Saturday, May 30, 2020

BOPPPS பாடத் திட்டம்

                                            
இன்று முதல் சில பள்ளிகளில் இணையவழி அல்லது மெய்நிகர் கற்றல் தொடங்குகிறது. மெய்நிகர் கற்றல் என்றாலும் சரி, வகுப்பறை கற்றல் என்றாலும் சரி, பாடத் திட்டம் அல்லது பாடத் திட்டமிடல் மிக அவசியம். ஒவ்வொரு ஆசிரியரும் தனக்குக் கொடுக்கப்பட்ட 45 நிமிடங்களில் என்ன செய்யப் போகிறார் என்பதைக் குறித்த மிகவும் துல்லியமான திட்டம் வேண்டும். சில நேரங்களில் திட்டமிட்டபடி நடக்க இயலாமல் போகலாம். அது பரவாயில்லை. திட்டமிடுதலில் பாதிவேலை முடிந்துவிடும்.

ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு விதமான பாடத் திட்டமிடலை வைத்திருக்கின்றன.

அதிகமான பள்ளிகள், 'பாப்ஸ் மெதட்' (BOPPPS Method) என்று சொல்லப்படக்கூடிய முறைமையின் தழுவல்களையே பின்பற்றுகின்றன.

பாப்ஸ் மெதட் கொண்டு பாடத்தைத் திட்டமிடல் எப்படி என்பதை இன்று காண்போம்:

இதன் மாதிரிதான் மேற்காணும் படத்தில் இருக்கின்றது.

'பாப்ஸ்' (BOPPPS) என்ற பெயர் எப்படி வந்தது?

இது கண்டுபிடிப்பாளரின் பெயர் அல்ல. மாறாக, ஒவ்வொரு எழுத்தும் அந்த முறைமையில் உள்ள முக்கியமான வார்த்தைகளின் சுருக்கக் குறியீடு. இந்தக் குறியீடுகளை இணைத்து வாசித்தால் பாப்ஸ் என்று வரும்.

1. Bridge-In (இணைப்பு பெறுதல்)

ஒரு வகுப்பிற்குள் நுழைந்தவுடன், ஓர் ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுடன் தொடர்பை அல்லது இணைப்பை ஏற்படுத்த வேண்டும். உள்ளே நுழைந்தவுடன் யாரையும் பார்க்காமல் சாக்பீஸை எடுத்துக் கொண்டு கரும்பலகைக்குச் செல்லக் கூடாது.

இந்த இணைப்பு பெறுதலில்,

ஆசிரியர்: மாணவர்களின் ஈர்ப்பைக் பெறுகின்றார், மாணவர்களை ஊக்குவிக்கின்றார், அன்றைய நாளின் பாடத்தின் தேவையை உணர வைக்கிறார்.

மாணவர்கள்: எனக்கு இந்த வகுப்பால் என்ன கிடைக்கப் போகிறது என்பதை அறிகிறார். நான் ஏன் கற்க வேண்டும் என்ற தெளிவு பெறுகிறார். இதைக் கற்பதால் தனக்கு என்ன பயன் என உணர்ந்து, கற்றலுக்குத் தயாராகிறார்.

யுரேகா: அன்றைய நாளின் தலைப்பை ஒரு காணொளி வழியாகவோ, படத்தின் வழியாகவோ, குரல் ஒலி வழியாகவோ, கதை வழியாகவோ அறிமுகம் செய்தல்

2. Outcomes of the Learning (விளைவுகள்)

இந்த 45 நிமிட கற்றலின் இறுதியில் என்ன நிகழும் என்பதை முன்கூட்டியே விழைதல்தான் விளைவு.

ஆசிரியர்: இந்த பாடத்திலிருந்து மாணவர்கள் என்ன அறிவார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். இதன் வழியாக தன் பாடத் திட்டத்தைக் கூர்மைப்படுத்துகிறார்.

மாணவர்கள்: தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிகிறார்.

யுரேகா: கற்றலின் விளைவை அறிமுகம் செய்தல், இந்தக் கற்றலால் கிடைக்கும் பயனை வினைச்சொல் ஒன்றால் அறிமுகம் செய்தல், இந்தக் கற்றல் மாணவரிடம் ஏற்படுத்தும் அறிவு அல்லது உணர்வு மாற்றத்தைக் கூறுதல்.

3. Pre-Assessment (முன்-திறனாய்வு)

பாடத்தைத் தொடங்குமுன், அப்பாடத்தைப் பற்றி மாணவர்கள் என்ன அறிந்துள்ளார்கள் என்பதைச் சுருக்கமாகக் கேட்டறிதல்.

ஆசிரியர்: மாணவர்களுக்கு என்ன தெரியும் என்பதை அறிகிறார், எந்த வேகத்தில், ஆழத்தில் கற்பிக்க வேண்டும் என நிர்ணயம் செய்கிறார், மாணவர்களின் ஆர்வம் மற்றும் விருப்பத்தைப் புரிந்துகொள்கிறார், மாணவர்களின் திறமையைப் பயன்படுத்துகிறார்.

மாணவர்கள்: தான் ஏற்கனேவே பெற்றிருக்கும் அறிவை நினைவுகூர்கின்றார். முன்கூட்டியே அறிந்திருப்பதால் தன்னம்பிக்கை பெறுகிறார். தனக்கு எது தெரியவில்லை என்பதைக் கூர்மைப்படுத்துகிறார்.

யுரேகா: வினாடி-வினா, அல்லது சில கேள்விகள் வழியாக மாணவர்களின் அறிதிறனைக் கண்டறிதல்.

4. Participatory Learning (பங்கேற்புக் கற்றல்)

ஆசிரியர்: மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு செயல்பாட்டைத் திட்டமிடுகிறார். தன்னுடைய எதிர்பார்ப்புக்களைத் தெளிவாகச் சொல்கிறார். பாடத்தைக் கற்பிக்கிறார்.

மாணவர்கள்: வகுப்பில் முழுவதுமாக பங்கேற்கிறார்கள். புரிதலைப் பெறுகிறார்கள். குழு விவாதங்களில் பங்கேற்கிறார்கள்.

யுரேகா: 'யோசி-இணை-பகிர்' போன்ற ஏதாவது ஒரு முறைமையைக் கையாளுதல்.

5. Post-Assessment (பின்-திறனாய்வு)

ஆசிரியர்: மாணவர்கள் என்ன கற்றார்கள் என்பதை திறனாய்வு செய்கிறார். தான் எதிர்பார்த்தை விளைவு கிடைத்துள்ளதா எனக் காண்கிறார். மாணவர்கள் புரிய முடியாத அளவிற்கு ஏதேனும் இருந்ததா எனப் பார்க்கிறார்.

மாணவர்கள்: தனக்குத் தெரிந்ததா அல்லது புரிந்ததா எனத் திறனாய்வு செய்கிறார்.

யுரேகா: ஒருநிமிடக் கட்டுரை அல்லது எக்ஸிட் டிக்கெட் எழுதச் சொல்லுதல். இன்று நீ கற்றதில் மிக முக்கியமானது எது? உனக்குப் புரியாதது எது? எனக் கேள்விகளை எழுப்பி விடைகளை எழுத வைத்தல்.

6. Summary (நிறைவுச் சுருக்கம்)

ஆசிரியர்: கற்றல் அனுபவத்தைச் சுருக்கமாக எடுத்துரைத்து, பாடத்தின் சாரத்தை சில நொடிகளில் சொல்கிறார். பாடத்தில் நாம் எங்கே இருக்கிறோம், தொடர்ந்து எங்கே போகிறோம் என்ற எதிர்நோக்கை அளித்தல்.

மாணவர்கள்: இன்று கற்ற பாடம் ஒட்டுமொத்த பாடத்தோடு எப்படி பொருந்துகிறது என்பதைக் காண்கிறார். அவருக்குள் நிகழ்ந்த மாற்றத்தை உணர்கிறார். தான் படித்ததைத் திருப்பிப் பார்க்கிறார்.

யுரேகா: சில முக்கியப் புள்ளிகளை கரும்பலகையில் எழுதுதல். கற்றதை வாழ்வியல் எதார்த்தத்திற்குப் பொருத்தி ஏதேனும் காணொளி காட்டுதல்.

மேலும் அறிய,

பின்வரும் இணைப்பை க்ளிக்கவும்:

BOPPPS Model for Lesson Planning

யானையைச் சாப்பிடுவது

நேர மேலாண்மை மற்றும் இலக்கு மேலாண்மையில் பேசப்படக்கூடிய இன்னொரு தலைப்பு யானையைச் சாப்பிடுவது.

தென்னாப்பிரிக்க நாட்டின் கேப் டவுன் மறைமாவட்டத்தில் உரோமன் கத்தோலிக்க பேராயர் மேதகு டெஸ்மன்ட் அவர்கள், 'யானையை சாப்பிட வேண்டுமென்றால், ஒவ்வொரு வாயாகச் சாப்பிட வேண்டும்' என்று வேடிக்கையாகச் சொன்னர்.

யானையை நாம் சாப்பிட முடியுமா?

ஒரு ஆட்டை நம்மால் சாப்பிட முடியுமா?

ஒரு கோழியை?

ஒரு நாளில் ஒரு கிலோ உள்ள கோழியை நாம் சாப்பிட முடிந்தால், ஆயிரம் கிலோ உள்ள ஒரு யானையைச் சாப்பிட ஆயிரம் நாள்கள் ஆகும். ஆக, பெரிய யானையை சிறிய சிறியதாக வெட்டிவிட்டால் நாம் எளிதாகச் சாப்பிட்டுவிடலாம்.

இந்த வாரம் ஒரு பாடம் எடுக்க வேண்டும் என வைத்துக்கொள்வோம்.

அந்தப் பாடத்தில் ஐந்து பக்கங்கள் இருக்கின்றன. ஐந்து பக்கங்கள் என்பது யானை போன்றது. ஆனால், அதை ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பக்கம் என ஒதுக்கி விட்டால் நாம் மிக எளிதாக ஐந்து பாடங்களை எடுத்துவிடலாம். ஒருவேளை, அன்றைய பக்கங்களை அன்றைய நாளில் முடிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? அது ஐந்தாம் நாளில் பெரிய யானையாக மாறிவிடும். சாப்பிடுவது கடினமாகிவிடும்.

ஆக, எந்த ஒரு வேலை அல்லது இலக்கு என்றாலும், அதை சிறிது சிறிதாக வெட்டிவிட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, பள்ளி ஆண்டு விழா கொண்டாடுதல் - இது ஒரு யானை போன்றது.

இந்த யானையை எப்படிச் சாப்பிடுவது?

முதலில், இதை ஒட்டிய எல்லா வேலைகளையும் பட்டியிலிட வேண்டும். பட்டியலில் உள்ள ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நாளையும் ஒரு நபரையும் குறிக்க வேண்டும். இப்படிப் பிரித்து நிற்பதோடு, அன்றன்றைக்கு உள்ளதை அன்றன்றைக்கு, அந்தந்த நபர் செய்து முடித்தால் வேலை எளிதாக முடிந்துவிடும்.

இதை நாம் அறியாமலேயே நம் வீடுகளில் செய்கிறோம்.

எப்படி?

ஒரு வீட்டை நிர்வகிப்பது என்பது யானையைச் சாப்பிடுவது போன்றது.

ஆனால், அம்மா சில வேலைகளை, அப்பா சில வேலைகளை, பிள்ளைகள் சில வேளைகளை எனப் பிரித்துக்கொண்டால், யானையை ஒரே நாளில் ஒரு விருந்து போலச் சாப்பிட்டு விடலாம்.

ஆக, யானை என்பது நம் இலக்கு அல்லது செயல்.

அதை எப்படிச் சாப்பிடுவது?

ஒன்று, சிறு சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிடுவது.

இரண்டு, ஒட்டுமொத்த கிராமமும் இணைந்து ஒரே நாளில் சாப்பிட்டு முடிப்பது.

Friday, May 29, 2020

தவளையைச் சாப்பிடுவது

மாணவர்களையும், ஆசிரியர்களையும், அனைவரையும் பாதிக்கின்ற ஒன்று தள்ளிப் போடுவது.

எடுத்துக்காட்டாக, நாம் சில நொடிகள் அமர்ந்து யோசிப்போம். நமக்குப் பிடித்த அல்லது நாம் முக்கியம் எனக் கருதிய ஏதோ ஒன்றைச் செய்ய முடிவெடுத்திருப்போம். ஆனால், அதை இன்றுவரை நாம் செய்யாமல் இருப்போம். புத்தகம் எழுதுவதாக இருக்கலாம், ஹிந்தி கற்பதாக இருக்கலாம், இசைக்கருவி பயில்வதாக இருக்கலாம், யோகா செய்வதாக இருக்கலாம், மருத்துவரைச் சந்திப்பதாக இருக்கலாம். இப்படி ஏதாவது ஒன்றைச் செய்ய நினைத்து நாம் தள்ளிக்கொண்டே போகலாம்.

நாள்கள் செல்லச் செல்ல என்ன ஆகும்? 'இதைச் செய்ய முடியாமல் போகுமோ!' என்ற பயம் வரும். இருபது வயதில் யோகா கற்க வேண்டும் என நினைத்த நான், நாற்பதைத் தொடும் இந்நேரத்தில் அதைக் கற்க முயன்றால் என் உடல் இலகுவாக இருக்காது. இன்னும் ஆண்டுகள் செல்லச் செல்ல இன்னும் இயலாமல் போகும். ஆக, பயம் என்னைத் தொற்றிக்கொள்ளும்.

சிறிய தவளையாக இருந்த ஒன்று நாள் கடக்கக் கடக்க அது பெரிய தவளையாக மாறும்.

இது தவளையின் முதல் பொருள்.

தவளையின் இரண்டாவது பொருள் என்னவென்றால், எனக்குக் கடினமானதாகத் தெரிகின்ற, ஆனால் செய்தே ஆக வேண்டிய ஒன்று. இது என்மேல் சுமத்தப்பட்டதாக இருக்கலாம். அல்லது நானே விரும்பியதாக இருக்கலாம்.

மாணவர்களை எடுத்துக்கொள்வோம். ஒரு மாணவருக்கு தமிழ் மாம்பழம் போல இருக்கலாம், ஆங்கிலம் பிரியாணி போல இருக்கலாம், கணிதம் குளோப் ஜாமுன் போல இருக்கலாம், சமூக அறிவியல் ஐஸ்க்ரீம் போல இருக்கலாம், அறிவியில் தவளை போல இருக்கலாம். அதாவது, பாடங்களில் கடினமாக இருக்கின்ற ஒன்று தவளை போலத் தெரியும்.

இன்னொரு எடுத்துக்காட்டு. நான் தினமும் வலைப்பூவில் பதிவிட வேண்டும் என முடிவெடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம். அந்த வேலையை நான் காலையிலேயே செய்துவிட வேண்டும். நேரம் ஆக ஆக, மற்ற வேலைகள் வர, வர எனக்கு இந்த தவளை பெரியதாகிக் கொண்டே வரும். மாலையில் நான் அந்த வேலையைப் பார்க்கும்போது அது பெரியதாக, கடினமானதாக இருக்கும். விளைவு, நான் ஏதோ ஒப்புக்கு அதைச் செய்து முடிப்பேன்.

'தவளையைச் சாப்பிடுதல்' என்பது நேர மேலாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு கருதுகோள்.

இந்தக் கருதுகோளின் ஆசிரியர் ப்ரியன் ட்ரேஸி என்பவர். இவர் எழுதிய ... என்னும் புத்தகத்திற்குப் பின் இந்தக் கருதுகோள் மிகவும் பிரபலமானது.

தவளையை நீங்கள் சாப்பிடுவீர்களா?

தவளையைக் கண்டிப்பாகச் சாப்பிட்டே ஆக வேண்டும் என்றால் என்ன செய்வது?

ஒரு தட்டில் பிரியாணி, குலோப் ஜாமுன், முட்டை, ஐஸ்க்ரீம், தவளை என வைத்து நம்மைச் சாப்பிடச் சொன்னால் நாம் முதலில் எதைச் சாப்பிடுவோம்? எதைச் சாப்பிட வேண்டும்?

தவளையைத்தான் சாப்பிட வேண்டும்.

தவளையைச் சாப்பிட்டுவிட்டோம் என்றால், அது பெரியதாக வளர்ந்து நம்மை பயமுறுத்தாது. மேலும், மற்றதை ருசித்துச் சாப்பிட நம்மால் இயலும். இல்லை என்றால், மற்றதை எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே இருந்தாலும் தவளை நம்மை முறைத்து பார்த்துக்கொண்டே இருக்கும்.

சில மாணவர்கள், தமிழ் தங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக அந்தப் பாடத்தை மட்டுமே படித்துக்கொண்டிருப்பார்கள். கணிதம் தவளை போல இருப்பது என்பதற்காக அதை அப்படியே ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஆனால், அதே மாணவர்கள் முதலில் கணிதத்தைக் கொன்று சாப்பிட்டுவிட்டால், எளிதாக தமிழைப் படித்துவிட முடியும்.

சரி. தவளையை எப்படிச் சாப்பிடுவது?

அ. உடனே சாப்பிட வேண்டும்

அதாவது, ப்ரேக் போட வேண்டும் என நினைத்தால் மட்டும் வண்டி நிற்காது. ப்ரேக் போட்டால்தான் வண்டி நிற்கும். அதுபோல, கணிதம் படிக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. உடனே புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு சின்ன தயக்க நொடி இருக்கும். அதை உடனே வெல்ல வேண்டும்.

ஆ. இரண்டு தவளைகள் இருந்தால், அவற்றில் பெரிய தவளையை முதலில் சாப்பிட வேண்டும்.

நமக்கு ஒரே நேரத்தில் நிறைய விடயங்கள் தவளைகளாக இருக்கலாம். அவற்றில் மிகவும் கடினமானதை முதலில் சாப்பிட வேண்டும்.

இ. நேர்முக அடிமையாதல்

அதாவது, மது போன்ற தீய பழக்கங்களுக்கு எதிர்மறையாக அடிமையாதல் போல, நல்ல பழக்கங்களுக்கு நேர்முக அடிமையாக வேண்டும். கர்ணன் ஈகைக்கு அடிமையானது போல. ஒரு செயல் நம்முடைய இரண்டாவது இயல்பாக வரும் வரை அதைப் பழக்கப்படுத்திக்கொள்வது. ஆக, தவளையை உண்பதையே ஒரு பழக்கமாகக் கொண்டு அதற்கு நேர்முகமாக அடிமையாகிவிடுவது.

ஈ.முன்கூட்டியே திட்டமிடுவது

தவளையைச் சாப்பிட எவ்வளவு நேரம் ஆகும் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது. அல்லது அவசர அவசரமாகச் செய்ய நேரிடும். அப்படிச் செய்வதும் செய்யாமலிருப்பதும் ஒன்றே.

உ. குறுக்குவழி அறவே கூடாது

கணிதத்தில் ஒரு தேற்றம் கடினமாக இருக்கிறது என்பதற்காக, புத்தகத்திலிருந்து அந்தப் பக்கத்தை கிழித்து சட்டைக்குள் வைத்துக் கொண்டு தேர்வறை செல்வதே குறுக்குவழி. அது தவளையைப் பைக்குள் சுமப்பது போல ஆகும். அது இன்னும் கொடியது.

நேர மேலாண்மையில் வளர இனிய வழி தவளையைச் சாப்பிடுவது.

தவளையைச் சாப்பிடுவது என்னும் நேர மேலாண்மை பற்றி இன்னும் அறிய பின்வரும் இணைப்பைக் க்ளிக்கவும்:

Eat That Frog

Thursday, May 28, 2020

புரிதல் அறிதல்

நேற்று நாம் கற்ற 'எக்ஸிட் ஸ்லிப்பின்' ரிவர்ஸ் வடிவம் இது.

இந்த முறைமையை ஆங்கிலத்தில் 'Misconception Check' or 'Understanding Check' என அழைக்கலாம்.

வகுப்பு முடிந்து வெளியே செல்வதற்கு முன் எழுதுவது 'எக்ஸிட் ஸ்லிப்'. இன்று வகுப்பிற்கு வந்த மாணவர்களிடம், முந்தைய வகுப்பைப் பற்றி எழுதச் சொல்வது 'புரிதல் அறிதல்.'

இதை வழக்கமாக நாம் சிறு சிறு கேள்விகள் வழியாக மாணவர்களிடம் உரையாடிச் செய்வோம். ஆனால், இதை எழுத்து வடிவமாகவும் செய்யலாம்.

எப்படி?

இரண்டு முறைகள்.

ஒன்று, ஒருநிமிட அல்லது ஒருபக்க கட்டுரை.

ஒரு நிமிடம் அல்லது ஒரு பக்கத்தில் மாணவர்கள் தாங்கள் முந்தைய தினம் கற்ற சில புள்ளிகளைப் பதிவு செய்தல். இந்தப் பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அல்லது கவனிக்கும் திறனை கூர்மைப்படுத்தும். மேலும், வகுப்பின் வெளியே சென்றுவிட்டு வந்த மாணவர்கள் தங்களையே ஒருமுகப்படுத்தவும் இப்பயிற்சி பயன்படும்.

இரண்டு, கேள்விகள் கொடுத்து அல்லது எழுதிப்போட்டு விடையைக் கேட்பது.

எடுத்துக்காட்டாக,

ஆறாம் வகுப்பு, தமிழ் வழி வகுப்பில், அறிவியல் பாடத்தில், அலகு 1 நடத்துகிறோம்.

கெல்வின் (வெப்பநிலை), மீட்டர் (தொலைவு), ஆம்பியர் (மின்னோட்டம்), வினாடி (காலம்), மோல் (பொருள்களின் அளவு), கிலோகிராம் (நிறை), கேண்டிலா (ஒளிச்செறிவு)

என்னும் அளவீட்டு அலகுகளைக் கற்பித்த நாம், இதை பொருத்துக வடிவிலோ, அல்லது படங்களைக் கொண்டோ கேள்விகள் கேட்டு, மாணவர்களின் விடையைப் பெறலாம்.

முந்தைய வகுப்பை நினைவுகூர்வது மிகவும் அவசியம்.

இதற்கு, நாம் கொத்தனாரின் உருவகத்தை எடுத்துக்கொள்ளலாம்.

செங்கல்களை வைத்துக் கட்டப்படும் சுவற்றின் பாதி வேலையை முடித்த கொத்தனார், அடுத்த நாள், விட்ட இடத்திலிருந்து அப்படியே கட்டத் தொடங்குவதில்லை. ஏற்கனவே, கட்டிய செங்கல் பகுதியில் சிறிது நீர் விட்டு, கொஞ்சம் ஊறியவுடன், அதைக் கொஞ்சம் கரண்டியால் கொத்திவிடுவார். அப்போதுதான் புதிய செங்கல் பழைய செங்கலின்மேல் இறுகி அமரும். அல்லது தனியே வந்துவிடும்.

ஆக, வகுப்பறையில் கற்பித்தல் என்பதும் ஒன்றின்மேல் ஒன்று கட்டப்படும் செங்கல் என்பதை நினைவில் வைத்து, திரும்பத் திரும்ப நினைவுகூர வைத்தல் நலம்.

Wednesday, May 27, 2020

எக்ஸிட் டிக்கெட்

இன்று நாம் கற்கும் முறைமையின் பெயர் 'எக்ஸிட் டிக்கெட்' (Exit Ticket) அல்லது 'எக்ஸிட் ஸ்லிப்' (Exit Slip). தமிழில், 'புறப்பாட்டுச் சீட்டு' என்று ஓரளவிற்கு மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

நாம் பாடம் நடத்திவிட்டோம். நாம் நடத்தியது மாணவர்களுப் புரிந்ததா என்பதையும், எவ்வளவு புரிந்தது என்பதையும், அவர்களின் சந்தேகம் என்ன என்பதையும் மிக எளிதாக அறிந்துகொள்ளும் வழிதான் 'எக்ஸிட் ஸ்லிப்.'

ஆசிரியர் மாணவர்களிடம் வகுப்பின் இறுதியில் கேட்கும் கேள்விக்கு மாணவர்கள் ஒரு சிறிய தாளில் அல்லது அட்டையில் அதற்குரிய விடையை எழுத வேண்டும். மாணவர்கள் தாங்கள் கற்றதை நினைவுகூர்வதற்கும், கற்றதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கும், தாங்கள் பெற்ற தகவல்களை கூர்மைப்படுத்துவதற்கும் இப்பயிற்சி பயன்படும். 

மூன்று வகையான எக்ஸிட் டிக்கெட்டுகள் உள்ளன:

அ. கற்றதை எழுதத் தூண்டும் சீட்டு

எ.கா.: நீ இன்று கற்ற ஒன்றை எழுது.
எ.கா.: இன்று கற்ற பாடம் நம் வாழ்வியல் எதார்த்தத்திற்குப் பொருந்துகிறதா? விடையளி.

ஆ. கற்றல் நிகழ்வு பற்றிய சீட்டு.

எ.கா.: இன்று நடத்திய பாடத்தில் எனக்குப் புரியாதது ...
எ.கா.: இன்றைய பாடத்தை ஒட்டிய ஒரு கேள்வியைப் பதிவு செய்.

இ. கற்பித்தலின் தாக்கத்தை உணர்ந்துகொள்வது பற்றிய சீட்டு.

எ.கா.: சிறிய குழுக்களில் விவாதித்தது உங்களுக்குப் பிடித்ததா?
எ.கா.: இன்றைய வகுப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

இதையொட்டி, பின்வருமாறு கேள்விகளையும் தரலாம்:
  • நான் இன்னும் கற்க விரும்புவது ...
  • நான் கற்றதில் மிக முக்கியமானது ...
  • எனக்கு இன்று அதிக வியப்பு தந்தது ...
  • இந்தப் பாடத்தை வேறு எப்படிக் கற்கலாம்? ...

பயன்கள்
  • மாணவர்கள் தாங்கள் கற்றதை நினைவுகூர உதவுகிறது.
  • மிகச் சில நொடிகளில் ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் பற்றிய திறனாய்வைப் பெற முடியும்
  • மாணவர்களின் புதிய கேள்விகளைத் தெரிந்து கொண்டு ஆசிரியர் அதற்கேற்ப பாடம் நடத்தலாம்
எப்படி நடத்துவது?

எடுத்துக்காட்டாக, 

ஆறாம் வகுப்பு சமூக அறிவியில் பாடத்தில், முதல் பருவம் பாடநூலில், அலகு 4 எடுத்துக்கொள்வோம். 'தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்' என்னும் இந்த அலகை வகுப்பில் கற்றுக்கொடுத்தாயிற்று.
  • வகுப்பு முடிவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் மாணவர்களுக்குச் சிறிய காகிதத் துண்டை வழங்க வேண்டும்.
  • 'உன்னைக் கவர்ந்த பண்டைய நகரம் எது? ஏன்?' - இப்படி ஒரு கேள்வியைக் கொடுக்க வேண்டும்.
  • இக்கேள்வியை வாய்மொழியாகச் சொல்லலாம். அல்லது கரும்பலகையில் எஐதலாம்.
  • உடனடியாக மாணவர்கள் விடையை எழுத ஆரம்பிக்க வேண்டும். புத்தகத்தைப் பார்க்கவோ, அடுத்தவருடன் விவாதிக்கவோ கூடாது.
  • ஒவ்வொரு மாணவரும் வெளியேறும்போது சீட்டை ஆசிரியரிடம் கொடுப்பார்.
  • மாணவர்கள் எழுதியிருப்பதை வைத்து ஆசிரியர் தன்னையும் தன் கற்பித்தலையும் திறனாய்வு செய்துகொள்ளலாம்.
  • இதை மொத்தமாக சேகரித்து வைத்து மாணவர்களுக்கு மதிப்பெண்களும் வழங்கலாம்.

நாம் என்னதான் நன்றாகக் கற்றுத்கொடுத்தாலும், சில நேரங்களில் மாணவர்கள், 'அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்' என்ற அளவில் எழுதியிருப்பார்கள். அதைப் பொருட்படுத்தக் கூடாது.

எக்ஸிட் ஸ்லிப்பின் வடிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக்கவும்:



Tuesday, May 26, 2020

ரீங்கார (குழு) அமர்வு

நேற்றைய தினம் நாம் கண்ட 'குழுச் சிந்திப்பின்' சிறிய வடிவம் தான் 'ரீங்கார அமர்வு.' ஆங்கிலத்தில், இதை 'Buzz Group Session' or 'Buzz Session' என்று அழைக்கிறார்கள்.  Buzz (ரீங்காரம்) என அழைக்கக் காரணம், சிறு குழுவில் குழந்தைகள் அமர்ந்து உரையாடுவது தேனீக்களின் ரீங்காரம் போல இருக்கும். சில நேரங்களில் சந்தைக் கடை போலவும் இருக்கும். பரவாயில்லை!

ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கான தீர்வை எட்ட, ஒரே குழுவாக அமர்ந்து சிந்திக்காமல், பல சிறிய குழுக்களாகப் பிரித்தல் இந்த முறைமையின் முக்கியமானது. 

ஏன்? 

பெரிய குழுவில் எல்லாரும் தங்களுடைய எண்ணங்களைப் பகிரத் தயங்கலாம். அல்லது பாலினம், பின்புலம் அடிப்படையில் கருத்துக்கள் மாறுபடலாம். 

எடுத்துக்காட்டாக, 'ஆணுக்கு பெண் சமமா?' என்ற கேள்விக்கு விடை காண வேண்டும் என வைத்துக்கொள்வோம். ஒரே குழுவாக அமைத்து இந்தக் கேள்வியைக் கேட்டால், குழப்பம் வரலாம். ஆக, மாணவர்கள் தனியாக, மாணவியர்கள் தனியாகப் பிரித்தால், விடைகள் வித்தியாசமாகவும், தெளிவாகவும் கிடைக்கும்.

அல்லது, ஆசிரியர்களுக்கான ஒரு கருத்தமர்வு வைக்கிறோம் என வைத்துக்கொள்வோம். 'பள்ளிக்கு நேரம் தவறாமல் வருவது அவசியம்' என்று தலைப்பில் கருத்துக்களைப் பெற விரும்புகிறோம். இங்கே ஆசிரியர்களை, அவர்களுடைய வயதின் அடிப்படையில், 30-35, 35-40, 45-50, 50-55, 55-59 என பிரித்து அவர்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லி, பின், அக்குழுக்களிலிருந்து யாராவது ஒருவர் தங்களுடைய குழுவின் கருத்துக்களைப் பொதுவில் பகிரலாம். இப்படிச் செய்வதால், ஒவ்வொருவரும் பேசுவதற்கு வாய்ப்பு பெறுவதோடு, 'நேர மேலாண்மை' பற்றிய புரிதில் வயதுக்கு வயது எப்படி மாறுபடுகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

இதை பள்ளி நிர்வாகமும் பயன்படுத்தலாம். ஆசிரியர்களின் கருத்தை மொத்தமாகக் கேட்பதற்குப் பதிலாக, பாலினம், வயது, வசிக்கும் இடம் எனப் பிரித்துக் கேட்கலாம்.

மாணவர்களிடையே குழுக்களை பிரிப்பதற்கும் புதிய யுக்திகளைப் பயன்படுத்தலாம். கண்ணாடி அணிந்தவர்கள் ஒரு குழு, இரட்டை சடை போட்டிருப்பவர்கள் ஒரு குழு, டீசர்ட் போட்டிருப்பவர்கள் ஒரு குழு, இங்க் பேனா பயன்படுத்துபவர்கள் ஒரு குழு என்றோ, அல்லது அவர்களுடைய இருக்கைகளில் அவர்களுக்குத் தெரியாமல் எண்கள் இட்டோ, அல்லது அவர்களுக்கு விருப்பமான நிறங்கள் அடிப்படையிலோ பிரிக்கலாம்.

குழுச் சிந்திப்பில் நாம் பெறும் எல்லா நன்மைகளையும் இந்த முறைமையிலும் பெற முடியும்.

ஆனால், இதில் மூன்று பிரச்சினைகள் (demerits) உள்ளன:

அ. அதிக நேரம் எடுக்கும்.

குழு பிரித்தல், குழுக்களில் மாணவர்களை அமர்த்துதல், விவாதித்தல், ஆசிரியர் ஒவ்வொரு குழுவையும் சந்தித்தல், மாணவர்களின் ஐயம் தீர்த்தல், குழுத் தலைவர் தேர்ந்தெடுத்தல், மீண்டும் குழுக்களை பொதுவாக ஒன்று கூட்டுதல், ஒவ்வொரு குழுத் தலைவரும் பகிர்தல், விவாதித்தல் என அதிக நேரம் எடுக்கும்.

ஆ. குழுக்களை அமைப்பதன் கடினம்.

ஒரு குழுவில் 4 அல்லது 5 மாணவர்கள் மட்டும் இருக்கக் கூடிய நிலையில், அம்மாணவர்களுக்கு இடையே புரிதல் இல்லை என்றால், அந்தக் குழு மிக மோசமான விவாதத்தில் முடியும்.

இ. முன்னெடுப்பதில் தயக்கம்

பல மாணவர்கள் சிறு குழுக்களில் பகிரவும், குழுவிற்கு தலைமை தாங்கவும் முன்வர மாட்டார்கள். நன்றாக படிக்கின்ற மாணவர்கள் ஒரு குழுவிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் இன்னொரு குழுவிலும் என மாட்டிக்கொண்டால், முதல் குழுவில் முன்னெடுப்பதில் போட்டியும், இரண்டாம் குழுவில் தயக்கமும் இருக்கும்.

குழுவில் செய்ய வேண்டியது:

ஒவ்வொரு குழுவில் இருக்கும் ஐந்து நபர்களுக்கும் ஒவ்வொரு வேலை கொடுக்க வேண்டும். ஒன்று,  leader, இரண்டு, strategist, மூன்று, secretary, நான்கு, time-keeper, ஐந்து, thinker.

இவர்கள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.

வகுப்பில் எப்படி இதைப் பொருத்துவது?

ஆறாம் வகுப்பு, தமிழ் வழி, சமூக அறிவியல் பாடத்தின், அலகு 2 எடுத்துக்கொள்வோம்.

அலகின் தலைப்பு: மனிதர்களின் பரிணாம வளர்ச்சி.

குழுவாக மாணவர்களைப் பிரித்த பின். 'மனித பரிணாம வளர்ச்சி - நிகழ்வா? அல்லது கற்பனையா?' அல்லது 'மனித பரிணாம வளர்ச்சி நிலைகள் எவை?' என்ற கேள்வியைக் கொடுத்து, மாணவர்களை விவாதிக்கச் சொல்லலாம். 

To Know More about This Method and To Download the Practice Sheet Click Here

Monday, May 25, 2020

குழுச் சிந்திப்பு

எஸ்.ஸி.எல் (SCL) என்றழைக்கப்படும் 'மாணவர் மையக் கற்றலில்' (Student Centred Learning) உள்ள ஒரு முறையின் பெயர் குழுச் சிந்திப்பு. ஆங்கிலத்தில், 'Brainstorming'. இது வழக்கமாக கார்பரெட் நிறுவனங்கள் அல்லது பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் புதிய கருத்துக்களை அல்லது புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துமுன் செய்யக் கூடியது.

ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லலாம்:

'கோல்கேட் பற்பசையின் விற்பனையை எப்படி அதிகரிப்பது?'

இந்தக் கேள்வி எழுப்பப்பட, சுற்றி அமர்ந்தவர்கள் தங்களின் மனத்தில் எழும் எண்ணங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 'விளம்பரத்தைக் கூட்ட வேண்டும்,' 'பற்பசைப் பெட்டியை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் வடிவமைக்க வேண்டும்,' 'இப்போது ட்ரெண்டில் இருக்கும் ஒரு நடிகையை வைத்து விளம்பரம் செய்ய வேண்டும்,' 'ஆஃபர் கொடுக்க வேண்டும்,' 'கடைக்காரர்களைச் சந்திக்க வேண்டும்' - இப்படி நிறையப் பேர் - அனைவரும் எம்.பி.ஏ படித்தவர்கள் - சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அந்நேரத்தில் அங்கு டீ கொண்டுவருகின்ற இளைஞன், 'சார்! நான் ஓர் ஐடியா சொல்லவா?' என்கிறான். ஆச்சர்யத்தோடு அனைவரும் பார்க்கிறார்கள். 'பற்பசை ட்யூப்பின் வாயை அகலமாக்குவது!' - ஆம்! வாயை அகலமாக்கினால், வேகமாகக் காலியாகும், நிறைய விற்பனையாகும்.

இந்த முறைக்குப் பெயர்தான் குழுச் சிந்திப்பு.

வகுப்பறை கற்றலில் இந்த முறைமை பல்வேறு மாணவர்களை ஆர்வமுடன் பங்கேற்க வைக்கிறது. மேலும், ஒரே பிரச்சினை அல்லது கருத்தின்மேல் மாணவர்கள் பலர் கருத்துக்கள் தெரிவிப்பதால் ஒரே கருத்தைப் பல கோணங்களில் பார்க்கும் திறனையும் மாணவர்கள் பெறுவார்கள். இன்னும் சிறப்பாதக, இதன் வழியாக, இதுவரை யாரும் யோசிக்காத கருத்தெல்லாம் வெளியே வரத் தொடங்கும்.

அருள்பணியாளர்கள் தங்களுடைய மறையுரைத் தயாரிப்பிலும், தனி ஒருவராக அமர்ந்து இதைப் பலர் இருப்பதுபோல மெய்நிகர்நிலையில் செயல்முறைப்படுத்தலாம்.

ஆக, குழுச் சிந்திப்பை நாம் பின்வருமாறு விளக்கலாம்:
  • ஒரு குறிப்பிட்ட கருத்தை ஒட்டிய பல கருத்துக்களை பெறுவதற்கான செய்முறை.
  • ஏற்கனவே நடப்பில் இருக்கும் செயல்பாடுகளைக் களைய, புதிய செயல்பாட்டை உருவாக்க மாணவர்கள் அளிக்கும் யோசனைகள் மற்றும் தீர்வுகளைப் பெறுவதற்கான கருவி.
  • புதிய யோசனைகளை வழங்குவதற்கான திறனை உருவாக்கும் பயிற்சி.
குழுச் சிந்திப்பு இரண்டு நிலைகளில் இருக்கலாம்:

ஒன்று, பாரம்பாரிய முறை (Traditional Method): இந்த முறையில், மாணவர்கள் வட்டமாக வகுப்பறையில் அமர்ந்திருப்பர். ஒவ்வொருவரும் தனக்குள் எழுகின்ற கருத்தை பகிரலாம். ஒருவர் பகிர்ந்ததன் அடிப்படையில் இன்னொருவர் அக்கருத்தை நீட்டிக்கலாம். ஆனால், யாரும் யாருடைய கருத்தையும் கேலி செய்யக் கூடாது.

இரண்டு, மேம்படுத்தப்பட்ட முறை (Advanced Method): இதற்கு செயலியைப் பயன்படுத்தலாம், விளையாட்டுக்களைப் பயன்படுத்தலாம், கருத்துக்களை தாள்கள் மற்றும் குரல்களாகப் பதிவுசெய்யலாம். வேறு வேறு வகுப்பறைகளில் இருந்தாலும் இணையதள இணைப்பின் வழியாக (Google Duo, Zoom, Microsoft Teams) நடத்தலாம்.

வகுப்பறையில் எப்படி நடத்துவது?
  • ஆசிரியர் மாணவர்கள் நடுவே அமர்ந்து கொண்டு ஒரு கேள்வி, அல்லது பிரச்சினையை, அல்லது ஒரு தலைப்பை முன்வைப்பார்.
  • மாணவர்கள் அதற்கான விடைகளை, ஒத்த வார்த்தைகளை, கருத்துக்களைப் பகிர்வர்.
  • எல்லாருடைய வார்த்தைகளும் கரும்பலகையில் எழுதப்படும்
  • எழுதப்பட்ட வார்த்தைகள் அல்லது கருத்துக்கள் ஒவ்வொன்றாக விவாதிக்கப்படும்.

குழுச் சிந்திப்பின் நோக்கம்
  • ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் மாணவர்களின் கவனத்தை கூர்மைப்படுத்துவது.
  • புதிய கருத்துக்களை உருவாக்குவது.
  • ஒருவர் மற்றவரின் கருத்துக்களையும், வேறுபட்ட பார்வையையும் ஏற்றுக்கொள்ள மாணவர்களைப் பயிற்றுவிப்பது.
  • புதிய கருத்துக்களைச் சொல்வதற்கான துணிச்சலை மாணவர்கள் பெறுவது.
  • ஒவ்வொருவரும் தன்னுடைய கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதைக் கண்டு மாணவர்கள் தன்மதிப்பு பெறுவர்.
  • ஒருவர் மற்றவரின் உதவியுடன்தான் கற்றல் நடைபெறும் என்று, குழு ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பது.

குழுச் சிந்திப்பின் உட்கூறுகள்
  • இது ஓர் அறிவுசார் செயல்பாடு.
  • எல்லா மாணவர்களும் பங்கேற்க முடியும்.
  • தன் கருத்தைப் பதிவு செய்ய அனைவருக்கும் உரிமையும் கடமையும் உண்டு.
  • எந்தக் கருத்தும் சரியோ, தவறோ அல்ல.
  • வேறு வேறு கருத்துக்கள் வர வேண்டும்.

குழுச் சிந்திப்பின் வழியாகக் கற்றல்

எடுத்துக்காட்டாக, ஆறாம் வகுப்பு, தமிழ் வழி, முதல் பருவம், அறிவியல் பாடத்தின், நான்காம் அலகை எடுத்துக்கொள்வோம். அலகின் தலைப்பு: 'தாவரங்கள் வாழும் உலகம்.'

முதலில் மாணவர்கள் வட்டமாக அமர வேண்டும்.

'தாவரங்கள் இல்லாத உலகம் சாத்தியமா?' என்ற கேள்வியை ஆசிரியர் எழுப்ப வேண்டும். ஒவ்வொரு மாணவரும், 'ஆம்,' 'இல்லை,' 'ஏன்,' 'எப்படி,' 'எங்கு' என்று பல கோணங்களில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் கருத்துக்கள் கரும்பலகையில் அட்டவணைப்படுத்தப்பட வேண்டும்.

இறுதியில், ஆசிரியர் அலகில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பின்னணியில் மாணவர்களின் கருத்துக்களை நெறிப்படுத்துவார்.

'குழுச் சிந்திப்பு' சில நேரங்களில் மாணவர்களின் தயக்கத்தினால் பயனில்லாமல் போகலாம். அம்மாதிரியான நேரங்களில் மாணவர்கள் ஏற்கனவே பாடத்தை வாசித்து வரும்படி சொல்லலாம். அல்லது, ஆசிரியர் சில மாணவர்களிடம் கருத்துக்களை எழுதிக் கொடுத்து, அவர்களைப் பகிரச் சொல்லி விவாதத்தை முன்னெடுத்துச் செல்லலாம்.

குழுச் சிந்திப்பின் பயன்கள்
  • மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும்.
  • தனியாக சிந்திக்கும் திறனை வளர்க்கும்.
  • ஒரு பிரச்சினையை பல கோணங்களில் பார்க்கும் பக்குவம் தரும்.
  • ஒருவர் மற்றவரின் கருத்துக்களை மதிக்க ஊக்குவிக்கும்.
Click the link below to download the Brainstorming Template.



Sunday, May 24, 2020

யோசி-இணை-பகிர்

ஊடாடும் கல்வி அல்லது கற்பித்தலில் பயன்படுத்தப்படும் சில முறைமைகளை  (methods) இன்றிலிருந்து காண்போம்.

முதலாவதாக, நாம் பார்க்கும் முறை அல்லது முறைமை 'யோசி-இணை-பகிர்.' ஆங்கிலத்தில், இதை 'THINK-PAIR-SHARE' என்றும், சுருக்கமாக, டி-பி-எஸ் (TPS) என்றும் அழைப்பார்கள்.

இங்கே, கற்றல் மூன்று நிலைகளில் நடைபெறும். 'யோசித்தல்' என்பது தனிநபர் நிலையிலும், 'இணைதல்' என்பது ஒரு மாணவர் இன்னொரு மாணவரோடு என்ற நிலையிலும், 'பகிர்தல்' என்பது மாணவர் ஒட்டுமொத்த வகுப்போடு என்ற நிலையிலும் நடைபெறும். மேலும், தனிநபர்-அடுத்தவர்-மற்ற எல்லாரும் என்ற முப்பரிமாண நிலையில் மாணவர் தன்னையே ஒரு தாமரை மலர் போல விரித்துக்கொடுப்பார். மேலும், இங்கே மாணவர் தானே சொந்தமாக யோசிக்கவும், அடுத்தவரோடு அதைப் பகிரவும், மற்ற எல்லார் முன்னிலையிலும் பகிரும்போது தன்னம்பிக்கையும் பெறுவார்.

மேலும், இந்த முறையில் மாணவர்கள் விழிப்புநிலையில் இருப்பர், ஒருவர் மற்றவரோடு மனம் திறப்பர், தாங்கள் கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்வர்.இந்த நிலையில் மாணவர்களின் சிந்திக்கும் திறன், கோர்வையாகச் சிந்திக்கும் திறன், அறிவார்ந்த காரணங்களைக் கண்டறியும் திறன், சரியான வார்த்தைகளில் வெளிப்படுத்தம் திறன் ஆகியவற்றை வளர்க்க ஆசிரியர் உதவி செய்வார். இந்த வகையில், மாணவர்கள் தாங்களாகவே பாடப் புத்தகத்தை வாசித்து அதன் பொருளை உணர்ந்து கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வர்.

இதை எப்படிச் செயலாற்றுவது?

ஒன்று, ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் ஒரு கேள்வியைத் தர வேண்டும். ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடங்கள் வரை ஒவ்வொரு மாணவரும் தனியாகச் சிந்திக்க வேண்டும். பாடப்புத்தகம், நோட்டு, பென்சில் பயன்படுத்தி குறிப்புகள் எடுக்க வேண்டும்.

இரண்டு, மாணவர்களை இரண்டு இரண்டு நபர்களாகப் பிரித்துவிட வேண்டும்.

மூன்று, முதலில் ஒவ்வொரு மாணவரும் அக்கேள்விக்கான விடையைக் கண்டறிவார். பின் அதை தன் இணையரோடு பகிர்ந்துகொள்வார். மாணவர்கள் தாங்கள் தனியாக எடுத்த குறிப்புக்களைக் கொண்டு இணையரோடு உரையாடுவார். ஒரே கருத்து அல்லது எதிர்கருத்து எழலாம். எக்கருத்து எழுந்தாலும் அதற்கான காரணத்தை அவர்கள் சொல்ல வேண்டும். இருவரும் சேர்ந்து ஒரே விடைக்கு தங்களை ஒருமுகப்படுத்துவர்.

நான்கு, சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் எல்லாரும் கூட்டப்பட்டவுன் ஒவ்வொரு குழுவும் தாங்கள் கண்டறிந்த விடையை பொதுவான வகுப்பில் அனைவரோடும் பகிர்ந்துகொள்வர். மாணவர்கள் பகிர்வதை கரும்பலகையில் யாராவது ஒருவர் எழுதி அட்டவணைப்படுத்தலாம். ஒரே கருத்து அல்லது எதிர் கருத்து என்றும் அட்டவணைப்படுத்தலாம். நேரம் குறைவாக இருந்தால், ஒரு குழு பகிர்ந்தவுடன் மற்ற குழுவினர் அதே கருத்தைக் கொண்டிருந்தால் கைகளை உயர்த்தச் சொல்லலாம். புதிய கருத்துக்களை மட்டும் பகிருமாறு சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக,

ஆறாம் வகுப்பு சமூக அறிவியில் பாடத்தில், முதல் பருவம் பாடநூலில், அலகு 4 எடுத்துக்கொள்வோம்.

'தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்' - இதுதான் அலகின் தலைப்பு.

கொடுக்கப்பட வேண்டிய கேள்வி: 'தமிழகத்தில் நகரங்கள் உருவானது எங்கு? ஏன்? எப்படி?'

இந்தக் கேள்வியின் பின்புலத்தில் மாணவர்கள் பாடப்புத்தகத்தின் இந்த அலகை தாங்களாகவே படிக்க வேண்டும். பின், தங்கள் இணையரோடு பகிர்தல் வேண்டும். பின் ஒட்டுமொத்த வகுப்போடு பகிர வேண்டும். இறுதியில், ஆசிரியர் பெட்டிச் செய்திகளின் பின்புலத்தில் பாடத்தின் சுருக்கத்தை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

இந்த முறையில் ஒவ்வொரு மாணவரும் பின்பற்ற வேண்டிய மாதிரியை கீழே உள்ள லிங்க்கில் தரவிரறக்கம் செய்துகொள்ளலாம்:




Saturday, May 23, 2020

நாளைய ஆசிரியர்

'ஸ்சீ தலைமுறை' ('Generation Z') என்னும் இன்றைய மற்றும் நாளைய மாணவர்களுக்கு கற்பித்தல் அல்லது அம்மாணவர்களோடு கற்றல் எவ்வாறு?

கல்வி மாறிக்கொண்டே இருக்கிறது. ஆக, கற்பித்தலும் கற்றலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பாரம்பரியமாக இருப்பதை மாற்றுவதே முதல் வழி. சாக்பீஸ் மற்றும் கரும்பலகையை மறந்துவிடுங்கள். நீங்களே பேசிக்கொண்டு மாணவர்களை மௌனமாக வைத்திருக்காதீர்கள். 

நீங்கள் மறக்கக் கூடாத ஒன்று: உங்களுடைய ஆர்வம்! ஆசிரியப் படிப்புக்காக சேர்ந்த அந்த நாளில் ஆர்வம் இறுதிவரை இருக்க வேண்டும்.

இத்தகைய ஆர்வம் கொண்ட ஆசிரியரின் 7 திறன்களை இன்று சிந்திப்போம்.

1. இடீச்சர் (eTeacher)

கல்வியின் எதிர்காலம் தொழில்நுட்பத்தோடு இணைந்தது. தொழில்நுட்பம் இல்லாமல், எண்ணியல் இல்லாமல் இவ்வுலகில் ஒன்றுமில்லை. வகுப்பறையையும் தாண்டிவிட்டது கல்வி. தொழில்நுட்பத்தை மறந்தால் நீங்கள் சீக்கிரம் மறக்கப்படுவீர்கள். ஆக, தொழில்நுட்பத்தை உங்கள் நண்பனாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று ஒரு வலைப்பக்கம், முகநூல் பக்கம், இன்ஸ்டாக்ராம், ஸ்னாப்சாட் என உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் யார் என்பதையும், உங்கள் எண்ணங்கள் என்ன என்பதையும் மாணவர்கள் உங்கள் பக்கங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்.

2. காகிதங்கள் வேண்டாம் (Go Paperless)

இன்று காகிதங்கள் இல்லாத அலுவலகங்கள் வேகமாக வளர்கின்றன. வங்கிகள் காகிதமற்ற பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கின்றன. காகிதக் கோப்புகள் சேகரித்து வைக்க முடியாததை இன்று க்ளவுட் மெமரி சேமித்து வைக்க முடியும். காகிதத்தில் சேமித்து வைத்ததை நாம் தேட முடியாததை, இப்போது வெறும், 'கன்ட்ரோல்-ப்ளஸ்-எஃப்' என உள்ளிட்டுத் தேடிவிட முடியும்.

3. நான் வளர்கிறேன் மம்மி! (Formative)

மாணவர்களின் வளர்ச்சியை அவர்களின் க்ரேட்களைக் கொண்டு மட்டும் கணக்கிட வேண்டாம். அவர்கள் உள்ளம் உருவாகிறதா என்று கவனியுங்கள். அதுவே அவசியம்!

4. நானும் மாணவரே! (Be a Lifetime Student)

ஒவ்வொரு ஆசிரியரும் தானும் ஒரு மாணவர் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்வதுபோல, நாமும் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. கூச்சப்படாமல் அவர்களிடம் கேட்கலாம். அல்லது அவர்களைப் போல நாமும் வௌ;வேறு ஊடகங்கள் வழியாகக் கற்கலாம்.

5. கவனம் (Suspicion)

எண்ணியல் ஊடகத்தைப் பயன்படுத்துவதில் இன்னும் அதிகக் கவனம் தேவை. நாம் பேசுவதும் எழுதுவதும் ஒரு நொடிக்குள் காப்பி செய்யப்பட்டு உலகெங்கும் சில நொடிகளில் பரவிவிட முடியும். மேலும், பாதுகாப்பற்ற, தனிநபர் உரிமை மீறல்கள் நடைபெறுகின்ற இடமும் செயலிகளே. எனவே, இவற்றை நாம் கவனமுடன் கையாளுவதோடு, இந்த ஊடகத்தின் நொறுங்குநிலையையும், உறுதியற்ற தன்மையையும் நாம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

6. கூட்டாற்றல் (Synergy)

ஒன்றும் ஒன்றும் மூன்று என்று சொல்லும் கூட்டாற்றல் அதிகமாகப் பேசப்படும் காலம் இது. ஆக, எனக்கு அடுத்திருக்கும் பள்ளியில் உள்ள ஆசிரியரிடமிருந்து அல்லது என் பள்ளியில் என் உடன் ஆசிரியரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள முடியும். இதற்குத் தேவை தாராள உள்ளமும் பரந்த மனமும். கொடுக்கல் வாங்கல் பணத்தில் அல்ல, அறிவில் இருக்க வேண்டும். அறிவு மட்டுமே கொடுத்தாலும் குறைவதில்லை.

7. ஊடாடும் கல்விமுறை (Interactive Learning)

மாணவர்களின் கவனமும், கூர்நோக்கும் திறனும் வேகமாகக் குறைந்து வரும் இக்காலத்தில் நாம் மாற்று கற்பித்தல் முறைகளை, குறிப்பாக, ஊடாடும் கற்பித்தல் முறையை, பிரம்மாஸ்திரம் போலக் கையில் எடுப்பது அவசியம்.

Friday, May 22, 2020

தலைமுறை அறிதல்

இந்தக் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது, வயதின் அடிப்படையில் நேரங்களை அரசு வகுத்திருந்தது. 'காலையில் தாத்தா, மதியம் அப்பா, மாலையில் மகன் - இதுதான் தலைமுறை இடைவெளி' என்ற ஒருவர் டுவிட்டரில் இதைக் கீச்சிட்டிருந்தார்.

நம் வகுப்பில் மாணவர்களோடு நாம் ஊடாடும் கற்பித்தல் முறையில் ஈடுபட வேண்டுமென்றால், மாணவர்களின் தலைமுறையை அறிதல் வேண்டும்.

சமூகவியல் ஆய்வாளர்கள் பிறப்பின் அடிப்படையில் மனித தலைமுறைகளை நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார்கள்:

(அ) 'பேபி பூமர் தலைமுறை' ('Baby Boomer Generation') (1946 - 1964)

1946 முதல் 1964 ஆண்டுக்குள் பிறந்த குழந்தைகள் இத்தலைமுறையைச் சார்ந்தவர்கள். இதற்கு முன்னால் பிறந்தவர்களும் இத்தலைமுறைக்குள் வருவர். இவர்கள் எதையும் மெதுவாகச் செய்ய எத்தனிப்பவர்கள். இவர்களைப் பொருத்துவரையில் வேகம் என்பது ஆபத்து. மெதுவாகக் கற்றல் சிறப்பு, நீண்ட கால உறவு சிறப்பு, நீண்ட காலம் வாழ்தல் சிறப்பு, மௌனம் சிறப்பு, ஆழமாகக் கற்றல் சிறப்பு என்று இவர்கள் நினைப்பார்கள். ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும், அதை நிறைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். இத்தலைமுறையில் பிறந்தவர் பெரிய விஞ்ஞானியாக இருப்பார். ஆனால், இரயில் நிலையத்தில் வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்ய இவருக்குத் தெரியாது. தன் துறையில் சிறப்புடன் இருப்பார். மற்ற எதைப் பற்றியும் துளியும் அறிந்திரார்.

(ஆ) 'எக்ஸ் தலைமுறை' ('Generation X') (1965 - 1980)

இவர்கள் 1965 முதல் 1980 ஆண்டுக்குள் பிறந்தவர்கள். இவர்கள் எப்போதும் எதையாவது செய்துகொண்டிருக்க வேண்டும் என நினைப்பவர்கள். நிறையச் செய்ய வேண்டும், நிறைய நபர்களைச் சந்திக்க வேண்டும், நிறைய பயணங்கள் செய்ய வேண்டும், நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள். ஆனால், இவர்கள் மற்றவர்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். கடாமுடா என்று பதில் சொல்வார்கள். அடுத்தவர்களை மட்டம் தட்டுவார்கள். ஏனெனில், தொழிற்புரட்சி வேகம் எடுத்து புதிய கண்டுபிடிப்புக்கள் வர ஆரம்பித்த காலத்தில் பிறந்தவர்கள். பழையவற்றுக்கும் புதியவற்றுக்கும் இடையே அலைக்கழிக்கப்படுபவர்கள்.

(இ) 'ஒய் தலைமுறை' (Generation Y') (1981 - 1996)

1981ஆம் ஆண்டுக்கும் 1996ஆம் ஆண்டுக்கும் இடையே பிறந்த இவர்கள் தொழில்நுட்பத்தோடு வளர்பவர்கள். கணிணியோடு பிறந்தவர்கள். ஏறக்குறைய எல்லா பெரிய கண்டுபிடிப்புக்களும் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டன. மற்ற கண்டுபிடிப்புக்கள் எல்லாம் முந்தைய கண்டுபிடிப்புக்களின் நீட்சியே. இவர்கள் படிப்போடு இணைத்து திறன்களும் வாழ்க்கைக்கு அவசியம் என்று உணர்ந்தவர்கள். இவர்கள் 'மில்லேனியல்' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஏனெனில், இவர்கள் இளவயது வரும்போது புதிய மில்லேனியம் பிறக்கின்றது. இவர்களுக்கு நிறைய விடயங்கள் தெரியும். ஆனால், எதுவும் ஆழமாகத் தெரியாது. மேலும், எதைப் பற்றியும் தெரியாது. ஆனால், எல்லாவற்றையும் எங்கே தெரிந்துகொள்ளலாம் என்பது தெரியும். எடுத்துக்காட்டாக, 'மொகஞ்சதொரோ நாகரீகம் என்றால் என்ன?' என்று கேளுங்கள். அவர்களுக்கு விடை தெரியாது. ஆனால், அந்த விடையை எங்கே காணலாம் என்பது அவர்களுக்குத் தெரியும். உடனடியாக, விக்கிபீடியாவில் தேடுவார்கள்.

(ஈ) 'ஸெட் தலைமுறை' ('Generation Z') (1997 - 2015)

இவர்கள் எண்ணியல் தலைமுறையினர். செயல்திறன் அலைபேசியுடன் பிறந்தவர்கள். இவர்களைப் பற்றி நன்றாக அறிந்துகொள்வோம். ஏனெனில், இவர்கள்தாம் இன்றைய நம் பள்ளி மாணவர்கள்.

1. குறைவான கூர்நோக்கு கொண்டவர்கள்

இவர்களின் கவனம் மிகக் குறைவு. அதிகமாக இவர்களால் 11 நிமிடங்களுக்கு மேல் எதையும் கவனிக்க முடியாது. மேலும், எதையும் கூர்ந்து நோக்க மாட்டார்கள். ஏனெனில் எதுவும் இவர்களுக்கு நிரந்தரமல்ல. எடுத்துக்காட்டாக, இன்று ஐஃபோனில் ஓ.எஸ் 12.1 இருக்கிறது என வைத்துக்கொள்வோம். நாளை அது 13.1 ஆக அப்டேட் ஆகிவிடும். ஆக, அவுட்டேட் ஆகும் எதையும் இவர்கள் கற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஒவ்வொரு நாளும் உலகம் மாறிக்கொண்டே இருப்பதால் இவர்களும் எதையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.

2. மல்டி டாஸ்கிங்

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் பெற்றவர்கள். ஏனெனில், இவர்களின் செயல்திறன்பேசிகளும் அப்படித்தான். ஃபோன் பேசிக்கொண்டே டெக்ஸ்ட் செய்யலாம். டெக்ஸ்ட் செய்து கொண்டே பாட்டு கேட்கலாம். பாட்டு கேட்டுக்கொண்டே புத்தகம் வாசிக்கலாம். புத்தகம் வாசித்துக்கொண்டே வாய்ஸ் ரெக்கார்ட் செய்யலாம். வகுப்பிலும் இவர்கள் பாடத்தைக் கேட்பதோடு வேறு எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள்.

3. சமரசம் செய்பவர்கள்

கடின உழைப்போடு சமரசம் செய்பவர்கள். கடினமாக உழைப்பதைவிட ஸ்மார்ட்டாக உழைப்பது எப்படி என்பதை அறிபவர்கள். 

4. இளவயது தொழிலதிபர்கள்

சிறிய வயதிலேயே யூட்யூப் சேனல் தொடங்கி பணம் சம்பாதிப்பவர்கள். விரைவாக வேலை செய்யத் தொடங்குவார்கள் இவர்கள். 

5. தன்மையம் கொண்டவர்கள்

இவர்களுடைய உலகத்தில் மூவர்தான் உயிர் வாழ்கின்றனர்: 'நான், எனது, எனக்கு'. இதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. வகுப்பில் ஒரு மாணவன் தண்ணீர் கொண்டு வராமல் வந்தால், தண்ணீர் வைத்திருக்கும் மாணவன் தண்ணீரைப் பகிர மாட்டான். 'மிஸ், இவன் தண்ணீர் பாட்டில் கொண்டு வரல!' என்று சொல்வான். தனக்கென வாழ்வதை ஒரு மதிப்பீடாகக் கொண்டவர்கள் இவர்கள்.

6. உலகம் சுற்றுபவர்கள்

இவர்கள் சிற்றூரில் பிறந்தவர்கள் என்றாலும் இவர்கள் உலகெல்லாம் சுற்றும் திறன் பெற்றவர்கள். மெய்நிகர் அளவிலும் நேரிடையாகவும் இவர்கள் உலகை வலம் வருபவர்கள். 

நிற்க.

இன்றைய நம் ஆசிரியர்கள் பெரும்பாலும் 'பேபி பூமர்,' 'எக்ஸ்,' மற்றும் 'ஒய்' தலைமுறைகளைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். நாம் கையாள வேண்டிய மாணவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். நம் தலைமுறையோடு எந்தவிதத்திலும் பொருந்தாதவர்கள்.

இவர்களைக் கையாள நாம் தலைமுறை கடந்து சிந்திக்க வேண்டும். இவர்களின் வார்த்தைகள் நம் வார்த்தைகளாக மாற வேண்டும்.

Thursday, May 21, 2020

ஊடாடும் கற்பித்தல் முறை

கல்வியலாளர்கள் (educationists) இன்று அதிகமாக, 'ஊடாடும் கற்பித்தல் முறை' ('interactive teaching') அல்லது 'இருவழித்தொடர்பு கற்பித்தல் முறை' ('two-way teaching') பற்றிப் பேசுகின்றனர்.

அது என்ன ஊடாடும் கற்பித்தல் முறை?

சில ஆண்டுகளுக்கு முன் வரை, கற்பித்தல் முறையை ஆங்கிலத்தில் 'பெடகஜி' ('pedagogy') என்று சொல்லப்பட்டது. 'பெடகஜி' என்ற வார்த்தை, 'பைஸ்' மற்றும் 'அகோ' என்னும் இரண்டு கிரேக்க வார்த்தைகளின் கூட்டு. 'பைஸ்' ('pais') அல்லது 'பைடோஸ்' ('paidos') என்றால் 'குழந்தை' அல்லது 'சிறுவன்' அல்லது 'இளவல்.' 'அகோ' ('ago') என்றால் 'வழிநடத்துதல்,' 'கற்பித்தல்,' அல்லது 'நடத்திச் செல்லுதல்.' ஆக, 'குழந்தையை வழிநடத்துதலுக்கு' 'பெடகஜி' என்று பொருள். இதுவே கற்பித்தலுக்கும் பொருள் ஆயிற்று. ஏனெனில், கற்பித்தலில், வயது முதிர்ந்த ஒருவர் குழந்தை ஒன்றை வழிநடத்துகிறார். 

இந்த முறைமையின் உட்பொருள் என்னவென்றால், வயது முதிர்ந்தவர் எல்லாம் அறிந்தவராகவும், குழந்தை ஒன்றும் அறியாததாகவும் இருக்கும். இந்த முறையில் வயது முதிர்ந்த ஆசிரியர், 'ஒன்று' என்ற நிலையிலும், மாணவர், 'பூஜ்யம்' என்ற நிலையில் இருப்பார். கற்றலின் இறுதியில் மாணவர், 'பூஜ்யம்' என்ற நிலையிலிருந்து, 'ஒன்று' என்ற நிலைக்கு உயர்வார். அல்லது ஆசிரியரின் கற்பித்தல், மாணவரை, பூஜ்யம் என்ற நிலையிலிருந்து ஒன்று என்ற நிலைக்கு உயர்த்தும்.

ஆனால்,

இப்போது வழங்கப்படுகின்ற கல்வி முறை 'ஆன்ட்ரகஜி' ('andragogy'). 'ஆன்ட்ரோஸ்' ('andros') என்றால் 'ஆண்' அல்லது 'வயது முதிர்ந்தவர்.' இந்த வகை கற்பித்தலில், ஆசிரியரும் மாணவரும் ஒரே தளத்தில் இருப்பர். இங்கே மாணவர் பூஜ்யம் அல்ல. இங்கே 'அறிவு பெற்ற நபர் ஒருவர்' (ஆசிரியர்), 'அறிவுபெற்ற இன்னொரு நபரோடு' (மாணவர்) இணைந்து கற்பார். ஆக, இங்கே ஆசிரியர் கற்பிப்பதில்லை. அவர், உடன்-கற்கிறார். இந்தத் தளத்தில், ஆசிரியர் தன் மாணவரை ஒன்றும் இல்லாதவராக நடத்துதல் இயலாது.

எடுத்துக்காட்டாக, வகுப்பு ஆசிரியர் சார்ட் பேப்பரில் வடிவம் உருவாக்குவதில் சிறந்தவராக இருந்தால், மாணவர் மைக்ரோஸாஃப்ட் பவர் பாயிண்ட்டில் (MS PowerPoint) வடிவம் உருவாக்குவதில் சிறந்தவராக இருப்பார். உருவாக்க வேண்டியது உருவம் தானே?

ஆசிரியர், ஒன்றும் ஒன்றும் கூட்டினால் இரண்டு என்பதை மனப்பாடம் செய்யச் சொல்வார். ஆனால், மாணவரோ, தன் செயல்திறன்பேசியில் (smartphone) இருக்கும் கணக்கி (calculator) செயலியைக் (app) கொண்டு, இரண்டு என்று சொல்வார். தெரிய வேண்டியது கூட்டுத்தொகை தானே?

இன்றைய கல்விமுறை 'சாக் அன்ட் டாக்' ('chalk-and-talk') முறையைக் குறைக்கச் சொல்கிறது. 'சாக் அன்ட் டாக்' முறையில், மாணவரை ஆசிரியர் ஒன்றும் இல்லாத கரும்பலகை என நினைத்து, அதில் மெய்நிகர் அளவில் தனக்குத் தெரிந்ததை எழுதுகிறார்.

சாக் அன்ட் டாக் முறைக்கு மாற்றாக இருப்பதுதான் 'ஊடாட கல்விமுறை.'

இந்த முறை,

'ஆசிரியருக்கும் - மாணவருக்கும்'

'மாணவருக்கும் - மாணவருக்கும்' 

- இடையே தொடர்பை ஏற்படுத்தி கற்றலை இனிமையாக்குகிறது. இவ்வகை முறையில், ஒலி அல்லது கேட்பொலி அல்லது ஒலிதம் (audio), காணொளி (video) போன்றவைகளும், நேரிடையான செயல்முறைப் பயிற்சிகளும் பயன்படுத்தப்படும்.

இப்படிப்பட்ட கற்றலில் மாணவர் மூளைசார் அறிவை மட்டும் பெறாமல், செயல்முறை அல்லது நடைமுறை அறிவையும் பெற்றுக்கொள்வோர். ஆக, முதலில் மூளையால் அறிந்து பின் அதைச் செயல்படுத்துவதை விட, ஊடாடக் கற்பித்தல்முறையில் அறிதலும் செயல்படுதலும் இணைந்தே செல்கின்றன.

Wednesday, May 20, 2020

வாழ்வின் முக்கியமானவை

என்னுடைய ஏழாம் வகுப்பில், வகுப்பாசிரியராக இருந்தவர் திரு. முருகேசன். காலையில் முதல் வகுப்பில் ஆங்கிலமும், மதியம் முதல் வகுப்பில் அறிவியலும் எடுப்பார். அவர் எங்கள் பள்ளிக்குப் புதிதாக வந்தவர். எங்களுடைய வகுப்புதான் அவருக்கு முதல் அனுபவம். அவருக்கு வயது ஏறக்குறைய 45 இருக்கும். புல்லட்டில் வருவார். நன்றாகப் புகைபிடிப்பார். புகைபிடித்துவிட்டு, ஒரு பாக்கு போட்டுவிட்டு வகுப்பிற்குள் வருவார். அவர் பிடித்த சாக்பீஸ் கூட புகையின் மணம் கொண்டிருக்கும். கடந்த சில ஆண்டுகளாக அவர் எங்கிருக்கிறார் என்பதைப் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மூன்று காரணங்களுக்காக இவரை எனக்குப் பிடிக்கும்:

(அ) அனைவரையும் சமமாக நடத்துதல்

என்னுடைய வகுப்பில் கதிரவன் என்ற மாணவன் இருந்தான். அவன் அன்று எங்கள் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராய் இருந்த திரு. வி.பி.இராசன் அவர்களின் அன்பு மகன். வி.பி.ஆர். கதிரவன் என்றுதான் தன்னுடைய புத்தகங்களில் எழுதியிருப்பான் கதிரவன். இன்று எந்த அரசியல்வாதியின் மகனும் அரசுப் பள்ளியில் படிப்பதில்லை என நினைக்கிறேன். கதிரவன் பகட்டில்லாத பையன். மதிய இடைவேளையில் நாங்கள் அடிக்கடி அவன் வீட்டுக்குச் செல்வோம். இவனுக்கும் முருகேசன் ஸாருக்கும் என்ன தொடர்பு? முருகேசன் ஸார் வகுப்பில் உள்ள அனைவரையும் சமமாக நடத்துபவர். அவர் யாரிடமும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை.

(ஆ) தேவை அறிபவர்

நான் ஒருமுறை மதிய உணவில் புழு இருந்ததால் அதைச் சாப்பிட முடியாமல் கீழே கொட்டிவிட்டேன். அன்று மதியம் முதல் வகுப்பில் - முருகேசன் ஸார் வகுப்பில் - மயங்கி விழுந்துவிட்டேன். காரணம் கேட்ட அவர், அன்றிலிருந்து அடுத்த ஆண்டின் இறுதிவரை எனக்காக அவருடைய வீட்டிலிருந்து மதிய உணவு சுமந்து வந்தார். மாணவர்களின் கால்களுக்குச் செருப்பணிவித்து, புதிய பேனாக்களை பரிசளித்து அழகுபார்த்தவர். ஒவ்வொரு மாணவனின் தேவையை எளிதாக அறிந்து, அதை நிறைவேற்றுபவர் இவர்.

(இ) ஒருவன் என்னவாக இருக்கிறான் என்பது அல்ல, அவன் என்னவாக மாற முடியும் என்பதே முக்கியம்

ஒரு மாணவனின் சாதி, மதம், மொழி, குடும்ப பின்புலம் ஆகியவை அவன் என்னவாக இருக்கிறான் என்பதைக் காட்டுகின்றன. ஆனால், அவன் என்னவாக மாறப் போகிறான் என்பது இவற்றில் அடங்குவதில்லை. அது இவை அனைத்தையும் கடந்தது. ஆக, இருப்பதை விடுத்து, மாற்றத்தை மையமாக வைத்து அனைவரையும் நடத்துபவர் இவர்.

இவருடைய வாழ்வியல் கொள்கை மிகவும் எளிதானது:
'நம் வாழ்வின் முக்கியமானவை நமக்கு வெளியில் இருப்பதில் அல்ல, மாறாக, நமக்கு உள்ளே இருப்பதில்தான்!'

வெளியில் புகை பிடித்துக்கொண்ட அந்த மனிதர் உள்ளே எந்தவித நெருப்பும் இல்லாமல் இருந்தார்.

ஏனெனில், அவருக்குத் தெரியும் வாழ்வின் அழகு நமக்கு வெளியில் அல்ல, நமக்கு உள்ளே என்று.


Tuesday, May 19, 2020

பாராட்டுதல் சிறப்பு

ஐந்தாம் வகுப்பு வரை நான் என்னுடைய குக்கிராமத்தில் (ஜமீன் நத்தம்பட்டி) கல்வி பயின்றேன். ஆறாம் வகுப்பிற்காக எங்கள் ஊரிலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள சத்திரப்பட்டி அரசினர் மேனிலைப்பள்ளியில் சேர்ந்தேன். ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியையாகவும், வகுப்பாசிரியையாகவும் எனக்கு வந்த திருமதி. பழனியம்மாள் டீச்சர். முதல் வகுப்பிலேயே, பாராட்டுதலின் அவசியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். அதாவது, மணி அடித்து ஆசிரியை வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், எழுந்து நின்று, 'குட்மார்னிங் டீச்சர்! ஹவ் ஆர் யூ?' எனக் கேட்க வேண்டும். அவர், 'குட்மார்னிங் டார்லிங்ஸ்! ஐ ஆம் ஃபைன். ஹவ் ஆர் யூ?' எனத் திரும்பக் கேட்பார். அத்தோடு முடிந்துவிடாது. 'வீ ஆர் ஃபைன்' என்று சொல்லி முடிக்கும் நேரம் அவர் தன்னுடைய இருக்கைக்கு வந்துவிடுவார். வந்தவுடன், நாங்கள் ஒருவர் மற்றவரிடம் திரும்பிப் பார்த்து, அந்த மாணவர் அல்லது மாணவியிடம் நாங்கள் காணும் நல்லது ஒன்றைப் பாராட்ட வேண்டும்: 'உன் தலைமுடி நேர்த்தியாக இருக்கிறது!' 'நீ நன்றாக சடை பின்னியுள்ளாய்' 'நீ அழகாக சிரிக்கிறாய்!' 'உன் புத்தகப்பை சுத்தமாக இருக்கிறது!' 'நீ நகங்களை வெட்டியுள்ளாய்!' 'உன் நெற்றியின் திருநீறு உனக்கு எடுப்பாக இருக்கிறது!' 'நீ புத்தகத்திற்கு நன்றாக அட்டை போட்டுள்ளாய்!' இப்படி எதையாவது நாங்கள் சொல்லிப் பாராட்ட வேண்டும். அந்த வயதில் இது விளையாட்டாக இருந்தாலும், இன்று எண்ணிப்பார்க்கும்போது அந்த ஆசிரியையின் இந்த அற்புதமான குணம் என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது.

உளவியலில் 'உரையாடல் பகுப்பாய்வு' ('transactional analysis') என்ற ஒரு பிரிவு உண்டு. அந்த உளவியலில், பாஸிட்டிவ் ஸ்ட்ரோக் ('positive stroke') அதிகமாக வலியுறுத்தப்பட வேண்டும். அதாவது, நேர்முகமாக ஒரு குணத்தைச் சொல்லிப் பாராட்டுவது. நிறைய பாஸிட்டிவ் ஸ்ட்ரோக் கொடுக்கும்போது, அது கொடுப்பவரின் மனத்தையும் நேர்முகமாக்குகிறது. பாராட்டப்படுபவரின் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி கொடுக்கிறது.

வகுப்பறையில் ஆசிரியர் மாணவ, மாணவியரைப் பாராட்டுதல் சால்பு.

பாராட்டுதல் (praise or appreciation) எப்படி வரும்?

நிறைந்த மனம் (abundance mindset) கொண்டவர்கள் மட்டும்தான் அடுத்தவர்களைப் பாராட்ட முடியும். ஒரு வெள்ளைத் தாளில் ஒரு கறுப்பு புள்ளி இருப்பதைப் பார்ப்பவர்களால் பிறரைப் பாராட்ட முடியாது. அந்தக் கறுப்பு புள்ளி தவிர்த்து முழு வெள்ளையையும் பார்ப்பதுதான் நிறைந்த மனம் அல்லது நிறைவு மனம். அதிலிருந்து பாராட்டுதல் இயல்பாக வரும்.

ஆசிரியர்கள் மாணவர்களை மூன்று நிலைகளில் பாராட்டலாம்:

அ. தனிநபர் (personal) பாராட்டு

'உன் குரல் இனிமையாக இருக்கிறது!' 'உன் கண்கள் அழகாக இருக்கின்றன!' 'நீ வாசிக்கும்போது உன் குரல் அழகாக இருக்கிறது!' - இப்படி ஒருவரின் தனிநபர் பண்புகளை, குணங்களை, இயல்புகளைப் பாராட்டுவது.

ஆ. செயல் அல்லது முயற்சிசார் (effort-based) பாராட்டு

'நீ இன்று நன்றாகப் பாடினாய்!' 'நீ நன்றாக உரையாற்றினாய்!' 'நீ ஓட்டப் பந்தயத்தில் நன்றாக ஓடினாய்' 'நீ கவிதை நன்றாக எழுதினாய்' - இப்படியாக ஒரு மாணவர் செய்த செயல்கள் அல்லது அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவது.

இ. நடத்தைசார் (behaviour-based) பாராட்டு

'நீ இன்று சரியான நேரத்திற்கு வந்தாய்!' 'நீ உண்மை பேசுகிறாய்!' 'நீ தூய்மையாக இருக்கிறாய்!' - இப்படி ஒருவரின் நடத்தையை அல்லது செயல்பாட்டைப் பாராட்டுவது.

இப்பாராட்டு எப்படி இருக்க வேண்டும்?

அ. குறிப்பிட்டதாக இருக்க வேண்டும் (be specific)

'நீ அமைதியாக இருக்கிறாய்!' என்று சொல்லக் கூடாது. மாறாக, 'நீ பாடம் நடத்தும்போது அமைதியாக இருக்கிறாய்' எனக் குறிப்பிட்டுச் சொல்வது. 'நீ உண்மையானவன்' என்பது பொதுவானது. ஆனால், 'நீ தேர்வில் உண்மையாக இருக்கிறாய்' என்று குறிப்பிட்டுச் சொல்வது.

ஆ. விளைவை அல்ல, செயல்முறையை மையப்படுத்தி இருக்க வேண்டும் (concentrate on the process, not on the result)

'நீ 100 மதிப்பெண் வாங்கியுள்ளாய்' என்று பாராட்டுவதை விட, 'நீ 100 மதிப்பெண் வாங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறாய்' என்று அந்த மாணவன் படிக்கும்போதே பாராட்ட வேண்டும்.

இ. நேர்மையாக இருக்க வேண்டும் (be honest)

நாம் உண்மையாகப் பாரட்டுகிறோமா அல்லது போலியாகப் பாராட்டுகிறோமா அல்லது ஏமாற்றுகிறோமா என்பதைக் குழந்தைகள் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆக, பாராட்டுபவர் நேர்மையாக இருத்தல் அவசியம்.

ஈ. ஒப்பீடு தவிர்க்க வேண்டும் (avoid comparison)

'நீ அவனைப் போல 100 மதிப்பெண் வாங்கியுள்ளாய்' 'நீ அவனைப் போல சுத்தமான சீருடை அணிந்துள்ளாய்' என்று சொல்தல் கூடாது. 

உ. பலர்முன் பாராட்ட வேண்டும் (appreciate in front of others)

'குறைகளை எங்களிடம் சொல்லுங்கள். நிறைகளை நண்பர்களிடம் சொல்லுங்கள்' என்று ஓட்டலில் எழுதியிருப்பார்கள். மாணவர்களின் குறைகளைத் தனிப்பட்ட விதத்திலும், நிறைகளை பலர்முன்னும் பாராட்ட வேண்டும். எனக்கு எட்டாம் வகுப்பு எடுத்த செல்வி. தேவி டீச்சர் அவர்கள் தன் கணித வகுப்பில் ஃபெயில் ஆன மாணவ, மாணவியரின் விடைத்தாளை, மறைத்து அவர்களுக்கு மட்டும் தெரியுமாறு கொடுப்பார். இவ்வாறாக, பாடத்தில் தவறிய மாணவ, மாணவியரின் தன்மதிப்பைக் காயப்படுத்தாத இனியவர் அவர். ஆக, குறைகளைத் தனியாகவும், நிறைகளை எல்லார் முன்னும் பாராட்ட வேண்டும்.

ஊ. மிகைப்படுத்துதல் கூடாது (don't exaggerate)

'உன் ஆடை சுத்தமாக இருக்கிறது!' என்று சொன்னால் போதும். அதை விட்டு, விஜய் டிவியில் அள்ளி இறைப்பது போல, 'வா...வ்! சான்ஸே இல்ல! பின்னீட்டிங்க! சூப்பர்! அமேஸிங் ... டேஸ்லிங் ஒயிட்!' என்று மிகைப்படுத்துதல் கூடாது.

இதை வாசிக்கும் உங்களுக்குப் பாராட்டுக்கள்! ஏனெனில், நீங்கள் உங்கள் நேரத்தையும், ஆற்றலையும், இணைய இணைப்பையும் இதற்காக செலவழித்தீர்கள்.



Monday, May 18, 2020

போரடிக்கும் டீச்சர்


'என் அன்புக்குரிய போரடிக்கும் டீச்சர்,


வகுப்பறையில் உங்களது இடது புறத்தின், கடைசி பெஞ்சின் மூலையில் உட்கார்ந்திருக்கும் மாணவி நான். மற்ற மாணவியர் போல அறிவை புத்தகங்களில் தேட நான் விரும்பாததால், எனக்குரிய வியப்பு உலகத்தில், ஜன்னலுக்கு வெளியே நான் தேட விரும்புவதால் இந்த இடத்தைத் தேர்வு செய்தேன். இந்த இடத்திலிருந்து வகுப்பறையின் கரும்பலகையை விட, ஜன்னலின் வழியே சாலைகள் நன்றாகத் தெரியும். உலகம் என்ற அந்த உன்னதமான இடத்தை நான் இங்கிருந்து தரிசிக்கிறேன். அங்கே சென்று, அதை ஆராயவும், அதனோடு விளையாடவும் நான் விரும்புகிறேன்.

நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களுக்கு, 'ஆம்' 'இல்லை' என்று தலையாட்டிக்கொண்டு இங்கே அமர்வது எனக்குப் பிடிக்கவில்லை. நான் மக்கு என நீங்கள் நினைக்கலாம். ஆனால், எனக்கு நிறைய படைப்பாற்றல் உண்டு.

நீங்கள் போரடிக்காமல் வகுப்பெடுக்க நான் உங்களுக்குச் சில ஆலோசனைகள் வழங்குவீர்களா! நாற்பத்தைந்து நிமிடங்கள் நான் நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன். இன்று நான்கு நிமிடங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள்!

என்னை உங்களுக்குத் தெரியுமா?

என்னை உங்களுக்குத் தெரியுமா? ஃபேஸ்புக்கில் எனக்கு 2000 நண்பர்கள் உண்டு. 

வகுப்பில் மவுஸ் போல அமர்ந்திருக்கும் சமூக வலைதளங்களில் மவுஸ் பிடித்து விளையாடுவதில் கில்லாடி. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ம்யூஸிக்கலி என்று நான் கலக்காத இடமே கிடையாது. சமூக வலைதளங்கள் கொண்டு, இணையதள செயலிகள் கொண்டு வகுப்பெடுக்க நான் உங்களுக்குக் கற்றுத்தரவா? சாக்பீஸ் தூக்கி எறிந்து மவுஸ் பிடியுங்கள்.

என்னை உங்களுக்குத் தெரியுமா? போன வாரம் என் பெற்றோருக்கு விவாகரத்து ஆயிற்று. 

இப்போது நான் என் தாத்தா-பாட்டியோடு தூங்குகிறேன். அம்மாவுடன் போகவும் எனக்கு விருப்பமில்லை. அப்பாவுடன் போகவும் எனக்கு விருப்பமில்லை. அம்மாவையும் அப்பாவையும் விட்டுப் பிரிந்திருப்பது எவ்வளவு கொடிது என்பதை என் கண்களின் கண்ணீர்த்துளிகள் சொல்கின்றன. நான் வகுப்பறைக்கு வெளியே பார்த்துக்கொண்டே இருக்கிறேன் என சாடுகிறீர்கள். நான் வேடிக்கை பார்க்க அல்ல, என் கண்ணீரை மற்றவரிடமிருந்து மறைக்கவே வெளியே திரும்பிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒருநாள் விடுமுறை கொடுங்கள். என் அம்மா, அப்பாவை இணைத்து வைக்க நான் முயல்வேன். உங்களின் வகுப்பு கற்றுத்தராததை என் ஒப்புரவுச் செயல் எனக்குக் கற்றுத்தரும்.

என்னை உங்களுக்குத் தெரியுமா? விளையாட்டு மைதானத்தில் தனியே நின்றுகொண்டிருப்பவள் நான்.

சில மாதங்களுக்கு முன் என்னைக் கேலி செய்த என் சக மாணவ, மாணவியர் என்னை விரட்டி வர, நான் செம்மண் மைதானத்தில் விழுந்து என் கைகளையும், கால்களையும் சிராய்த்துக்கொண்டேன். என் ஷூ பிய்ந்துபோய், என் ஸாக்ஸூம் கிழிந்தது. எனக்கு என்ன நடந்தது என்று கேட்க வீட்டில் என் பெற்றோர் இல்லை. என்னை ஏன் மற்றவர்கள் கேலி செய்கிறார்கள்? என்னிடம் என்ன குறை இருக்கிறது? நான் அவர்களோடு எதிர்த்துச் சண்டையிட வேண்டுமா? அல்லது உங்களிடம் வந்து நான் பேசவா? என் பிரச்சினையை நீங்கள் தீர்த்து வைப்பீர்களா? அடுத்தவர்கள் கேலி செய்யும்போது சிரித்துக்கொண்டே அவர்களை எதிர்ப்பது எப்படி என நீங்கள் கற்றுத் தாருங்கள். ஐன்ஸ்டீனின் பாடம் காத்திருக்கட்டும்.

என்னை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் வகுப்பிற்குத் தாமதமாக வரும் ஒவ்வொரு நாளும் முகம் சுளிப்பது நான்தான்.

ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் தாமதமாகவே நீங்கள் வகுப்பிற்கு வருகிறீர்கள். எங்கள் வகுப்பிற்கு வருவதைவிட முக்கியமான வேலை உங்களுக்கு ஆசிரியர் அறையில் இருக்கிறதா? உங்கள் தோழியிடம் நீங்கள் பின்னர் பேசக் கூடாதா? உங்கள் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளுக்குப் பின்னர் பதில் தரக்கூடாதா? எங்களுக்கு நீங்கள் தரும் மதிப்பு இவ்வளவுதானா! நாங்கள் குழந்தைகளாக இருப்பதால் எங்களை நீங்கள் மதிப்பதில்லையா? பள்ளியின் முதல்வர் அழைக்கும் கூட்டத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னால் செல்லும் நீங்கள், வகுப்பறைக்கு 10 நிமிடங்கள் பின்னால் வருவதேன்?

என்னை உங்களுக்குத் தெரியுமா? வகுப்பறையில் விளையாடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

விளையாட்டின் வழியாக நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை என் தாத்தா-பாட்டி ஞாயிறு விடுமுறையில் எனக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர். புத்தகத்தின் முகத்தையும், உங்கள் முகத்தையும் பார்த்துப் பழகிப்போன எங்களுக்கு, ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்த்து பாடம் கற்க உதவுங்கள்.

என்னை உங்களுக்குத் தெரியுமா? என் திறன்கள், திறமைகள் எனக்கு முழுமையாகத் தெரியாது.

வெறும் மதிப்பெண்களை வைத்து என்னை மதிப்பிடுவது எனக்குப் பிடிப்பதில்லை. நான் வாங்கும் ஏ அல்லது ஏப்ளஸ்தான் நானா? எண்களைத் தாண்டி என்னிடம் ஒன்று இல்லையா? யானைக்கும் குரங்குக்கும் ஒரே மரம் ஏறுதல் போட்டியை வைத்து, குரங்கு வென்றுவிட்டது என்று சொல்கிறீர்களே? இது தவறு இல்லையா? ஆனால், யானை ஒரு மிதி மிதித்தால் மரம் உடைந்துவிடும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என் மதிப்பெண்களை எனக்குக் காட்டுவதைவிட, என் மதிப்பு என்ன என்பதை எனக்குக் காட்டுங்கள்.

என்னை உங்களுக்குத் தெரியுமா? ஒரே மாதிரியான எடுத்துக்காட்டுக்களையே நீங்கள் கொடுக்கிறீர்கள்.

நீங்கள் கல்லூரியில் அறிவியில் கற்றதற்கும், பி.எட் கற்றதற்கும் இன்றைக்கும் இடையே நிறைய ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள். அன்றாடம் உங்களையே நீங்கள் அறிவிலும் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

இப்போது என்னை உங்களுக்குத் தெரியும்!

ஒரு மாணவியை மாணவி நிலையில் புரிந்துகொள்வதற்கான எனது சிறிய பரிந்துரை இது. நான் உங்களை விமர்சனம் செய்யவில்லை. உங்களுக்கு ஆலோசனை சொல்லும் வயது எனக்கில்லை. நீங்கள் ஓர் இனிய ஆசிரியர். கற்பித்தலை கற்கண்டாக்க நான் காணும் சில வழிகள் இவை.

நன்றி.

அன்புடன்,

கடைசிப் பெஞ்சு மாணவி'
______
தழுவல்: ரூபன் நாபென், Dear boring teacher - 7 things you need to know about your students to be a better teacher, from book widgets.com, accessed on 18 May 2020.

Sunday, May 17, 2020

ஆசிரியர்களுக்கு அர்ப்பணம்


இந்த புதிய வலைப்பூ (blog) வழியாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.


'இனி கற்றல் சுகமே!' என்ற பதாகையுடன் (banner) வலம் வரும் இந்த வலைப்பூவை அனைத்து பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு அர்ப்பணிக்கிறேன். என் மாணவப் பருவத்தில் நான் என் ஆசிரியர்களிடம் கற்றவற்றையும், பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று நான் ஆசிரியர்களுக்குப் பயிற்றுவித்த கருத்தமர்வுகளையும், நான் இப்போது ஆசிரியராக இருந்து கற்றுக்கொள்ளும் அனைத்தையும் என் சக ஆசிரியர்களுக்குப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

ஆசிரியர் பணி.

இந்தப் பணியில் நான் மிகவும் சிறப்பாகக் கருதுவது என்ன தெரியுமா?

இந்தப் பணியில் மட்டும்தான், எனக்கு வயது ஆனாலும், என்னால் பயன்பெறுகிறவர்களுக்கு வயதே ஆகாது. அல்லது, இந்தப் பணியில் மட்டும்தான் நான் பழகும் நபருக்கு ஒரே வயது இருக்கும்.

எப்படி?

இன்று எனக்கு வயது 40. நான் பள்ளியில் முதல் வகுப்பு எடுக்கிறேன். அதில் உள்ள குழந்தைகளின் வயது சராசரியாக 5. எனக்கு 50 வயது ஆனாலும் என் முதல் வகுப்பின் குழந்தைகளுக்கு வயது 5 ஆகத்தான் இருக்கும். ஆக, என் மனம் என்றும் இளமையாக இருக்கும் அக்குழந்தைகளால்.

தண்ணீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H2O என்றால், ஆசிரியரின் மூலக்கூறு வாய்ப்பாடு H3O:

H - Head (தலை) - ஆசிரியர் தன் பாடத்திலும் மற்றவற்றிலும் பெற்றிருக்கும் அறிவு (knowledge)
H - Heart(இதயம்) - ஆசிரியர் தன் உணர்வுகளையும், தன் மாணவர்களின் உணர்வுகளையும் பற்றிக் கொண்டிருக்கும் புரிதல் (empathy)
H - Hands (கைகள்) - ஆசிரியர் கொண்டிருக்கும் திறன்கள் (skills)

இவை மூன்றும் இணைந்தால் 'O' (Optimum).

இந்த மூன்றையும் இணைப்பதற்கு மூன்று ஃபார்முலா.

அ. பணிசார் வாழ்விற்கு (professional life): 80-20 Principle. இதை ஆங்கிலத்தில் பரோட்டோ கொள்கை என்பர். இதை உருவாக்கியவர் இத்தாலிய பொருளாதார நிபுணர் பரேட்டோ. நம்ம ஃபோன்ல 100 தொடர்பு எண்கள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். இவற்றில் வெறும் 20 எண்களை நாம் 80 சதவிகதம் தொடர்பு கொள்வோம். மற்ற 80 எண்களை வெறும் 20 சதவிகிதம்தான் தொடர்பு கொள்வோம். ஆக, அந்த 20 எண்களின் தொடர்பை நாம் மேன்மைப்படுத்தினாலே 80 சதவிகித மேன்மையை அடைந்துவிட முடியும். ஆக, வகுப்பில் மிகக் குறைந்த, ஆனால் முக்கியமானவற்றைப் பயன்படுத்தி, அது 20 சதவிகிதமாக இருந்தாலும், 80 சதவிகித மேன்மையை நான் அடைய வேண்டும்.

ஆ. தனிநபர் வாழ்விற்கு (personal life): 90-10 Principle. இதை வகுத்தவர் கோவே. நம்ம வாழ்க்கையில் நடக்கும் 90 சதவிகத விடயங்கள் நம் கையை மீறுபவை. அவற்றை நம் கட்டுக்குள் நாம் வைக்க முடியாது. வெறும் 10 சதவிகிதம்தான் நம் கைக்குள் அடங்குபவை. கட்டுக்குள் வைக்க இயலாதவற்றைப் பொருட்படுத்தாமல், கட்டுக்குள் அடங்குவதன்மேல் கவனம் செலுத்துவது. வகுப்பறைக்கு வருகிறோம். வந்தவுடன் மின்சாரம் போய்விடுகிறது. நம்மால் கணிணி அல்லது ஒளி வீச்சி பயன்படுத்த முடிவதில்லை. மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பத்து பேர் வரவில்லை. சிலர் புத்தகம் கொண்டுவரவில்லை. பக்கத்து கல்யாண மண்டபத்தில் பாடல் போட்டிருக்கிறார்கள். எங்கும் சப்தமாக இருக்கிறது. இவை எதையும் நாம் கட்டுக்குள் வைக்க முடியாது. ஆனால், என் பாடத்தை, நான் நடத்தும் விதத்தை கட்டுக்குள் வைக்க முடியும். ஆக, கட்டுக்குள் வைக்க இயலாதவற்றை விடுத்து, என் கட்டுக்குள் உள்ளதன்மேல் நான் கவனம் செலுத்த வேண்டும்.

இ. உறவுசார் வாழ்விற்கு (relational life): 4-1 Principle. என் மாணவர்களை நான் திருத்தும்போது, அவர்களைக் கண்டிக்கும்போது, அவர்களின் 1 குறையைக் காட்டுவதற்கு முன், அவர்களிடமிருக்கும் 4 நிறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். மாணவி ஒருத்தி தாமதமாக வருகிறாள் என வைத்துக்கொள்வோம். 'ஏன் லேட்டு? வெளியே போ!' என்று கண்டிப்பதற்கு முன் நான் என்ன செய்ய வேண்டும்? 'வாமா!' வாழ்த்துக்கள். பரவாயில்லையே தாமதமானாலும் பள்ளிக்கு வந்துவிட்டாயே! சீருடை சுத்தமாக இருக்கிறதே! நன்றாக தலை சீவியிருக்கிறாயே! அழகாக சிரிக்கிறாயே! என்று சொல்லிவிட்டு, 'ஆனா! கொஞ்சம் சீக்கிரமா வந்துடுமா!' என்று சொன்னால் அவள் இனி தாமதமாகவே வர மாட்டாள். இப்படிச் செய்வதால் நம்முடைய நேர்முகப் பார்வையும் கூடும்.

இந்த ஃபார்முலா தெளிவானால், என் ஆசிரியப் பணியை நான் முழுமையாகச் செய்ய முடியும்.