Wednesday, May 20, 2020

வாழ்வின் முக்கியமானவை

என்னுடைய ஏழாம் வகுப்பில், வகுப்பாசிரியராக இருந்தவர் திரு. முருகேசன். காலையில் முதல் வகுப்பில் ஆங்கிலமும், மதியம் முதல் வகுப்பில் அறிவியலும் எடுப்பார். அவர் எங்கள் பள்ளிக்குப் புதிதாக வந்தவர். எங்களுடைய வகுப்புதான் அவருக்கு முதல் அனுபவம். அவருக்கு வயது ஏறக்குறைய 45 இருக்கும். புல்லட்டில் வருவார். நன்றாகப் புகைபிடிப்பார். புகைபிடித்துவிட்டு, ஒரு பாக்கு போட்டுவிட்டு வகுப்பிற்குள் வருவார். அவர் பிடித்த சாக்பீஸ் கூட புகையின் மணம் கொண்டிருக்கும். கடந்த சில ஆண்டுகளாக அவர் எங்கிருக்கிறார் என்பதைப் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மூன்று காரணங்களுக்காக இவரை எனக்குப் பிடிக்கும்:

(அ) அனைவரையும் சமமாக நடத்துதல்

என்னுடைய வகுப்பில் கதிரவன் என்ற மாணவன் இருந்தான். அவன் அன்று எங்கள் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராய் இருந்த திரு. வி.பி.இராசன் அவர்களின் அன்பு மகன். வி.பி.ஆர். கதிரவன் என்றுதான் தன்னுடைய புத்தகங்களில் எழுதியிருப்பான் கதிரவன். இன்று எந்த அரசியல்வாதியின் மகனும் அரசுப் பள்ளியில் படிப்பதில்லை என நினைக்கிறேன். கதிரவன் பகட்டில்லாத பையன். மதிய இடைவேளையில் நாங்கள் அடிக்கடி அவன் வீட்டுக்குச் செல்வோம். இவனுக்கும் முருகேசன் ஸாருக்கும் என்ன தொடர்பு? முருகேசன் ஸார் வகுப்பில் உள்ள அனைவரையும் சமமாக நடத்துபவர். அவர் யாரிடமும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை.

(ஆ) தேவை அறிபவர்

நான் ஒருமுறை மதிய உணவில் புழு இருந்ததால் அதைச் சாப்பிட முடியாமல் கீழே கொட்டிவிட்டேன். அன்று மதியம் முதல் வகுப்பில் - முருகேசன் ஸார் வகுப்பில் - மயங்கி விழுந்துவிட்டேன். காரணம் கேட்ட அவர், அன்றிலிருந்து அடுத்த ஆண்டின் இறுதிவரை எனக்காக அவருடைய வீட்டிலிருந்து மதிய உணவு சுமந்து வந்தார். மாணவர்களின் கால்களுக்குச் செருப்பணிவித்து, புதிய பேனாக்களை பரிசளித்து அழகுபார்த்தவர். ஒவ்வொரு மாணவனின் தேவையை எளிதாக அறிந்து, அதை நிறைவேற்றுபவர் இவர்.

(இ) ஒருவன் என்னவாக இருக்கிறான் என்பது அல்ல, அவன் என்னவாக மாற முடியும் என்பதே முக்கியம்

ஒரு மாணவனின் சாதி, மதம், மொழி, குடும்ப பின்புலம் ஆகியவை அவன் என்னவாக இருக்கிறான் என்பதைக் காட்டுகின்றன. ஆனால், அவன் என்னவாக மாறப் போகிறான் என்பது இவற்றில் அடங்குவதில்லை. அது இவை அனைத்தையும் கடந்தது. ஆக, இருப்பதை விடுத்து, மாற்றத்தை மையமாக வைத்து அனைவரையும் நடத்துபவர் இவர்.

இவருடைய வாழ்வியல் கொள்கை மிகவும் எளிதானது:
'நம் வாழ்வின் முக்கியமானவை நமக்கு வெளியில் இருப்பதில் அல்ல, மாறாக, நமக்கு உள்ளே இருப்பதில்தான்!'

வெளியில் புகை பிடித்துக்கொண்ட அந்த மனிதர் உள்ளே எந்தவித நெருப்பும் இல்லாமல் இருந்தார்.

ஏனெனில், அவருக்குத் தெரியும் வாழ்வின் அழகு நமக்கு வெளியில் அல்ல, நமக்கு உள்ளே என்று.