Tuesday, June 30, 2020

On Demand

Pages are Provided On Demand.

Kindly mail to k6kanna@gmail.com

Thanks.

Yesu Karunanidhi


Monday, June 29, 2020

திறன்சார் கற்றல்

ஆங்கிலத்தில் இதை Competency-Based Learning (CBL) என்று சொல்கிறார்கள்.

நாம் புதிதாக ஓட்டுநர் பயிற்சிக்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம்.

வகுப்பறைக்குள் 10 மாணவர்களை அமர்த்துகின்ற ஆசிரியர், காரின் பாகங்கள், கியர் அமைப்பு, பிரேகிங் சிஸ்டம் என அனைத்தையும் நடத்துகிறார். அடுத்த நாள் அதைப் பற்றிய தேர்வு எழுத வேண்டும் எனச் சொல்கிறார். தேர்வும் எழுதியாயிற்று. மூன்றாவது நாள், அவர் நம்மை ஒரு பெரிய வேனில் ஏற்றி, தானாக வண்டியை ஓட்டிக்கொண்டு, 'இதுதான் ஸ்டியரிங், இது பிரேக், இது க்ளட்ச், இது ஆக்ஸெலரேட்டர், இது கியர் பாக்ஸ் என்று சொல்லிக் கொண்டே ஓட்டுகிறார். இது ரிவர்ஸ் கியர், இது ரேர் மிரர்' என எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு, 'அடுத்த வாரம் நீங்கள் வந்து ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொள்ளலாம்' என்கிறார்.

நாம் ஓட்டுநர் உரிமம் வாங்கிவிட்டதால் நமக்கு வாகன ஓட்டத் தெரியும் என்பது பொருளா?

இன்றைய கற்றல் மற்றும் கற்பித்தல் முறை அப்படித்தான் இருக்கிறது. ஒரே மாதிரியான பாடத்திட்டம். ஆசிரியரே அனைத்தையும் வகுப்பறைக்குள் அமர்ந்தவாறே கற்றுக்கொடுப்பார். செய்முறை வகுப்பிலும் அவரே செய்துகாட்டுவார். மாணவர்கள் இங்கே வெறும் பார்வையாளர்களே.

இதுதான் பாரம்பரிய கற்றல் அல்லது கற்பித்தல முறை என்றால், திறன்சார் கற்றல் முறை இதிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது. இந்த அமைப்பு முறையில் மாணவர் தன்னுடைய திறனை வெளிப்படுத்தினால்தான் அவர் அடுத்த நிலை கற்றலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

அதாவது, திறன்சார் கற்றல் முறையில், முதல் கியர் போடுதலில் கான்ஃபிடன்ட் இல்லாத மாணவர் அடுத்த கியருக்குச் செல்லக் கூடாது. படிக்கட்டு முறையில், ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றிலும் திறன் பெற்றபின்தான் அடுத்த கட்டத்திற்கு அவர் நகர வேண்டும்.

இந்த வகைக் கற்றல் மெதுவாக நடக்கும். ஆனால், மாணவர் தான் கற்பதை முழுiமாயகக் கற்க முடியும். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு வேகத்தில் கற்பதால் ஆசிரியர் நிறைய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தொழில்முறைக் கல்விப் பாடங்களைக் கற்றலில் இந்த முறையை நன்றாகப் பயன்படுத்தலாம்.

Sunday, June 28, 2020

தனிப்பயனாக்கப்பட்ட கல்வி

இதை ஆங்கிலத்தில், 'Personalised Learning' என்று அழைக்கிறோம்.

கடந்த இரு வருடங்களாக ஹெச்டிஎப்சி வங்கி ஒரு புதிய வார்த்தையை தன்னுடைய வங்கியின் விற்பனை மேலாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், பெர்ஸனலைஸ்ட் வங்கித் திட்டம். எல்லா பயனர்களும் ஒன்றல்ல, ஒவ்வொரு பயனரும் அல்லது வாடிக்கையாளரும் தனிப்பட்ட தேவைகளை உடையவர். ஆக, அவரவர் தேவைக்கு ஏற்ப வங்கியின் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். 'டெய்லர்-மெய்ட்' என்றும் இதை அழைக்கிறார்கள். ஒவ்வொருவரின் உடலமைப்பிற்கு ஏற்ப ஆடைகள் உருவாக்கப்படுவதுபோல, ஒவ்வொருவரின் தேவையைக் கருதி இத்திட்டம் செயல்படும்.

கற்றல் மற்றும் கற்பித்தலிலும் இன்று அதிகமாகப் பேசப்படுகிறது.

கற்றலில் இன்று நாம் சில எதார்த்தங்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்:

அ. எல்லா மாணவர்களும் மாணவியர்களும் ஒன்றல்ல.

ஆ. எல்லாருடைய கற்கும் திறன்களும் ஒன்றல்ல.

இ. எல்லாருடைய கற்கும் தேவைகளும் ஒன்றல்ல.

அப்படியிருக்க, படிப்பு அல்லது பாடத்திட்டம் மட்டும் ஒன்று என நான் எப்படிக் கொள்ள முடியும்?

ஆக, ஒவ்வொரு மாணவரின் தேவைக்கேற்ப கற்பித்தல் நடைபெற வேண்டும்.

அப்படி என்றால், வகுப்பில் 40 மாணவர்கள் இருப்பார்கள். 40 தடவை அல்லது 40 வழிகளில் கற்றுக்கொடுக்க முடியுமா? என்று நாம் கேட்கலாம். அப்படிக் கற்றுக்கொடுப்பது கடினம்தான். ஒவ்வொருவரும் தனிநபர் என்றால் தேர்வு எப்படி நடத்துவது? மாணவர்களை எப்படித் தரம் பார்ப்பது? நிறைய செய்முறைப் பிரச்சினைகள் இதில் இருக்கவே செய்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த அமைப்பிலேயே மாற்றம் வருதல் அவசியம்.

உரோமையில் நான் பயின்றபோது, என்னுடன் என் பங்கைச் சார்ந்த இளவல் ஒருவனும் உடன் வருவான். அவனுக்கு வயது 9 இருக்கும். அங்கே ஸ்கூல் யூனிஃபார்ம் எல்லாம் கிடையாது. ஆனால், இவன் தினமும் விளையாட்டுக்குரிய ஆடையிலேயே வருவான். 'நீ என்ன படிக்கிற?' என்று ஒருநாள் அவனிடம் கேட்டேன். 'நான் ஸ்கூலுக்கு போறதில்லை. கால்பந்தாட்டப் பள்ளிக்குச் செல்கிறேன். இது எனக்கு மூன்றாவது ஆண்டு' என்றான். ஆக, அவன் தன்னுடைய 6ஆவது வயதிலேயே தன் எதிர்கால இலக்கை நிர்ணயித்துக்கொள்கிறான். அதற்காக பயிற்சி செய்கிறான். பொதுத்தேர்வு, இறுதித்தேர்வு என எந்த தொந்தரவும் அவனுக்கு இல்லை. இதுதான் தனிப்பயனாக்கப்பட்ட கல்வி.

இந்த வகைக் கற்றலில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறையில் சிறப்புற முடியும். 'கற்றல் குறைவு' என்று யாரையும் இக்கல்விமுறையில் முத்திரை குத்த முடியாது. அந்தத் துறை விருப்பம் உள்ள மாணவர்களே அந்தத் துறையில் இருப்பதால் ஆசிரியரின் கற்றுக் கொடுத்தல் எளிதாகும்.

இதை எப்படி ஊக்குவிப்பது?

அ. பெற்றோர்கள் உதவியுடன் ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களின் தனிப்பட்ட திறமைகள் மற்றும் துறைஆர்வங்களை ஆய்ந்தறிய வேண்டும்.

ஆ. துறை அல்லது ஆர்வத்தின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

இ. கற்றலோடு சேர்த்து தங்களின் துறைசார் அனுபவங்களையும் பெற மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

ஈ. மாணவர்கள் தங்கள் கற்றலை வளர்த்துக்கொள்ளத் தேவையான வாய்ப்புக்களை உருவாக்கித் தருதல் வேண்டும்.

உ. வகுப்பறையில் நெகிழ்வுத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

ஊ. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை மற்றும் திறனை மையப்படுத்தி கற்பித்தலின் வேகத்தை வரையறுக்க வேண்டும்.