகளின் மின்கட்டணம், இருக்கைகளின் தேய்மானம், பள்ளிப் பராமரிப்பு ஆகிய அனைத்திற்குமான பணமும் நிர்வாகத்திற்கு மிச்சம். இந்தப் பணத்தை நிர்வாகம் குறைத்துக்கொள்ளுமா? இல்லை! ஆசிரியர்கள் தங்கள் பணத்திலேயே இணைய தள டேட்டாவை வாங்க வேண்டும், செயல்திறன் பேசிகள் வாங்க வேண்டும், ஹெட்ஃபோன் வாங்க வேண்டும். இதே போல மாணவர்களும் வாங்க வேண்டும். இதில் இன்னொரு நகைச்சுவை. மாணவ, மாணவியர் தங்களுடைய யூனிஃபார்மில் அமர்ந்து கற்க வேண்டுமாம். ஆக, யூனிஃபார்ம் செலவு வேறு. மாணவ, மாணவியரிடையே வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட சீருடை, ஒரு பள்ளியின் சடங்கு உடையாக மாறிவிடுவது எவ்வளவு அபத்தம்!
இந்நிகழ்வுகளில்,
மேலிருப்பவர் கீழிருப்பவரை வெறும் பொருளாகப் பார்க்கிறாரே தவிர, ஆளாகப் பார்க்கவில்லை.
கல்வித்துறை பள்ளி நிர்வாகத்தை பொம்மையாகவும், பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களை இயந்திரங்களாகவும், ஆசிரியர்கள் மாணவர்களைப் பொறிகளாகவும் பார்க்கின்றனர்.
இன்று நமக்கும், எல்லா நாளும் பள்ளியில் ஆசிரியர்களுக்கும் தேவை: 'நுண்ணுணர்தல்' (sensitivity). இதை எளிதாக இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, அடுத்தவரின் தேவை எது என்று அறிந்து செயல்படுதல். இரண்டு, அடுத்தவரைக் காயப்படுத்தாமல் இருத்தல். எடுத்துக்காட்டாக, நான் உணவறையில் இருக்கிறேன். என் மேசையில் 3 மாம்பழங்கள் இருக்கின்றன. நாங்கள் மூன்று பேர் இருக்கின்றோம். நான் வேகமாகச் சென்று முதலில் ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதை எனக்கென ஒதுக்கிவைத்துக்கொள்ளும்போது நான் நுண்ணுணர்தலோடு செயல்படுவதில்லை. அல்லது, நான் மனமகிழ் நேரத்தில் அமர்ந்திருக்கிறேன். ஐந்துபேரில் நால்வர் தமிழர், ஒருவர் கேரள நாட்டினர். ஆனால் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும். ஆங்கிலம் தெரிந்தாலும், தமிழ் தெரியாத நபரின் இருப்பை நான் உதறித்தள்ளிவிட்டு, தொடர்ந்து தமிழில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் நான் நுண்ணுணர்தலோடு செயல்படுவதில்லை.
மார்ட்டின் ப்யூபர் (Martin Buber) என்ற மெய்யியலாளர், மனித உறவுகளை, 'நான்-அது' ('I-It'), 'நான்-அவர்' ('I-Thou') என்று பிரிக்கின்றார். 'நான்-அது' என்ற உறவுநிலை நாம் இந்த உலகோடு, தொழிலோடு கொள்கின்ற உறவு. ஆனால், மனிதர்கள் என்று வந்தால், அங்கே 'நான்-அவர்' என்ற உணர்வுதான் இருக்க வேண்டும். முதல் நிலை உறவில், அடுத்தவர் பொருளாக இருப்பார். இரண்டாம் நிலை உறவில், அடுத்தவர் நபராக இருப்பார்.
இன்று அமெரிக்காவில் கறுப்பு-வெள்ளை பாகுபாடு எழக் காரணம், அல்லது நம் மண்ணில் சிறுபான்மை-பெரும்பான்மை உணர்வு எழக் காரணம், நாம் ஒருவர் மற்றவரை 'நான்-அவர்' என்ற நிலையில் அணுகாமல், 'நான்-அது' என்ற நிலையில், அடுத்தவரை ஒரு பொருளாக நினைத்து அணுகுவதால்தான்.
முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு ஒருவர் கடக்கக் காரணமாக இருப்பது 'நுண்ணுணர்தல்.'
இந்த உணர்வை ப்யூபர் எப்படி பெறுகின்றார். ஒரு சோகமான நிகழ்வை அவர் பதிவு செய்கின்றார்.
கல்லூரிப் பேராசிரியாக இருந்த அவரிடம் மாலையில் ஒரு மாணவன் வருகின்றான். முதல் உலகப் போர் நடக்கின்ற நேரம். 'நான் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு போக விரும்பவில்லை. ஆனால், எல்லாரும் என்னைக் கட்டாயப்படுத்துகிறார்கள். நான் போகவா? வேண்டாமா? எனக்குக் குழப்பமாகவும் கலக்கமாகவும் இருக்கிறது' என ப்யூபரிடம் கேட்கின்றான் மாணவன். அந்த நேரத்தில் ப்யூபர் ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடி நூலகத்தில் உலாவிக்கொண்டிருக்கின்றார். அந்த மாணவனிடம், 'எனக்கு நேரமில்லை. நீயே முடிவெடுத்துக்கொள்' என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார். அடுத்த நாள் காலையில் ப்யூபர் எழுந்தபோது அதிர்ச்சி அடைகின்றார். அந்த மாணவன் இரவில் தற்கொலை செய்துகொண்டான். 'அவன் என்னிடம் பகிர வந்ததை நான் கேட்காமல், அவனை என் பணியின் இடையூறாக நினைத்தேனே! என்னால் ஓர் உயிர் போய்விட்டதே! அவனுடைய தேவையை நான் நுண்ணுராமல் இருந்துவிட்டேனே!' என வாழ்நாள் எல்லாம் புலம்புகின்றார்.
ஆக, ஆசிரியர்கள் மாணவர்களை வகுப்பறையில் நுண்ணுணர்தலோடு அணுகுதல் அவசியம்.
ஆசிரியர்களின் நுண்ணுணர்தல் மாணவர்களின் வாழ்விற்குப் புத்துயிர் அளிக்கும்.
Wednesday, June 3, 2020
ஜிக்ஸா முறைமை
ஜிக்ஸா முறைமை அல்லது ஆங்கிலத்தில் Jigsaw Method என்னும் முறைமையில், வகுப்பில் உள்ள மாணவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு கருத்து பற்றி விவாதிப்பர். அல்லது பாட அலகின் சிறு சிறு பகுதிகளைக் கற்பர். பின் ஆசிரியர் அனைத்துக் குழுக்களின் கருத்துக்களையும் ஒருங்கிணைக்க, அனைத்து மாணவர்களும் அனைத்தையும் கற்றுக்கொள்வர்.நாம் விளையாடுகின்ற திருகு அட்டை விளையாட்டில் ஒவ்வொரு திருகு அட்டைகளும் இறுதியில் இணைந்து அழகிய படம் உருவாவது போல, இங்கே மாணவர்களின் அனைத்துக் கருத்துக்களும் இணைந்து, முழுமையான புரிதல் ஏற்படும்.
வகுப்பில் எப்படிச் செய்வது?
எடுத்துக்காட்டாக, அளவைகள் பற்றிப் படிக்கிறோம் என வைத்துக்கொள்வோம்.
நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை என்ற மூன்று அளவைகளை மூன்று குழுவினருக்கு பிரித்துக் கொடுத்துவிட வேண்டும். ஒவ்வொரு குழுவும் தனக்கு ஒதுக்கப்பட்ட அளவை பற்றி விவாதம் செய்யும். இறுதியில், தாங்கள் கற்றுக்கொண்டதை அவர்கள் ஒட்டுமொத்த வகுப்பின்முன் எடுத்துச்சொல்வர்.
இதன் பயன் என்ன?
'ஜிக்ஸா விளையாட்டில் (Jigsaw Puzzle) ஒவ்வொரு அட்டையும் அவசியம். ஒரு அட்டை குறைந்தாலும் விளையாட்டு முடியாது. அதுபோல, வகுப்பில் ஒவ்வொரு மாணவரும் முக்கியமானவர். ஒவ்வொரு மாணவரின் கருத்தும் முக்கியமானது.'
இப்படியாக, ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மை வெளிப்பட இந்த முறைமை உதவுகிறது.
மேலும், ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக தன்னுடைய குழுவிலும், ஒவ்வொரு குழுவும் வகுப்பறையின் முன் தனித்துவமான முறையில் சிந்திக்க, பகிர, மற்றும் விவாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கையோடு தங்கள் எண்ணங்களைப் பகிரவும், மற்ற குழுவைவிட சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற நேர்முகமான போட்டி உணர்வையும் பெற்றுக்கொள்ளவும் செய்வர்.
வகுப்பில் செயல்படுத்த நான்கு படிகள்:
படி 1: ஒவ்வொரு குழுவிலும் 4 முதல் 6 வரை மாணவர்கள் இருக்குமாறு பிரித்துக்கொள்ள வேண்டும்.
படி 2: அன்றைய நாளின் பாடத்தை குழுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மாணவரை பொறுப்பாக நியமித்து, அவரிடம் வழங்க வேண்டும்.
படி 3: ஒவ்வொரு குழுவும் சிந்திக்க, விவாதிக்க, பகிரத் தேவையான நேரத்தைக் கொடுக்க வேண்டும்.
படி 4: இறுதியில், ஒவ்வொரு குழுவும் தாங்கள் கற்றதை பொதுவில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இந்த முறைமை பற்றிய இன்னொரு படிநிலையை அறிய இங்கே க்ளிக்கவும்:
Tuesday, June 2, 2020
கருத்து வரைபடம்
ஊடாடும் கற்றலில் (Interactive Learning) நாம் பயன்படுத்தும் இன்னொரு முறைமையை இங்கே காண்போம். இந்த முறைமையின் பெயர் 'கருத்து வரைபடம்.' ஆங்கிலத்தில், Concept Mapping.இதன் உட்பொருள் மிக எளிது: 'எலுமிச்சை ஜூஸ் பிழியத் தெரிந்த ஒருவரால் சாத்துக்குடி ஜூஸ் பிடிய முடியும்' அவ்வளவுதான். தன் வாழ்வில் இதுவரை சாத்துக்குடி ஜூஸே ஒருவர் பிழிந்ததில்லை என வைத்துக்கொள்வோம். அவரிடம் சாத்துக்குடி பழங்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து அவர் எப்படி ஜூஸ் தயாரிக்கிறார். தான் எலுமிச்சை ஜூஸ் செய்யத் தெரிந்திருக்கின்ற அறிவிலிருந்து அதை நீட்டிக் கொள்கிறார் அவ்வளவுதான். சிறிய எலுமிச்சைக்குப் பதில் பெரிய சாத்துக்குடி. கையில் பிழிவதற்குப் பதில் பிளாஸ்டிக் திருகு.
ஆக, ஏற்கனவே பெற்ற ஒரு அறிவைக் கொண்டு நம் அறிவை நீட்டிப்பதற்குப் பெயர்தான் கருத்து வரைபடம். இதை நாம் அறியாமல் செய்கிறோம்.
எப்படி?
எவர் சில்வர் தட்டில் சாப்பிட்டுப் பழகிய ஒருவருக்கு பீங்கான் தட்டு கொடுக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். 'பீங்கான் தட்டில் எப்படி சாப்பிடுவது?' என்று அவர் நம்மிடம் கேட்பாரா? அல்லது பீங்கான் தட்டைப் குப்புறக் கவிழ்த்து அதன்மேல் சோறு போட்டு சாப்பிடுவாரா? இல்லை.
நம் மனம் - அதாவது மூளை - ஏற்கனவே உள்ள தன் அறிவோடு பொருத்தி, அதே அறிவை நீட்டிக்கொள்கின்றது. ஆக, இப்போது அந்த நபருக்கு இரண்டு ஜூஸ் போடத் தெரியும், இரண்டு தட்டுக்களில் சாப்பிடத் தெரியும்.
நாம் பயன்படுத்தும் அலைபேசியும் அப்படித்தான். செயல்திறன் அலைபேசி பயன்படுத்துவது எப்படி? என்று கற்க நாம் எங்காவது கல்லூரிக்குச் சென்றோமோ? அல்லது அதற்கு முன் அலைபேசி கற்றுக்கொள்ள பள்ளிக்குச் சென்றோமோ? நம் மூளை தானாகவே புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளும் திறன் உடையது.
இதை நாம் கற்றலிலும் பயன்படுத்த வேண்டும்:
இதில் ஆசிரியரின் பங்கு என்ன?
கட்டிடம் கட்டும்போது, ஒரு தூண் (pillar) எழுப்ப வேண்டுமென்றால், முதலில் கம்பியை நிறுத்தி, அதைச் சுற்றி வட்டம் அல்லது சதுர வடிவில் மரப் பலகைகள் அல்லது இரும்புப் பலகைகள் அடைப்பர். ஆசிரியர்கள் இக்கற்றல் முறையில் கம்பியை எழுப்புவர், மரம் அல்லது இரும்புப் பலகைகள் அடைப்பர். மாணவர்கள்தாம், அதனுள் ஊற்றப்படுகின்ற கலவையாக இருப்பர். அவர்களின் எண்ண ஓட்டங்களும் பகிர்வுகளும்தான் மணலும், ஜல்லியும், சிமெண்டும், தண்ணீரும். தூண் தயாரானவுடன் பலகைகள் அகற்றப்படும். எந்த வீடுகளிலும் பலகைகள் அப்படியே விடப்படுவதில்லை.
இக்கற்றல் முறையில், ஓர் ஆசிரியர், நடுவில் வைக்கப்படுகின்ற இரும்புக் கம்பி போன்ற ஒரு முக்கியக் கருத்தைச் சொல்லிவிட்டு, நிறைய விதங்களில் சிந்திக்குமாறு பலகைகளை அடைக்க வேண்டும். பின் மாணவர்கள் வௌ;வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டும். அவர்களின் எண்ண ஓட்டங்கள் கரும்பலகையில் பதிவு செய்யப்பட வேண்டும். இங்கே, ஒருவர் தருகின்ற தகவல் மற்றொருவருக்கு இன்னொரு தகவலை நினைவூட்டும். இப்படியே நிறைய தகவல்கள் கிடைக்கும். நிறையக் கற்றல் நடைபெறும்.
எடுத்துக்காட்டாக,
'கொரோனா என்னும் கொடிய தொற்று நோய்' - இதுதான் ஆசிரியர் வைக்க வேண்டிய மையச் சிந்தனை.
'அது ஒரு நோய்'
'அது ஒரு அரசியல்'
'அது ஓர் உயிரியல் போர்'
'அது கடவுளின் சாபம்'
'அது நமது தன்னலச் செயல்களின் விளைவு'
இப்படி நிறையக் கருத்துக்கள் எழும். ஒவ்வொரு கருத்தும் வேறு வேறு தளங்களில் சிந்தனையை இட்டுச் செல்லும். வகுப்பின் இறுதியில் மாணவர்கள் மேற்காணும் எல்லாப் புரிதல்களையும் பெற்றுக்கொள்வர்.
கருத்து வரைபடம் என்னும் இம்முறைமையின் பயன்கள் எவை?
1. பார்த்துக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் எது எதோடு பொருந்துகிறது என்பதை நேரிடையாகக் கண்டுகொள்வர்.
2. ஒரு கருத்திற்கும், யோசனைக்கும், சொல்பவருக்கும் உள்ள தொடர்பை மாணவர்கள் அறிவர்.
3. வலது மற்றும் இடது என மூளையின் முழுமையும் செயல்படும்.
4. தனக்குத் தெரிந்த ஒன்றை நினைவுகூரும் வாய்ப்பை அளிக்கும்.
5. கருத்துக்களைக் கோர்வையாகப் பதிவு செய்ய, வரையறுக்கக் கற்றுத்தரும்.
6. புதிய திறனறிவை வளர்த்துக்கொள்ள உதவும்.
7. படைப்பாற்றல் வளரும்.
8. மாணவர்கள் தங்களுடைய முற்சார்பு எண்ணங்களை கேள்விக்குட்படுத்த துணைபுரியும்.
9. தவறான கருத்துக்களைக் களைய உதவும்.
கருத்து வரைபடத்தின் மாதிரியை தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக்கவும்:
Monday, June 1, 2020
ஜிலேபி சாப்பிடுவது
நம் உலகத்தை ஒரு நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகக் கற்பனை செய்துகொள்வோம். ஓர் ஆணும் பெண்ணும் (குரங்கிலிருந்து உருவானவர்கள்) பாதையற்ற காடுகள் வழியாக நடந்தே செல்கிறார்கள். திடீரென்று பசிக்கிறது. அங்கே மாமரம் ஒன்றில் நிறைய மாங்கனிகள் தொங்குகின்றன. அதன் அருகே ஒரு வயல். அந்த வயலில் நிறைய கோதுமை விளைந்திருக்கிறது. இரண்டுமே உணவுப்பொருள்கள்தாம். ஆனால்இ இந்த இரண்டு இனியவர்களும் மாங்கனிகளைப் பிடுங்கி உண்ண ஆரம்பிக்கிறார்கள். கடித்தே சாப்பிடுகிறார்கள். அவர்களின் கைகள்இ உடல் எல்லாம் மாம்பழச்சாறு வடிகின்றது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து உண்கிறார்கள். ஒரு கட்டத்தில் பசி அடங்கிவிடுகிறது. 'இனி இந்த மரத்தை எப்போது பார்ப்போமோ?' என்று சொல்லித் தொடர்ந்து உண்கிறார்கள்.நிற்க.
எந்தக் கடைக்குப் போனாலும் நம் கண்கள் இனிப்பின் பக்கம் போகக் காரணம் என்ன?
மேற்காணும் நம் மூதாதையர்களிடமிருந்து நாம் பெற்றி இனிப்பு ஜீன்தான். அது என்ன இனிப்பு ஜீன்?
இன்று பப்பீஸ் பேக்கரி சென்று ஒரு கேக் வாங்கி அதை உண்ணத் தொடங்குகிறோம். நாம் முதலில் உண்பது கேக்கின் மேலிருக்கும் ஜஸிங்தான். ஏன்? அதுதான் மிகவும் இனிப்பான பகுதி. அதைக் கடிக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அதை நக்கினாலே போதும். வாயில் கரைந்துவிடும். ஆனால்இ உடலுக்கு ஆபத்தான பகுதியும் அதுவே.
ஆக,
இனிப்பான ஒன்றும்,
செய்வதற்கு எளிதான ஒன்றும்,
பார்ப்பதற்கு அழகான ஒன்றும் உடனே நம்மைக் கவர்கிறது.
ஆனால்இ இந்த மூன்றையும் மட்டும் செய்பவர் உணர்வு முதிர்ச்சி பெறமாட்டார் என்று சொல்கிறார் டேனியல் கோல்மேன் என்கிற உளவியல் ஆராய்ச்சியாளர்.
எப்படி?
ஐந்து வயது நிரம்பிய ஐம்பது குழந்தைகளை வைத்து ஒரு பள்ளியில் ஆய்வு செய்யப்படுகிறது. அன்றைய நாளில் ஆசிரியை வகுப்பிற்குள் ஒரு வாளியோடு நுழைகிறார். வாளி முழுவதும் ஜிலேபி பாக்கெட்டுகள். மாணவர்கள் அனைவருக்கும் அதைக் கொடுக்கின்றார் ஆசிரியை. 'ஒரு நிமிடம்! நான் தலைமையாசிரியை அறைக்கு ஒரு வேலையாகச் செல்கிறேன். வர 10 நிமிடங்கள் ஆகும். நான் வரும்வரை நீங்கள் இதைச் சாப்பிடாமல் வைத்திருந்தால் இன்னும் உங்களுக்கு இரண்டு பாக்கெட் கொடுப்பேன். ஒருவேளை சாப்பிட்டுவிட்டால் ஒன்றும் கிடையாது' என்று சொல்லிவிட்டுச் செல்கின்றார். மாணவர்களின் செயல்பாடுகளை அங்கிருந்த கேமராக்கள் வழியாக ஆராய்ச்சியாளர்கள் பார்க்கிறார்கள். ஆசிரியை வெளியில் சென்ற அடுத்த நொடி சில குழந்தைகள் ஜிலேபியை சாப்பிட்டுவிட்டன. சில குழந்தைகள் அந்தச் சோதனையைத் தவிர்க்க தங்கள் பைகளுக்குள் வைத்துவிட்டனர். சில குழந்தைகள் கடிகாரத்தைப் பார்த்து பரபரப்பாக இருந்தனர். சில குழந்தைகள் பக்கத்துக் குழந்தைகளோடு பேரம் பேசின. சில குழந்தைகள் சாப்பிடாமல் வைத்திருந்தார்கள். இந்தக் குழந்தைகள் வளர்ந்தபின், 20 ஆண்டுகள் கழித்துஇ அவர்கள் படிக்கும் இடம்இ வேலை பார்க்கும் இடத்திற்கு அவர்களைத் தேடிச் செல்கின்றனர் ஆய்வாளர்கள். இப்போது அவர்களுக்குக் கொடுக்கப்படுவது உணர்வு முதிர்ச்சி பற்றிய வினாத்தாள். அவர்கள் தங்கள் வாழ்வில் வருகின்ற உணர்வுகளை - பசி, ஏமாற்றம், வருத்தம், கவலை, ஆசை, தேடல், சோர்வு, விரக்தி - எப்படி கையாளுகிறார்கள் என்பதை அறியும் வினாத்தாள். எந்தக் குழந்தை ஜிலேபியை உடனே சாப்பிட்டதோ அது உணர்வு முதிர்ச்சியில் குறைவான மதிப்பெண் பெற்றதையும், எந்தக் குழந்தை சாப்பிடாமல் வைத்திருந்ததோ அது உணர்வு முதிர்ச்சியில் (Emotional Maturity) அதிக மதிப்பெண் பெற்றதையும் கண்டறிகிறார்கள்.
இதிலிருந்து உருவானதுதான் 'நிவர்த்தி செய்வதைத் தள்ளிப்போடுவது.'
நான் ஓர் ஆசிரியர். நான் வகுப்பு எடுக்கிறேன். வகுப்பில் இரு மாணவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கு கோபம் வருகிறது. உடனே நான் அவர்களை அடித்து விடுகிறேன். என் கோபம் நிவர்த்தியாகிவிடுகின்றது. ஆனால், நான் உணர்வு முதிர்ச்சி இல்லாதவன் ஆகிறேன்.
நான் எந்த அளவுக்கு நிவர்த்தி செய்வதைத் தள்ளி வைக்கிறேனோ அந்த அளவிற்கு என்னுடைய முதிர்ச்சியின் அளவு இருக்கும்.
இது கற்றலில் இரண்டு நிலைகளில் பயன்தரும்:
ஒன்று, ஆசிரியர் மாணவர்கள்மேல் கொண்டிருக்கும் கோபம் போன்ற உணர்வுகளை உடனடியாக நிவர்த்தி செய்தலைத் தவிர்க்க வேண்டும்.
இரண்டு, ஜிலேபி போன்று இருப்பதை நான் தள்ளி வைத்துவிட்டு மற்றதில் ஈடுபாடு காட்ட வேண்டும். நாளை எனக்குத் தேர்வு. இன்று மாலை டிவியில் கிரிக்கெட் பார்ப்பது எனக்கு ஜிலேபி சாப்பிடுவது போல இருக்கும். ஆனால்இ அதை நான் தள்ளி வைத்தலில்தான் என் உணர்வு முதிர்ச்சி இருக்கிறது.
Subscribe to:
Comments (Atom)


