எஸ்.ஸி.எல் (SCL) என்றழைக்கப்படும் 'மாணவர் மையக் கற்றலில்' (Student Centred Learning) உள்ள ஒரு முறையின் பெயர் குழுச் சிந்திப்பு. ஆங்கிலத்தில், 'Brainstorming'. இது வழக்கமாக கார்பரெட் நிறுவனங்கள் அல்லது பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் புதிய கருத்துக்களை அல்லது புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துமுன் செய்யக் கூடியது.
ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லலாம்:
'கோல்கேட் பற்பசையின் விற்பனையை எப்படி அதிகரிப்பது?'
இந்தக் கேள்வி எழுப்பப்பட, சுற்றி அமர்ந்தவர்கள் தங்களின் மனத்தில் எழும் எண்ணங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 'விளம்பரத்தைக் கூட்ட வேண்டும்,' 'பற்பசைப் பெட்டியை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் வடிவமைக்க வேண்டும்,' 'இப்போது ட்ரெண்டில் இருக்கும் ஒரு நடிகையை வைத்து விளம்பரம் செய்ய வேண்டும்,' 'ஆஃபர் கொடுக்க வேண்டும்,' 'கடைக்காரர்களைச் சந்திக்க வேண்டும்' - இப்படி நிறையப் பேர் - அனைவரும் எம்.பி.ஏ படித்தவர்கள் - சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அந்நேரத்தில் அங்கு டீ கொண்டுவருகின்ற இளைஞன், 'சார்! நான் ஓர் ஐடியா சொல்லவா?' என்கிறான். ஆச்சர்யத்தோடு அனைவரும் பார்க்கிறார்கள். 'பற்பசை ட்யூப்பின் வாயை அகலமாக்குவது!' - ஆம்! வாயை அகலமாக்கினால், வேகமாகக் காலியாகும், நிறைய விற்பனையாகும்.
இந்த முறைக்குப் பெயர்தான் குழுச் சிந்திப்பு.
வகுப்பறை கற்றலில் இந்த முறைமை பல்வேறு மாணவர்களை ஆர்வமுடன் பங்கேற்க வைக்கிறது. மேலும், ஒரே பிரச்சினை அல்லது கருத்தின்மேல் மாணவர்கள் பலர் கருத்துக்கள் தெரிவிப்பதால் ஒரே கருத்தைப் பல கோணங்களில் பார்க்கும் திறனையும் மாணவர்கள் பெறுவார்கள். இன்னும் சிறப்பாதக, இதன் வழியாக, இதுவரை யாரும் யோசிக்காத கருத்தெல்லாம் வெளியே வரத் தொடங்கும்.
அருள்பணியாளர்கள் தங்களுடைய மறையுரைத் தயாரிப்பிலும், தனி ஒருவராக அமர்ந்து இதைப் பலர் இருப்பதுபோல மெய்நிகர்நிலையில் செயல்முறைப்படுத்தலாம்.
ஆக, குழுச் சிந்திப்பை நாம் பின்வருமாறு விளக்கலாம்:
- ஒரு குறிப்பிட்ட கருத்தை ஒட்டிய பல கருத்துக்களை பெறுவதற்கான செய்முறை.
- ஏற்கனவே நடப்பில் இருக்கும் செயல்பாடுகளைக் களைய, புதிய செயல்பாட்டை உருவாக்க மாணவர்கள் அளிக்கும் யோசனைகள் மற்றும் தீர்வுகளைப் பெறுவதற்கான கருவி.
- புதிய யோசனைகளை வழங்குவதற்கான திறனை உருவாக்கும் பயிற்சி.
குழுச் சிந்திப்பு இரண்டு நிலைகளில் இருக்கலாம்:
ஒன்று, பாரம்பாரிய முறை (Traditional Method): இந்த முறையில், மாணவர்கள் வட்டமாக வகுப்பறையில் அமர்ந்திருப்பர். ஒவ்வொருவரும் தனக்குள் எழுகின்ற கருத்தை பகிரலாம். ஒருவர் பகிர்ந்ததன் அடிப்படையில் இன்னொருவர் அக்கருத்தை நீட்டிக்கலாம். ஆனால், யாரும் யாருடைய கருத்தையும் கேலி செய்யக் கூடாது.
இரண்டு, மேம்படுத்தப்பட்ட முறை (Advanced Method): இதற்கு செயலியைப் பயன்படுத்தலாம், விளையாட்டுக்களைப் பயன்படுத்தலாம், கருத்துக்களை தாள்கள் மற்றும் குரல்களாகப் பதிவுசெய்யலாம். வேறு வேறு வகுப்பறைகளில் இருந்தாலும் இணையதள இணைப்பின் வழியாக (Google Duo, Zoom, Microsoft Teams) நடத்தலாம்.
வகுப்பறையில் எப்படி நடத்துவது?
- ஆசிரியர் மாணவர்கள் நடுவே அமர்ந்து கொண்டு ஒரு கேள்வி, அல்லது பிரச்சினையை, அல்லது ஒரு தலைப்பை முன்வைப்பார்.
- மாணவர்கள் அதற்கான விடைகளை, ஒத்த வார்த்தைகளை, கருத்துக்களைப் பகிர்வர்.
- எல்லாருடைய வார்த்தைகளும் கரும்பலகையில் எழுதப்படும்
- எழுதப்பட்ட வார்த்தைகள் அல்லது கருத்துக்கள் ஒவ்வொன்றாக விவாதிக்கப்படும்.
குழுச் சிந்திப்பின் நோக்கம்
- ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் மாணவர்களின் கவனத்தை கூர்மைப்படுத்துவது.
- புதிய கருத்துக்களை உருவாக்குவது.
- ஒருவர் மற்றவரின் கருத்துக்களையும், வேறுபட்ட பார்வையையும் ஏற்றுக்கொள்ள மாணவர்களைப் பயிற்றுவிப்பது.
- புதிய கருத்துக்களைச் சொல்வதற்கான துணிச்சலை மாணவர்கள் பெறுவது.
- ஒவ்வொருவரும் தன்னுடைய கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதைக் கண்டு மாணவர்கள் தன்மதிப்பு பெறுவர்.
- ஒருவர் மற்றவரின் உதவியுடன்தான் கற்றல் நடைபெறும் என்று, குழு ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பது.
குழுச் சிந்திப்பின் உட்கூறுகள்
- இது ஓர் அறிவுசார் செயல்பாடு.
- எல்லா மாணவர்களும் பங்கேற்க முடியும்.
- தன் கருத்தைப் பதிவு செய்ய அனைவருக்கும் உரிமையும் கடமையும் உண்டு.
- எந்தக் கருத்தும் சரியோ, தவறோ அல்ல.
- வேறு வேறு கருத்துக்கள் வர வேண்டும்.
குழுச் சிந்திப்பின் வழியாகக் கற்றல்
எடுத்துக்காட்டாக, ஆறாம் வகுப்பு, தமிழ் வழி, முதல் பருவம், அறிவியல் பாடத்தின், நான்காம் அலகை எடுத்துக்கொள்வோம். அலகின் தலைப்பு: 'தாவரங்கள் வாழும் உலகம்.'
முதலில் மாணவர்கள் வட்டமாக அமர வேண்டும்.
'தாவரங்கள் இல்லாத உலகம் சாத்தியமா?' என்ற கேள்வியை ஆசிரியர் எழுப்ப வேண்டும். ஒவ்வொரு மாணவரும், 'ஆம்,' 'இல்லை,' 'ஏன்,' 'எப்படி,' 'எங்கு' என்று பல கோணங்களில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் கருத்துக்கள் கரும்பலகையில் அட்டவணைப்படுத்தப்பட வேண்டும்.
இறுதியில், ஆசிரியர் அலகில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பின்னணியில் மாணவர்களின் கருத்துக்களை நெறிப்படுத்துவார்.
'குழுச் சிந்திப்பு' சில நேரங்களில் மாணவர்களின் தயக்கத்தினால் பயனில்லாமல் போகலாம். அம்மாதிரியான நேரங்களில் மாணவர்கள் ஏற்கனவே பாடத்தை வாசித்து வரும்படி சொல்லலாம். அல்லது, ஆசிரியர் சில மாணவர்களிடம் கருத்துக்களை எழுதிக் கொடுத்து, அவர்களைப் பகிரச் சொல்லி விவாதத்தை முன்னெடுத்துச் செல்லலாம்.
குழுச் சிந்திப்பின் பயன்கள்
- மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும்.
- தனியாக சிந்திக்கும் திறனை வளர்க்கும்.
- ஒரு பிரச்சினையை பல கோணங்களில் பார்க்கும் பக்குவம் தரும்.
- ஒருவர் மற்றவரின் கருத்துக்களை மதிக்க ஊக்குவிக்கும்.
Click the link below to download the Brainstorming Template.