Monday, May 18, 2020

போரடிக்கும் டீச்சர்


'என் அன்புக்குரிய போரடிக்கும் டீச்சர்,


வகுப்பறையில் உங்களது இடது புறத்தின், கடைசி பெஞ்சின் மூலையில் உட்கார்ந்திருக்கும் மாணவி நான். மற்ற மாணவியர் போல அறிவை புத்தகங்களில் தேட நான் விரும்பாததால், எனக்குரிய வியப்பு உலகத்தில், ஜன்னலுக்கு வெளியே நான் தேட விரும்புவதால் இந்த இடத்தைத் தேர்வு செய்தேன். இந்த இடத்திலிருந்து வகுப்பறையின் கரும்பலகையை விட, ஜன்னலின் வழியே சாலைகள் நன்றாகத் தெரியும். உலகம் என்ற அந்த உன்னதமான இடத்தை நான் இங்கிருந்து தரிசிக்கிறேன். அங்கே சென்று, அதை ஆராயவும், அதனோடு விளையாடவும் நான் விரும்புகிறேன்.

நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களுக்கு, 'ஆம்' 'இல்லை' என்று தலையாட்டிக்கொண்டு இங்கே அமர்வது எனக்குப் பிடிக்கவில்லை. நான் மக்கு என நீங்கள் நினைக்கலாம். ஆனால், எனக்கு நிறைய படைப்பாற்றல் உண்டு.

நீங்கள் போரடிக்காமல் வகுப்பெடுக்க நான் உங்களுக்குச் சில ஆலோசனைகள் வழங்குவீர்களா! நாற்பத்தைந்து நிமிடங்கள் நான் நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன். இன்று நான்கு நிமிடங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள்!

என்னை உங்களுக்குத் தெரியுமா?

என்னை உங்களுக்குத் தெரியுமா? ஃபேஸ்புக்கில் எனக்கு 2000 நண்பர்கள் உண்டு. 

வகுப்பில் மவுஸ் போல அமர்ந்திருக்கும் சமூக வலைதளங்களில் மவுஸ் பிடித்து விளையாடுவதில் கில்லாடி. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ம்யூஸிக்கலி என்று நான் கலக்காத இடமே கிடையாது. சமூக வலைதளங்கள் கொண்டு, இணையதள செயலிகள் கொண்டு வகுப்பெடுக்க நான் உங்களுக்குக் கற்றுத்தரவா? சாக்பீஸ் தூக்கி எறிந்து மவுஸ் பிடியுங்கள்.

என்னை உங்களுக்குத் தெரியுமா? போன வாரம் என் பெற்றோருக்கு விவாகரத்து ஆயிற்று. 

இப்போது நான் என் தாத்தா-பாட்டியோடு தூங்குகிறேன். அம்மாவுடன் போகவும் எனக்கு விருப்பமில்லை. அப்பாவுடன் போகவும் எனக்கு விருப்பமில்லை. அம்மாவையும் அப்பாவையும் விட்டுப் பிரிந்திருப்பது எவ்வளவு கொடிது என்பதை என் கண்களின் கண்ணீர்த்துளிகள் சொல்கின்றன. நான் வகுப்பறைக்கு வெளியே பார்த்துக்கொண்டே இருக்கிறேன் என சாடுகிறீர்கள். நான் வேடிக்கை பார்க்க அல்ல, என் கண்ணீரை மற்றவரிடமிருந்து மறைக்கவே வெளியே திரும்பிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒருநாள் விடுமுறை கொடுங்கள். என் அம்மா, அப்பாவை இணைத்து வைக்க நான் முயல்வேன். உங்களின் வகுப்பு கற்றுத்தராததை என் ஒப்புரவுச் செயல் எனக்குக் கற்றுத்தரும்.

என்னை உங்களுக்குத் தெரியுமா? விளையாட்டு மைதானத்தில் தனியே நின்றுகொண்டிருப்பவள் நான்.

சில மாதங்களுக்கு முன் என்னைக் கேலி செய்த என் சக மாணவ, மாணவியர் என்னை விரட்டி வர, நான் செம்மண் மைதானத்தில் விழுந்து என் கைகளையும், கால்களையும் சிராய்த்துக்கொண்டேன். என் ஷூ பிய்ந்துபோய், என் ஸாக்ஸூம் கிழிந்தது. எனக்கு என்ன நடந்தது என்று கேட்க வீட்டில் என் பெற்றோர் இல்லை. என்னை ஏன் மற்றவர்கள் கேலி செய்கிறார்கள்? என்னிடம் என்ன குறை இருக்கிறது? நான் அவர்களோடு எதிர்த்துச் சண்டையிட வேண்டுமா? அல்லது உங்களிடம் வந்து நான் பேசவா? என் பிரச்சினையை நீங்கள் தீர்த்து வைப்பீர்களா? அடுத்தவர்கள் கேலி செய்யும்போது சிரித்துக்கொண்டே அவர்களை எதிர்ப்பது எப்படி என நீங்கள் கற்றுத் தாருங்கள். ஐன்ஸ்டீனின் பாடம் காத்திருக்கட்டும்.

என்னை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் வகுப்பிற்குத் தாமதமாக வரும் ஒவ்வொரு நாளும் முகம் சுளிப்பது நான்தான்.

ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் தாமதமாகவே நீங்கள் வகுப்பிற்கு வருகிறீர்கள். எங்கள் வகுப்பிற்கு வருவதைவிட முக்கியமான வேலை உங்களுக்கு ஆசிரியர் அறையில் இருக்கிறதா? உங்கள் தோழியிடம் நீங்கள் பின்னர் பேசக் கூடாதா? உங்கள் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளுக்குப் பின்னர் பதில் தரக்கூடாதா? எங்களுக்கு நீங்கள் தரும் மதிப்பு இவ்வளவுதானா! நாங்கள் குழந்தைகளாக இருப்பதால் எங்களை நீங்கள் மதிப்பதில்லையா? பள்ளியின் முதல்வர் அழைக்கும் கூட்டத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னால் செல்லும் நீங்கள், வகுப்பறைக்கு 10 நிமிடங்கள் பின்னால் வருவதேன்?

என்னை உங்களுக்குத் தெரியுமா? வகுப்பறையில் விளையாடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

விளையாட்டின் வழியாக நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை என் தாத்தா-பாட்டி ஞாயிறு விடுமுறையில் எனக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர். புத்தகத்தின் முகத்தையும், உங்கள் முகத்தையும் பார்த்துப் பழகிப்போன எங்களுக்கு, ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்த்து பாடம் கற்க உதவுங்கள்.

என்னை உங்களுக்குத் தெரியுமா? என் திறன்கள், திறமைகள் எனக்கு முழுமையாகத் தெரியாது.

வெறும் மதிப்பெண்களை வைத்து என்னை மதிப்பிடுவது எனக்குப் பிடிப்பதில்லை. நான் வாங்கும் ஏ அல்லது ஏப்ளஸ்தான் நானா? எண்களைத் தாண்டி என்னிடம் ஒன்று இல்லையா? யானைக்கும் குரங்குக்கும் ஒரே மரம் ஏறுதல் போட்டியை வைத்து, குரங்கு வென்றுவிட்டது என்று சொல்கிறீர்களே? இது தவறு இல்லையா? ஆனால், யானை ஒரு மிதி மிதித்தால் மரம் உடைந்துவிடும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என் மதிப்பெண்களை எனக்குக் காட்டுவதைவிட, என் மதிப்பு என்ன என்பதை எனக்குக் காட்டுங்கள்.

என்னை உங்களுக்குத் தெரியுமா? ஒரே மாதிரியான எடுத்துக்காட்டுக்களையே நீங்கள் கொடுக்கிறீர்கள்.

நீங்கள் கல்லூரியில் அறிவியில் கற்றதற்கும், பி.எட் கற்றதற்கும் இன்றைக்கும் இடையே நிறைய ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள். அன்றாடம் உங்களையே நீங்கள் அறிவிலும் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

இப்போது என்னை உங்களுக்குத் தெரியும்!

ஒரு மாணவியை மாணவி நிலையில் புரிந்துகொள்வதற்கான எனது சிறிய பரிந்துரை இது. நான் உங்களை விமர்சனம் செய்யவில்லை. உங்களுக்கு ஆலோசனை சொல்லும் வயது எனக்கில்லை. நீங்கள் ஓர் இனிய ஆசிரியர். கற்பித்தலை கற்கண்டாக்க நான் காணும் சில வழிகள் இவை.

நன்றி.

அன்புடன்,

கடைசிப் பெஞ்சு மாணவி'
______
தழுவல்: ரூபன் நாபென், Dear boring teacher - 7 things you need to know about your students to be a better teacher, from book widgets.com, accessed on 18 May 2020.