Friday, May 22, 2020

தலைமுறை அறிதல்

இந்தக் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது, வயதின் அடிப்படையில் நேரங்களை அரசு வகுத்திருந்தது. 'காலையில் தாத்தா, மதியம் அப்பா, மாலையில் மகன் - இதுதான் தலைமுறை இடைவெளி' என்ற ஒருவர் டுவிட்டரில் இதைக் கீச்சிட்டிருந்தார்.

நம் வகுப்பில் மாணவர்களோடு நாம் ஊடாடும் கற்பித்தல் முறையில் ஈடுபட வேண்டுமென்றால், மாணவர்களின் தலைமுறையை அறிதல் வேண்டும்.

சமூகவியல் ஆய்வாளர்கள் பிறப்பின் அடிப்படையில் மனித தலைமுறைகளை நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார்கள்:

(அ) 'பேபி பூமர் தலைமுறை' ('Baby Boomer Generation') (1946 - 1964)

1946 முதல் 1964 ஆண்டுக்குள் பிறந்த குழந்தைகள் இத்தலைமுறையைச் சார்ந்தவர்கள். இதற்கு முன்னால் பிறந்தவர்களும் இத்தலைமுறைக்குள் வருவர். இவர்கள் எதையும் மெதுவாகச் செய்ய எத்தனிப்பவர்கள். இவர்களைப் பொருத்துவரையில் வேகம் என்பது ஆபத்து. மெதுவாகக் கற்றல் சிறப்பு, நீண்ட கால உறவு சிறப்பு, நீண்ட காலம் வாழ்தல் சிறப்பு, மௌனம் சிறப்பு, ஆழமாகக் கற்றல் சிறப்பு என்று இவர்கள் நினைப்பார்கள். ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும், அதை நிறைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். இத்தலைமுறையில் பிறந்தவர் பெரிய விஞ்ஞானியாக இருப்பார். ஆனால், இரயில் நிலையத்தில் வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்ய இவருக்குத் தெரியாது. தன் துறையில் சிறப்புடன் இருப்பார். மற்ற எதைப் பற்றியும் துளியும் அறிந்திரார்.

(ஆ) 'எக்ஸ் தலைமுறை' ('Generation X') (1965 - 1980)

இவர்கள் 1965 முதல் 1980 ஆண்டுக்குள் பிறந்தவர்கள். இவர்கள் எப்போதும் எதையாவது செய்துகொண்டிருக்க வேண்டும் என நினைப்பவர்கள். நிறையச் செய்ய வேண்டும், நிறைய நபர்களைச் சந்திக்க வேண்டும், நிறைய பயணங்கள் செய்ய வேண்டும், நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள். ஆனால், இவர்கள் மற்றவர்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். கடாமுடா என்று பதில் சொல்வார்கள். அடுத்தவர்களை மட்டம் தட்டுவார்கள். ஏனெனில், தொழிற்புரட்சி வேகம் எடுத்து புதிய கண்டுபிடிப்புக்கள் வர ஆரம்பித்த காலத்தில் பிறந்தவர்கள். பழையவற்றுக்கும் புதியவற்றுக்கும் இடையே அலைக்கழிக்கப்படுபவர்கள்.

(இ) 'ஒய் தலைமுறை' (Generation Y') (1981 - 1996)

1981ஆம் ஆண்டுக்கும் 1996ஆம் ஆண்டுக்கும் இடையே பிறந்த இவர்கள் தொழில்நுட்பத்தோடு வளர்பவர்கள். கணிணியோடு பிறந்தவர்கள். ஏறக்குறைய எல்லா பெரிய கண்டுபிடிப்புக்களும் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டன. மற்ற கண்டுபிடிப்புக்கள் எல்லாம் முந்தைய கண்டுபிடிப்புக்களின் நீட்சியே. இவர்கள் படிப்போடு இணைத்து திறன்களும் வாழ்க்கைக்கு அவசியம் என்று உணர்ந்தவர்கள். இவர்கள் 'மில்லேனியல்' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஏனெனில், இவர்கள் இளவயது வரும்போது புதிய மில்லேனியம் பிறக்கின்றது. இவர்களுக்கு நிறைய விடயங்கள் தெரியும். ஆனால், எதுவும் ஆழமாகத் தெரியாது. மேலும், எதைப் பற்றியும் தெரியாது. ஆனால், எல்லாவற்றையும் எங்கே தெரிந்துகொள்ளலாம் என்பது தெரியும். எடுத்துக்காட்டாக, 'மொகஞ்சதொரோ நாகரீகம் என்றால் என்ன?' என்று கேளுங்கள். அவர்களுக்கு விடை தெரியாது. ஆனால், அந்த விடையை எங்கே காணலாம் என்பது அவர்களுக்குத் தெரியும். உடனடியாக, விக்கிபீடியாவில் தேடுவார்கள்.

(ஈ) 'ஸெட் தலைமுறை' ('Generation Z') (1997 - 2015)

இவர்கள் எண்ணியல் தலைமுறையினர். செயல்திறன் அலைபேசியுடன் பிறந்தவர்கள். இவர்களைப் பற்றி நன்றாக அறிந்துகொள்வோம். ஏனெனில், இவர்கள்தாம் இன்றைய நம் பள்ளி மாணவர்கள்.

1. குறைவான கூர்நோக்கு கொண்டவர்கள்

இவர்களின் கவனம் மிகக் குறைவு. அதிகமாக இவர்களால் 11 நிமிடங்களுக்கு மேல் எதையும் கவனிக்க முடியாது. மேலும், எதையும் கூர்ந்து நோக்க மாட்டார்கள். ஏனெனில் எதுவும் இவர்களுக்கு நிரந்தரமல்ல. எடுத்துக்காட்டாக, இன்று ஐஃபோனில் ஓ.எஸ் 12.1 இருக்கிறது என வைத்துக்கொள்வோம். நாளை அது 13.1 ஆக அப்டேட் ஆகிவிடும். ஆக, அவுட்டேட் ஆகும் எதையும் இவர்கள் கற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஒவ்வொரு நாளும் உலகம் மாறிக்கொண்டே இருப்பதால் இவர்களும் எதையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.

2. மல்டி டாஸ்கிங்

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் பெற்றவர்கள். ஏனெனில், இவர்களின் செயல்திறன்பேசிகளும் அப்படித்தான். ஃபோன் பேசிக்கொண்டே டெக்ஸ்ட் செய்யலாம். டெக்ஸ்ட் செய்து கொண்டே பாட்டு கேட்கலாம். பாட்டு கேட்டுக்கொண்டே புத்தகம் வாசிக்கலாம். புத்தகம் வாசித்துக்கொண்டே வாய்ஸ் ரெக்கார்ட் செய்யலாம். வகுப்பிலும் இவர்கள் பாடத்தைக் கேட்பதோடு வேறு எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள்.

3. சமரசம் செய்பவர்கள்

கடின உழைப்போடு சமரசம் செய்பவர்கள். கடினமாக உழைப்பதைவிட ஸ்மார்ட்டாக உழைப்பது எப்படி என்பதை அறிபவர்கள். 

4. இளவயது தொழிலதிபர்கள்

சிறிய வயதிலேயே யூட்யூப் சேனல் தொடங்கி பணம் சம்பாதிப்பவர்கள். விரைவாக வேலை செய்யத் தொடங்குவார்கள் இவர்கள். 

5. தன்மையம் கொண்டவர்கள்

இவர்களுடைய உலகத்தில் மூவர்தான் உயிர் வாழ்கின்றனர்: 'நான், எனது, எனக்கு'. இதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. வகுப்பில் ஒரு மாணவன் தண்ணீர் கொண்டு வராமல் வந்தால், தண்ணீர் வைத்திருக்கும் மாணவன் தண்ணீரைப் பகிர மாட்டான். 'மிஸ், இவன் தண்ணீர் பாட்டில் கொண்டு வரல!' என்று சொல்வான். தனக்கென வாழ்வதை ஒரு மதிப்பீடாகக் கொண்டவர்கள் இவர்கள்.

6. உலகம் சுற்றுபவர்கள்

இவர்கள் சிற்றூரில் பிறந்தவர்கள் என்றாலும் இவர்கள் உலகெல்லாம் சுற்றும் திறன் பெற்றவர்கள். மெய்நிகர் அளவிலும் நேரிடையாகவும் இவர்கள் உலகை வலம் வருபவர்கள். 

நிற்க.

இன்றைய நம் ஆசிரியர்கள் பெரும்பாலும் 'பேபி பூமர்,' 'எக்ஸ்,' மற்றும் 'ஒய்' தலைமுறைகளைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். நாம் கையாள வேண்டிய மாணவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். நம் தலைமுறையோடு எந்தவிதத்திலும் பொருந்தாதவர்கள்.

இவர்களைக் கையாள நாம் தலைமுறை கடந்து சிந்திக்க வேண்டும். இவர்களின் வார்த்தைகள் நம் வார்த்தைகளாக மாற வேண்டும்.