மாணவர்களையும், ஆசிரியர்களையும், அனைவரையும் பாதிக்கின்ற ஒன்று தள்ளிப் போடுவது.எடுத்துக்காட்டாக, நாம் சில நொடிகள் அமர்ந்து யோசிப்போம். நமக்குப் பிடித்த அல்லது நாம் முக்கியம் எனக் கருதிய ஏதோ ஒன்றைச் செய்ய முடிவெடுத்திருப்போம். ஆனால், அதை இன்றுவரை நாம் செய்யாமல் இருப்போம். புத்தகம் எழுதுவதாக இருக்கலாம், ஹிந்தி கற்பதாக இருக்கலாம், இசைக்கருவி பயில்வதாக இருக்கலாம், யோகா செய்வதாக இருக்கலாம், மருத்துவரைச் சந்திப்பதாக இருக்கலாம். இப்படி ஏதாவது ஒன்றைச் செய்ய நினைத்து நாம் தள்ளிக்கொண்டே போகலாம்.
நாள்கள் செல்லச் செல்ல என்ன ஆகும்? 'இதைச் செய்ய முடியாமல் போகுமோ!' என்ற பயம் வரும். இருபது வயதில் யோகா கற்க வேண்டும் என நினைத்த நான், நாற்பதைத் தொடும் இந்நேரத்தில் அதைக் கற்க முயன்றால் என் உடல் இலகுவாக இருக்காது. இன்னும் ஆண்டுகள் செல்லச் செல்ல இன்னும் இயலாமல் போகும். ஆக, பயம் என்னைத் தொற்றிக்கொள்ளும்.
சிறிய தவளையாக இருந்த ஒன்று நாள் கடக்கக் கடக்க அது பெரிய தவளையாக மாறும்.
இது தவளையின் முதல் பொருள்.
தவளையின் இரண்டாவது பொருள் என்னவென்றால், எனக்குக் கடினமானதாகத் தெரிகின்ற, ஆனால் செய்தே ஆக வேண்டிய ஒன்று. இது என்மேல் சுமத்தப்பட்டதாக இருக்கலாம். அல்லது நானே விரும்பியதாக இருக்கலாம்.
மாணவர்களை எடுத்துக்கொள்வோம். ஒரு மாணவருக்கு தமிழ் மாம்பழம் போல இருக்கலாம், ஆங்கிலம் பிரியாணி போல இருக்கலாம், கணிதம் குளோப் ஜாமுன் போல இருக்கலாம், சமூக அறிவியல் ஐஸ்க்ரீம் போல இருக்கலாம், அறிவியில் தவளை போல இருக்கலாம். அதாவது, பாடங்களில் கடினமாக இருக்கின்ற ஒன்று தவளை போலத் தெரியும்.
இன்னொரு எடுத்துக்காட்டு. நான் தினமும் வலைப்பூவில் பதிவிட வேண்டும் என முடிவெடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம். அந்த வேலையை நான் காலையிலேயே செய்துவிட வேண்டும். நேரம் ஆக ஆக, மற்ற வேலைகள் வர, வர எனக்கு இந்த தவளை பெரியதாகிக் கொண்டே வரும். மாலையில் நான் அந்த வேலையைப் பார்க்கும்போது அது பெரியதாக, கடினமானதாக இருக்கும். விளைவு, நான் ஏதோ ஒப்புக்கு அதைச் செய்து முடிப்பேன்.
'தவளையைச் சாப்பிடுதல்' என்பது நேர மேலாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு கருதுகோள்.
இந்தக் கருதுகோளின் ஆசிரியர் ப்ரியன் ட்ரேஸி என்பவர். இவர் எழுதிய ... என்னும் புத்தகத்திற்குப் பின் இந்தக் கருதுகோள் மிகவும் பிரபலமானது.
தவளையை நீங்கள் சாப்பிடுவீர்களா?
தவளையைக் கண்டிப்பாகச் சாப்பிட்டே ஆக வேண்டும் என்றால் என்ன செய்வது?
ஒரு தட்டில் பிரியாணி, குலோப் ஜாமுன், முட்டை, ஐஸ்க்ரீம், தவளை என வைத்து நம்மைச் சாப்பிடச் சொன்னால் நாம் முதலில் எதைச் சாப்பிடுவோம்? எதைச் சாப்பிட வேண்டும்?
தவளையைத்தான் சாப்பிட வேண்டும்.
தவளையைச் சாப்பிட்டுவிட்டோம் என்றால், அது பெரியதாக வளர்ந்து நம்மை பயமுறுத்தாது. மேலும், மற்றதை ருசித்துச் சாப்பிட நம்மால் இயலும். இல்லை என்றால், மற்றதை எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே இருந்தாலும் தவளை நம்மை முறைத்து பார்த்துக்கொண்டே இருக்கும்.
சில மாணவர்கள், தமிழ் தங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக அந்தப் பாடத்தை மட்டுமே படித்துக்கொண்டிருப்பார்கள். கணிதம் தவளை போல இருப்பது என்பதற்காக அதை அப்படியே ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஆனால், அதே மாணவர்கள் முதலில் கணிதத்தைக் கொன்று சாப்பிட்டுவிட்டால், எளிதாக தமிழைப் படித்துவிட முடியும்.
சரி. தவளையை எப்படிச் சாப்பிடுவது?
அ. உடனே சாப்பிட வேண்டும்
அதாவது, ப்ரேக் போட வேண்டும் என நினைத்தால் மட்டும் வண்டி நிற்காது. ப்ரேக் போட்டால்தான் வண்டி நிற்கும். அதுபோல, கணிதம் படிக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. உடனே புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு சின்ன தயக்க நொடி இருக்கும். அதை உடனே வெல்ல வேண்டும்.
ஆ. இரண்டு தவளைகள் இருந்தால், அவற்றில் பெரிய தவளையை முதலில் சாப்பிட வேண்டும்.
நமக்கு ஒரே நேரத்தில் நிறைய விடயங்கள் தவளைகளாக இருக்கலாம். அவற்றில் மிகவும் கடினமானதை முதலில் சாப்பிட வேண்டும்.
இ. நேர்முக அடிமையாதல்
அதாவது, மது போன்ற தீய பழக்கங்களுக்கு எதிர்மறையாக அடிமையாதல் போல, நல்ல பழக்கங்களுக்கு நேர்முக அடிமையாக வேண்டும். கர்ணன் ஈகைக்கு அடிமையானது போல. ஒரு செயல் நம்முடைய இரண்டாவது இயல்பாக வரும் வரை அதைப் பழக்கப்படுத்திக்கொள்வது. ஆக, தவளையை உண்பதையே ஒரு பழக்கமாகக் கொண்டு அதற்கு நேர்முகமாக அடிமையாகிவிடுவது.
ஈ.முன்கூட்டியே திட்டமிடுவது
தவளையைச் சாப்பிட எவ்வளவு நேரம் ஆகும் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது. அல்லது அவசர அவசரமாகச் செய்ய நேரிடும். அப்படிச் செய்வதும் செய்யாமலிருப்பதும் ஒன்றே.
உ. குறுக்குவழி அறவே கூடாது
கணிதத்தில் ஒரு தேற்றம் கடினமாக இருக்கிறது என்பதற்காக, புத்தகத்திலிருந்து அந்தப் பக்கத்தை கிழித்து சட்டைக்குள் வைத்துக் கொண்டு தேர்வறை செல்வதே குறுக்குவழி. அது தவளையைப் பைக்குள் சுமப்பது போல ஆகும். அது இன்னும் கொடியது.
நேர மேலாண்மையில் வளர இனிய வழி தவளையைச் சாப்பிடுவது.
தவளையைச் சாப்பிடுவது என்னும் நேர மேலாண்மை பற்றி இன்னும் அறிய பின்வரும் இணைப்பைக் க்ளிக்கவும்:
Eat That Frog