ஐந்தாம் வகுப்பு வரை நான் என்னுடைய குக்கிராமத்தில் (ஜமீன் நத்தம்பட்டி) கல்வி பயின்றேன். ஆறாம் வகுப்பிற்காக எங்கள் ஊரிலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள சத்திரப்பட்டி அரசினர் மேனிலைப்பள்ளியில் சேர்ந்தேன். ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியையாகவும், வகுப்பாசிரியையாகவும் எனக்கு வந்த திருமதி. பழனியம்மாள் டீச்சர். முதல் வகுப்பிலேயே, பாராட்டுதலின் அவசியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். அதாவது, மணி அடித்து ஆசிரியை வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், எழுந்து நின்று, 'குட்மார்னிங் டீச்சர்! ஹவ் ஆர் யூ?' எனக் கேட்க வேண்டும். அவர், 'குட்மார்னிங் டார்லிங்ஸ்! ஐ ஆம் ஃபைன். ஹவ் ஆர் யூ?' எனத் திரும்பக் கேட்பார். அத்தோடு முடிந்துவிடாது. 'வீ ஆர் ஃபைன்' என்று சொல்லி முடிக்கும் நேரம் அவர் தன்னுடைய இருக்கைக்கு வந்துவிடுவார். வந்தவுடன், நாங்கள் ஒருவர் மற்றவரிடம் திரும்பிப் பார்த்து, அந்த மாணவர் அல்லது மாணவியிடம் நாங்கள் காணும் நல்லது ஒன்றைப் பாராட்ட வேண்டும்: 'உன் தலைமுடி நேர்த்தியாக இருக்கிறது!' 'நீ நன்றாக சடை பின்னியுள்ளாய்' 'நீ அழகாக சிரிக்கிறாய்!' 'உன் புத்தகப்பை சுத்தமாக இருக்கிறது!' 'நீ நகங்களை வெட்டியுள்ளாய்!' 'உன் நெற்றியின் திருநீறு உனக்கு எடுப்பாக இருக்கிறது!' 'நீ புத்தகத்திற்கு நன்றாக அட்டை போட்டுள்ளாய்!' இப்படி எதையாவது நாங்கள் சொல்லிப் பாராட்ட வேண்டும். அந்த வயதில் இது விளையாட்டாக இருந்தாலும், இன்று எண்ணிப்பார்க்கும்போது அந்த ஆசிரியையின் இந்த அற்புதமான குணம் என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது.
உளவியலில் 'உரையாடல் பகுப்பாய்வு' ('transactional analysis') என்ற ஒரு பிரிவு உண்டு. அந்த உளவியலில், பாஸிட்டிவ் ஸ்ட்ரோக் ('positive stroke') அதிகமாக வலியுறுத்தப்பட வேண்டும். அதாவது, நேர்முகமாக ஒரு குணத்தைச் சொல்லிப் பாராட்டுவது. நிறைய பாஸிட்டிவ் ஸ்ட்ரோக் கொடுக்கும்போது, அது கொடுப்பவரின் மனத்தையும் நேர்முகமாக்குகிறது. பாராட்டப்படுபவரின் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி கொடுக்கிறது.
வகுப்பறையில் ஆசிரியர் மாணவ, மாணவியரைப் பாராட்டுதல் சால்பு.
பாராட்டுதல் (praise or appreciation) எப்படி வரும்?
நிறைந்த மனம் (abundance mindset) கொண்டவர்கள் மட்டும்தான் அடுத்தவர்களைப் பாராட்ட முடியும். ஒரு வெள்ளைத் தாளில் ஒரு கறுப்பு புள்ளி இருப்பதைப் பார்ப்பவர்களால் பிறரைப் பாராட்ட முடியாது. அந்தக் கறுப்பு புள்ளி தவிர்த்து முழு வெள்ளையையும் பார்ப்பதுதான் நிறைந்த மனம் அல்லது நிறைவு மனம். அதிலிருந்து பாராட்டுதல் இயல்பாக வரும்.
ஆசிரியர்கள் மாணவர்களை மூன்று நிலைகளில் பாராட்டலாம்:
அ. தனிநபர் (personal) பாராட்டு
'உன் குரல் இனிமையாக இருக்கிறது!' 'உன் கண்கள் அழகாக இருக்கின்றன!' 'நீ வாசிக்கும்போது உன் குரல் அழகாக இருக்கிறது!' - இப்படி ஒருவரின் தனிநபர் பண்புகளை, குணங்களை, இயல்புகளைப் பாராட்டுவது.
ஆ. செயல் அல்லது முயற்சிசார் (effort-based) பாராட்டு
'நீ இன்று நன்றாகப் பாடினாய்!' 'நீ நன்றாக உரையாற்றினாய்!' 'நீ ஓட்டப் பந்தயத்தில் நன்றாக ஓடினாய்' 'நீ கவிதை நன்றாக எழுதினாய்' - இப்படியாக ஒரு மாணவர் செய்த செயல்கள் அல்லது அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவது.
இ. நடத்தைசார் (behaviour-based) பாராட்டு
'நீ இன்று சரியான நேரத்திற்கு வந்தாய்!' 'நீ உண்மை பேசுகிறாய்!' 'நீ தூய்மையாக இருக்கிறாய்!' - இப்படி ஒருவரின் நடத்தையை அல்லது செயல்பாட்டைப் பாராட்டுவது.
இப்பாராட்டு எப்படி இருக்க வேண்டும்?
அ. குறிப்பிட்டதாக இருக்க வேண்டும் (be specific)
'நீ அமைதியாக இருக்கிறாய்!' என்று சொல்லக் கூடாது. மாறாக, 'நீ பாடம் நடத்தும்போது அமைதியாக இருக்கிறாய்' எனக் குறிப்பிட்டுச் சொல்வது. 'நீ உண்மையானவன்' என்பது பொதுவானது. ஆனால், 'நீ தேர்வில் உண்மையாக இருக்கிறாய்' என்று குறிப்பிட்டுச் சொல்வது.
ஆ. விளைவை அல்ல, செயல்முறையை மையப்படுத்தி இருக்க வேண்டும் (concentrate on the process, not on the result)
'நீ 100 மதிப்பெண் வாங்கியுள்ளாய்' என்று பாராட்டுவதை விட, 'நீ 100 மதிப்பெண் வாங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறாய்' என்று அந்த மாணவன் படிக்கும்போதே பாராட்ட வேண்டும்.
இ. நேர்மையாக இருக்க வேண்டும் (be honest)
நாம் உண்மையாகப் பாரட்டுகிறோமா அல்லது போலியாகப் பாராட்டுகிறோமா அல்லது ஏமாற்றுகிறோமா என்பதைக் குழந்தைகள் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆக, பாராட்டுபவர் நேர்மையாக இருத்தல் அவசியம்.
ஈ. ஒப்பீடு தவிர்க்க வேண்டும் (avoid comparison)
'நீ அவனைப் போல 100 மதிப்பெண் வாங்கியுள்ளாய்' 'நீ அவனைப் போல சுத்தமான சீருடை அணிந்துள்ளாய்' என்று சொல்தல் கூடாது.
உ. பலர்முன் பாராட்ட வேண்டும் (appreciate in front of others)
'குறைகளை எங்களிடம் சொல்லுங்கள். நிறைகளை நண்பர்களிடம் சொல்லுங்கள்' என்று ஓட்டலில் எழுதியிருப்பார்கள். மாணவர்களின் குறைகளைத் தனிப்பட்ட விதத்திலும், நிறைகளை பலர்முன்னும் பாராட்ட வேண்டும். எனக்கு எட்டாம் வகுப்பு எடுத்த செல்வி. தேவி டீச்சர் அவர்கள் தன் கணித வகுப்பில் ஃபெயில் ஆன மாணவ, மாணவியரின் விடைத்தாளை, மறைத்து அவர்களுக்கு மட்டும் தெரியுமாறு கொடுப்பார். இவ்வாறாக, பாடத்தில் தவறிய மாணவ, மாணவியரின் தன்மதிப்பைக் காயப்படுத்தாத இனியவர் அவர். ஆக, குறைகளைத் தனியாகவும், நிறைகளை எல்லார் முன்னும் பாராட்ட வேண்டும்.
ஊ. மிகைப்படுத்துதல் கூடாது (don't exaggerate)
'உன் ஆடை சுத்தமாக இருக்கிறது!' என்று சொன்னால் போதும். அதை விட்டு, விஜய் டிவியில் அள்ளி இறைப்பது போல, 'வா...வ்! சான்ஸே இல்ல! பின்னீட்டிங்க! சூப்பர்! அமேஸிங் ... டேஸ்லிங் ஒயிட்!' என்று மிகைப்படுத்துதல் கூடாது.
இதை வாசிக்கும் உங்களுக்குப் பாராட்டுக்கள்! ஏனெனில், நீங்கள் உங்கள் நேரத்தையும், ஆற்றலையும், இணைய இணைப்பையும் இதற்காக செலவழித்தீர்கள்.